அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கேள்வித்தாளை முன்கூட்டியே தர சசிகலா மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா மனுதாக்கல் செய்துள்ளார்.

ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.

Fera case: ED has to give their questions before inquiry, Sasikala demands

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கானது கடந்த மே 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகளை நீதிபதி பதிவு செய்தார்.

இந்நிலையில் ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது தொடர்பாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரினார்.

இதற்கு பெங்களூர் சிறை நிர்வாகம் ஒப்புதல் அளித்தால் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் இல்லாவிட்டால் சசிகலா நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அன்னிய செலாவணி வழக்கு தொடர்பான கேள்விகளை அமலாக்கத் துறை முன்கூட்டியே தர வேண்டும். வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம் ஆஜராக கர்நாடக அரசின் அனுமதியை பெற்றுவிட்டோம் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு வரும் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Foreign Exchange Regulation case: Sasikala filed plea seeking to give questions related to this case in prior in Chennai Egmore court.
Please Wait while comments are loading...