என் முன்பாகவே 2வது மனைவியுடன் உறவில் ஈடுபட்டதால் கொன்றேன்.. இந்து முன்னணி தலைவரின் மனைவி!
சங்கரன்கோவில்: விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஜீவராஜை அவரது முதல் மனைவியே அரிவாள் மனையால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து முதல் மனைவியான அய்யம்மாளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை யாரோ சிலர் வந்து கொலை செய்து விட்டதாக முதலில் போலீஸார் கருதினர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஜீவராஜுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பெயர் அய்யம்மாள். 2வது மனைவி பெயர் ஷர்மிளா. இவர்களிடம் விசாரித்தபோது அய்யம்மாள் மீது போலீஸாருக்குச் சந்தேகம் வந்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் கொலை செய்தார் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் அய்யம்மாள் கொடுத்த வாக்குமூலத்தில், எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினசரி குடித்து விட்டு என்னிடம் சண்டை பிடிப்பார். அவரைத் திருத்த முயன்றேன். முடியவில்லை. இதையடுத்து எனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டேன்.
நான் போனதால் கோபமடைந்த அவர் ஷர்மிளா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரிடம் சண்டை பிடித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக என் கண் முன்பாக அவர் ஷர்மிளாவுடன் உறவு கொண்டு என்னை சீண்டினார்.
இது எனக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜீவராஜைக் கொலை செய்யத் திட்மிட்டேன். சம்பவத்தன்று நான் வீட்டுக்கு வந்தபோது ஷர்மிளா அங்கு இல்லை. எனது கணவரும் நல்ல போதையில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்த அரிவாள் மனையை எடுத்து ஜீவராஜின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு வீட்டுக்கு வெளியே உடலைப் போட்டு விட்டேன் என்றார்.