For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி நடுவர் மன்றம் அமைய திமுக எடுத்த நடவடிக்கைதான் காரணம் - கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நடுவர் மன்றம் அமைக்க திமுக எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் காரணம் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1989-இல் திமுக அரசு 3-வது முறையாகப் பொறுப்பேற்றவுடன் காவிரி நடுவர் மன்றம் அமைக்க முற்பட்ட போது கர்நாடக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. எனினும் கர்நாடக மாநில ஆளுநரோடு 8-8-1989 அன்று பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததையொட்டி, அந்தப் பேச்சுவார்த்தையில் அப்போது சுமுகமான முடிவு காண முடியாவிட்டால் உடனடியாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் 27-7-1989 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 Dmk taken more action to cauvery water management bord

8-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கடிதம் மூலம் கவர்னர் ஒப்புக்கொண்ட நிலையில், திடீரென்று கர்நாடக கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினால்தான் பயனுள்ளதாக இருக்குமென்று கடிதம் மூலமும் ஏடுகள் மூலமும் தெரிவித்து விட்டார். இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்று வி.பி. சிங் பிரதமராக 2-12-1989ல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திமுக அரசின் சார்பில் பிரதமர் வி.பி. சிங், நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கடிதம் எழுதினேன். அதனை யொட்டி டெல்லியில் மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சர் கூட்டியிருந்த காவேரி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் நான் உரையாற்றியபோது, "1968-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திலே நான் பொதுப் பணித் துறை அமைச்சராகவும், வீரேந்திர பட்டீல் முதல் அமைச்சராகவும் இருந்து தொடங்கிய பேச்சுவார்த்தை கடந்த 22 ஆண்டுகளில் அதே பிரச்சினைக்காக 24 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த பிறகு, 25-வது தடவையாகப் பேச்சு வார்த்தை நான் முதல்வராகவும், வீரேந்திர பட்டீல் முதல்வராகவும் இருந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது" என்று காவிரிப் பிரச்சினையில் ஏற்பட்டு வந்த தாமதத்தைச் சுட்டிக்காட்டினேன்.

அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தையிலே முடிவு வராததால், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் வி.பி. சிங்கை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த மனுவினை அளிக்க சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக் கொண்ட போதிலும், கடைசி நேரத்தில் வர மறுத்து அவர்கள் தனியாகச் சென்று ஒரு மனுவினை பிரதமரிடம் அளித்தார்கள். ஆனால் அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவது போல 1924-ஆம் ஆண்டின் காவேரி ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது என்பதாகும். அதனை ஏடுகளில் படித்துவிட்டு தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அ.தி.மு.க.வைக் கண்டித்தனர்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தின் சார்பில் ரெங்கநாதன் உச்சநீதி மன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணை வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தினை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டது. உடனே பிரதமர் வி.பி. சிங் என்னைத் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் என்ன தெரிவிக்கலாம் என்று கேட்டார்.

இனிமேல் நாங்கள் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இல்லை, இதைத் தெளிவாக்கி விடுங்கள், அப்போதுதான் எங்களுக்கு நடுவர் மன்றம் கிடைக்குமென்றேன். அதனையொட்டி உடனடியாக 24-4-1990 அன்று சட்டப் பேரவையில் தீர்மானத்தையும் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி வைத்தோம். அது மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இனி பேச்சுவார்த்தை இல்லையென்றால் நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிடுகிறோம் என்று அப்போதுதான் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க தி.மு. க எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்தான் இவை அனைத்தும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief karunanidhi has said, Dmk taken more action to cauvery water management bord
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X