For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படையினரை இண்டர்போல் உதவியுடன் கைது செய்க: டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களை கடத்தியதாக ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இலங்கை கடற்படையினரை இண்டர்போல் உதவியுடன் கைது செய்யவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது கடந்த சில நாட்களில் அதிகரித்திருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

Dr. Ramadoss urges govt to get fishermen freed from Lankan custody

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்த தொண்டி நாட்டுப்படகு மீனவர்கள் 15 பேரும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

தமிழ்நாடு- இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நடந்த முதல்கட்ட பேச்சுக்களுக்கு முன்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் சிறை வைக்கப்பட்டிருந்த இருதரப்பு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இப்பேச்சு முடிவடைந்த பின்னர் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மீண்டும் கைது செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இரு தரப்பு மீனவர்களிடையே இம்மாதம் 13 ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுக்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களில் மொத்தம் 3 சம்பவங்களில் தமிழக மீனவர்கள் 57 பேரை 13 படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்து, 3 மாதங்கள் வரை சிறையில் அடைத்தும், படகுகளை பறிமுதல் செய்தும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டிருக்கிறது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்குமிடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன.

புதன்கிழமையன்று முன்நாள் மியான்மரில் ராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னையை மனித நேயத்துடன் அணுகும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராஜபக்சே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தமிழக மீனவர்களை சிங்களப்படை அத்துமீறி கைது செய்துள்ளது என்பதிலிருந்தே இந்தியப் பிரதமருக்கு இலங்கை எந்த அளவுக்கு மரியாதை தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.

ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 121 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் 57 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த விதிக்கும் கட்டுப்படாமல் இந்தியாவை தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் இலங்கையிடம் இனியும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதில் எந்த பயனும் இல்லை. எனவே, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 178 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசும், தமிழக அரசும் எச்சரிக்க வேண்டும்.

அதன்படி, மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு மறுத்தால், தமிழக மீனவர்களை கடத்தியதாக இராமேஸ்வரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் இலங்கைக் கடற்படையினரை கைது செய்ய சர்வதேச காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

English summary
Pattali Makkal Katchi Leader Dr. Ramadoss on Wednesday urged the central government to take immediate steps to secure the release of fishermen from Tamil Nadu in detention in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X