For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வசதிக்காக கடும் வெயிலில் கூட்டம்.. 2 பேர் மரணம்.. நீதி விசாரணை தேவை: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா ஆட்சியிலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. அப்பாவி மக்கள் இருவரின் உயிரிழப்புக்கும், மேலும் 7 பேரின் உடல்நிலை பாதிப்புக்கும் முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும், வெயிலில் மயங்கியும் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த செய்திகளை அறிந்து பேரதிர்ச்சியும், வருத்தமும், தாங்க முடியாத வேதனையும் அடைந்தேன்.

Dr Ramadoss asks Judicial probe into the death of 2 ADMK cadres

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாசலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அழைத்து வரப்பட்டிருந்தனர். மாலை 3.00 மணிக்கு ஜெயலலிதா பேசிய நிலையில், காலை 11.00 மணிக்கே பொதுமக்கள் வரவழைக்கப்பட்டு சுட்டெரிக்கும் வெயிலில் அமரவைக்கப்பட்டனர்.

மாலை 4.00 மணிக்கு பேச்சை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து வெளியேறும் வரை இயற்கை அழைப்புக்கு கூட மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு செல்ல முயன்றவர்களை அதிமுகவினர் மிரட்டி அமர வைத்தனர். இதனால் ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்த போதே வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலர் மயங்கி விழுந்தனர். இது குறித்த செய்தி பரவியதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முயன்றதால் மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி மேலும் பலர் மயக்கமடைந்தனர்; பலர் காயமடைந்தனர்.

மயங்கி விழுந்த மக்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு இவ்விஷயம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அ.தி.மு.க.வினரும், காவல்துறையினரும் தாமதப்படுத்தினார்கள். இதனால் மயங்கி விழுந்த 19 பேரில் 9 பேரின் நிலைமை மோசமடைந்தது.

அவர்களில் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்த கருணாகரன் டேவிட், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அப்பாவி மக்கள் இருவரின் உயிரிழப்புக்கும், மேலும் 7 பேரின் உடல்நிலை பாதிப்புக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தான் பொறுப்பேற்க வேண்டும். 100 டிகிரிக்கும் அதிகமான வெயிலில் சிறிது நேரம் நின்றாலே வலிமையானவர்கள் கூட மயங்கி விழுந்து விடுவார்கள். இந்த உண்மை தெரிந்திருந்தும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், பெண்கள் என பலரையும் 5 மணி நேரம் கொளுத்தும் வெயிலில் அமர்த்தி அதிமுகவினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

வெயில் தாங்க முடியாமல் வெளியேற முயன்ற போது, ‘‘300 ரூபாயும், பிரியாணியும் வாங்கி விட்டு பாதியில் செல்வீர்களா? கூட்டம் முடியும் வரை நகரக்கூடாது''என அதிமுகவினர் மிரட்டியுள்ளனர். இதை காவல்துறை வேடிக்கைப் பார்த்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் பெரும்பாலும் மாலையில் வெயில் தணிந்த பிறகே நடைபெறுகிறது. குறிப்பாக பொதுக்கூட்டங்கள் இரவில் தான் நடக்கும். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வசதிக்காக பிற்பகல் 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்துவதும், அதற்காக பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட மக்களை விலங்குகளைப் போல பொதுக்கூட்டம் நடக்கும் திடலில் அடைத்து வைப்பதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் ஆகும்.

ஜெயலலிதா ஆட்சியிலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் மனித உரிமைகள் மீறப்படுவது சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின் போது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அந்த செய்தி ஜெயலலிதாவுக்கு தெரிந்தால் அபசகுனமாகி விடும் என்பதால், ஜெயலலிதா பிரச்சாரத்தை முடித்து விட்டு புறப்படும் வரை அவருக்கு சிகிச்சை தராமல் தாமதித்தனர். இதனால் அவர் உயிரிழந்தார். அதேபோன்ற நிகழ்வு தான் இப்போதும் அரங்கேறி இருவர் உயிரிழந்துள்ளனர். மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் ஜெயலலிதாவும், அவரது அரசும் எப்படி மதிக்கின்றனர் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையும், அவரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இதற்கு காரணம் ஆகும். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடுமையான வெயிலில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதை கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has asked the govt to order for a judicial probe into the death of two ADMK cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X