ஜாதி மாறி காதலித்த மகளை அடித்துக் கொன்று எரித்த தந்தை: சிவகங்கையில் பரபரப்பு
சிவகங்கை: சிவகங்கை அருகே ஜாதி மாறி காதலித்த மகளை கவுரவக்கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார்.
சிவகங்கையை அடுத்த உடைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 47) விவசாயி. இவரது மகள் தமிழ்செல்வி (19). இதே ஊரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (27). தமிழ்செல்வியும், பூமிநாதனும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26ஆம்தேதி தமிழ்செல்வி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், பூமிநாதனுடன் தமிழ்செல்வி இருப்பது தெரியவந்தது. உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் தான் தாய், தந்தையருடன் செல்ல விரும்புவதாக தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவரை பெற்றோருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் தமிழ் செல்வியின் தந்தை தங்கராஜ் சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் ஆஜராகி மகள் தமிழ்செல்வியை தான் கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காவல்நிலையத்தில் தங்கராஜ் அளித்த வாக்குமூலம்:
கடந்த 3-ந்தேதி இரவில் நான் கண்விழித்தபோது வீட்டில் படுத்து இருந்த எனது மகளை காணவில்லை. பின்னர் வெளியே வந்து பார்த்தபோது வயல்காட்டுப் பகுதியில் அவர் சென்று கொண்டு இருந்தார். இதனால் திரும்பத் திரும்ப தன்னை அவமானப்படுத்துகிறாளே என மகள் மீது ஆத்திரம் வந்தது. உடனே அவளை பின்தொடர்ந்து சென்று அங்கிருந்த கட்டையால் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடலை மண்ணெண்ணை ஊற்றி எரித்து விட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கவுரவத்திற்காக மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கூறுவது உண்மையா? தமிழ்செல்வியை அவர் மட்டும் கொலை செய்தாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்தார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications