For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: இலங்கையைச் சேர்ந்த 6 பேர் சென்னையில் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (55), கடந்த 82-ம் ஆண்டு அகதியாக சென்னைக்கு வந்தவர். பிளஸ்-2 மட்டுமே படித்துள்ள கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார். இது தொடர்பாக கடந்த 2003 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Fake passport racket; Six Lankans arrested in Chennai

இவர் மீதுள்ள வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார் கிருஷ்ணமூர்த்தி. எனவே, இவரை கைது செய்ய கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. போலீசார் கிருஷ்ணமூர்த்தியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் தொடர்ந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரிப்பில் ரகசியமாக மீண்டும் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப் பட்டது.

இம்முறை சர்வதேச அளவில் நெட்வொர்க் அமைத்து, இவர் போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரித்து விற்பனை செய்து வருவது தெரிய வந்ததையடுத்து, இவரை கைது செய்ய கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணமூர்த்தியையும், அவரோடு சேர்ந்து செயல்படும் மோசடி கும்பலையும் கூண்டோடு பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சிவராம்குமார், சபாபதி, சார்லஸ், வசந்தன், மைனர்சாமி, நடராஜன், ரத்தினவேல்பாண்டியன் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படை போலீசார், கிருஷ்ணமூர்த்தியையும், அவரது கும்பலையும் பிடிக்க களத்தில் இறக்கப்பட்டனர்.

தனிப்படை போலீசார், கடந்த 6 மாதமாக ரகசியமாக கண்காணித்தனர். முதலில் கிருஷ்ணமூர்த்தியிடம் போலிபாஸ்போர்ட் ஏஜெண்டாக செயல்பட்ட, சென்னை ஆலப்பாக்கத்தில் வசிக்கும் ராஜன் (42) என்பவரை போலீசார் மாறுவேடத்தில் தொடர்பு கொண்டனர்.

தங்களுக்கு போலி பாஸ்போர்ட் வேண்டும் என்று அவரிடம் கேட்டனர். அதற்கு ராஜன், ரூ.30 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு போலி பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ராஜனை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், போலி பாஸ்போர்ட் கும்பல் தலைவன் கிருஷ்ணமூர்த்தியை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை போட்டபோது, அங்கு வைத்துதான் போலி பாஸ்போர்ட் மற்றும் போலி விசா தயாரிப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டையே போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தொழிற்சாலைபோல நடத்தி வந்துள்ளார். போலி பாஸ்போர்ட், போலி விசா தயாரிக்க பயன்பட்ட கம்ப்யூட்டர் கருவி, போலி ரப்பர் ஸ்டாம்புகள் உள்பட எண்ணற்ற சிறுசிறு பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தயாரித்து விற்பனைக்கு தயாராக இருந்த 110 போலி பாஸ்போர்ட்டுகளையும், விசாக்களையும் கைப்பற்றினர்.

அடுத்தகட்டமாக போலி பாஸ்போர்ட் மற்றும் விசாவை கம்ப்யூட்டர் மூலம் தயாரிப்பதில் நிபுணரான, ஜூலி என்ற ஜெயசேகரன் (29) என்பவரை போலீசார் தேடினார்கள். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகரில் வசித்தார். அவரும் கைதானார்.

அடுத்து சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அபுபக்கர்சித்திக் (29), சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்த சிவரங்கன் (55), சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரைச் சேர்ந்த தேவசகாயம் பேட்ரிக் ஸ்ரீதர் (48) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அபுபக்கர் சித்திக்கை தவிர, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சிறை புதிதல்ல. கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் சிறை சென்றுள்ளார். அவரைப்போல பேட்ரிக் ஸ்ரீதர், சி.பி.ஐ. போலீசாரிடம் போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே மாட்டி இருக்கிறார். இதேபோல ஜூலி ஜெயசேகரன், போலி கிரெடிட் கார்டு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறை சென்றுள்ளார்.

தற்போது அடுத்த கட்டமாக இந்த நெட்வொர்க்கில் உள்ள மற்றவர்களைப் பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்திய குடியுரிமை அதிகாரிகள் சிலருக்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் யார் என்று கண்டறியும் முயற்சியிலும், போலீசார் இறங்கி உள்ளனர்.

போலி பாஸ்போர்ட் விலை ரூ.30 ஆயிரம்தான். ஆனால் போலி விசாவின் விலை ரூ.6 லட்சத்திற்கு செய்து தரப்பட்டுள்ளது. மோசடி மன்னர் கிருஷ்ணமூர்த்தி, இந்த போலி பாஸ்போர்ட் தொழிலில் கோடிகோடியாக சம்பாதித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்திலும், புதுக்கோட்டையிலும், இவருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன.

கைதான 6 பேரும் நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

English summary
The Chennai Police have arrested six Sri Lankans involved in a fake passport and visa racket, Indian media reports said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X