For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்திக்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள்.. டெல்லிக்கும் செல்வார்கள் என தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் ஐந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்திக்க ராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினர் சென்னை வருகிறார்கள். நாளை அவர்கள் முதல்வரைச் சந்திக்கவுள்ளனர்.

அதன் பின்னர் டெல்லி செல்லவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோர் போதைப் பொருள் கடத்தியதாக கூறி பொய்யான புகாரின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு தமிழகத்திலும், மீனவ சமுதாயத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் அளவுக்கு இலங்கை துணிந்து விட்டதையும், இதுகுறித்து மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் மீனவர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் போராட்டங்களும் வெடித்தன. பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு, ரயில் தண்டவாளம் சேதம் என பல சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களை அதிமுகவின் அன்வர்ராஜா எம்.பி. சந்தித்து பேசியதன் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

இருப்பினும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்தனர். மேலும் தங்கச்சிமடத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ சங்க பிரதிநிதிகள், வக்கீல்கள், பொது நல அமைப்பினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், 5 மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும் அவர்களை விடுதலை செய்து தமிழகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்திப்பது என மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, அன்வர்ராஜா எம்.பி., தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மீனவ சங்க பிரதிநிதிகள் சென்னை வருகிறார்கள். நாளை இவர்கள் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைக்கவுள்ளனர். தேவைப்பட்டால் டெல்லி சென்று அங்கு மத்திய அரசு அதிகாரிகள் அல்லது அமைச்சர்களைச் சந்திக்கவும் மீனவர் தரப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
Families of the five Rameshwaram fishermen who have been sentenced to death have decided to meet the CM O Pannerselvam tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X