For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ்

Google Oneindia Tamil News

நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,

Honest is the only key to attain the whole world, says Sagayam

"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும்.

நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார்.

அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன்.

நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார்.

'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்"

இவ்வாறு சகாயம் பேசினார்.

English summary
While speaking in a fuction held at Rasipuram in Namakkal district, IAS officer said that honest is the only key to attain the whole world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X