For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கானா....58 ஆண்டுகால போராட்டம்... 600 பேர் செய்த உயிர்தியாகம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா உதயமாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் உதயமானதை அம்மாநில மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இரவு 9 மணியில் இருந்து இரவு 11.59 வரை தொடர்ச்சியாக வாண வேடிக்கைகள் நடைபெற்றன. எங்கு பார்த்தாலும் ஜெய் தெலுங்கானா கோஷம் காதில் விழுந்துகொண்டே இருந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ‘ஜெய் தெலுங்கானா' என வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தெலுங்கானா உதயமானதால் தங்களின் வாழ்வில் வசந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் புதிய மாநிலத்தை மக்கள் வரவேற்றனர்.

மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் இன்று காலை 8.15 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மிக நீண்ட வரலாறு

மிக நீண்ட வரலாறு

தெலுங்கானா மாநிலம் சாதாரணமாக பிரிக்கப்பட்டுவிடவில்லை. பல ஆண்டுகால போராட்டம் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்தியாகத்திற்குப் பின்னர்தான் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுள்ளது.

நிஜாம்களின் கட்டுப்பாட்டில்

நிஜாம்களின் கட்டுப்பாட்டில்

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு, அப்போதைய ஹைதராபாத் மாநிலம் நிஜாம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை இந்தியாவுடன் சேர்க்க இவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், ‘ஆபரேஷன் போலோ' என்ற பெயரிலான ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் மாநிலம், 1948-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

ஆந்திரபிரதேசம் உதயம்

ஆந்திரபிரதேசம் உதயம்

பின்னர், 1956-ம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கு மொழி பேசுவோர் வசிக்கும் ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளுடன் ஹைதராபாத் மாகாணம் ஒன்றிணைக்கப்பட்டு, ஆந்திரப் பிரதேச மாநிலம் உதயமானது.

தனிமாநில கோரிக்கை

தனிமாநில கோரிக்கை

ஆனால், தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை எனக் கருதிய தலைவர்கள், தனி மாநிலம் கோரி போராடினர்.

ஜெய் தெலுங்கானா

ஜெய் தெலுங்கானா

1969-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. 1969 ஜனவரி மாதம் போராட்டங்கள் மெல்ல அரும்பத் தொடங்கின. உஸ்மானியா, காகதியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கி வைக்க அரசு ஊழியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என சகல பகுதி மக்களும் இதில் இணைந்தனர். இதற்கு ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பரவிய போராட்டம்

பரவிய போராட்டம்

ஹைதராபாத், கம்மம், வாரங்கல், நிஜாமாபாத் எனப் போராட்டம் தெலுங்கானாவெங்கும் பரவியது. தினமும் புதிய எழுச்சி இந்த இயக்கத்தை பலப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் புதிய தலைவர்கள் தெலுங்கானா இயக்கத்தில் இணைந்தார்கள். பல காங்கிரஸ் தலைவர் கள் கட்சியைவிட்டு இயக்கத்தில் வந்து இணைந்தனர்.

தெலுங்கானா பிரஜா சமிதி

தெலுங்கானா பிரஜா சமிதி

பல நகரங்களில் ஊர்வலங்களை ஒடுக்க காவல்துறை கண்மூடித்தனமாகச் சுட்டதில் பலர் இறந்தனர். இருப்பினும் ஒவ்வொரு தியாகமும் மக்கள் வெள்ளத்தைப் பெருக்கவே செய்தது. இந்த இயக்கத்திற்கு தெலுங்கானா பிரஜாசமிதி எனப் பெயர் சூட்டப்பட்டது. கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்ற அன்று மட்டும் 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டனர்.

300 உயிர்கள் பலி

300 உயிர்கள் பலி

1971 தேர்தலில் 16 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தெலுங்கானா பிரஜா சமிதி வென்றது. அத்துடன் இந்த இயக்கத்தை சென்னா ரெட்டி காங்கிரஸுடன் இணைத்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரஜா சமிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட நேரம் மயிரிழையில் சென்னாரெட்டி உயிர் தப்பினார். அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் 380 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி இருந்த சூழலில் அந்த இயக்கத்தை காங்கிரஸுடன் இணைத்ததில் மக்கள் கலவரமடைந்தனர். இருப்பினும் தெலுங்கானா கோரிக்கையை மக்கள் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்த வண்ணமிருந்தனர்.

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

நூற்றுக்கணக்கான மாணவர்கள், போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டில் செத்து மடிந்தனர். இயக்கங்களின் பெயர்கள் மாறின. புதிய தலைமுறை மாணவர்கள், அரசியல் தலைவர்கள் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றனர். தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மனங்கள் கொதிநிலையை அடையும். ஆண்டுகள் கடந்தாலும் மக் களின் தெலுங்கானா கோரிக்கை பலம் கொண்ட வெகுமக்கள் இயக்கமாக பலம் பெற்றது.

பாஜக ஆட்சிகாலத்தில்

பாஜக ஆட்சிகாலத்தில்

1990இல் பிஜேபி கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியமைத்தால் தெலுங்கானா மாநிலம் அமைக்கப் போவதாக அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு பிஜேபி, சட்டீஸ்கர், ஜார்க்கண்டு, உத்தர்கண்டு ஆகிய மூன்று மாநிலங்களை அமைத்தது. ஆனால் அப்பொழுது அவர்களின் கூட்டணித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஒப்புக் கொள்ளாததால் தெலுங்கானா அமைக்கப்படவில்லை.

தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி

தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி

கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகரராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதே தனது லட்சியம் என்று போராட்டத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் கொடுத்த உறுதி

காங்கிரஸ் கொடுத்த உறுதி

2004 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது. ராஷ்டிரிய சமிதியுடன் (டி.ஆர்.எஸ்.) தேர்தல் உடன்பாடு செய்து கொண்டது காங்கிரஸ். அதன் தலைவி சோனியா காந்தி டி.ஆர்.எஸ். கொடியைத் தலையில் கட்டிக்கொண்டு ஆந்திராவில் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் காங்கிரஸ் வென்றது, குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் தெலுங்கானா மாநிலம் இடம் பெற்றது.

வெளியேறிய டிஆர்எஸ்

வெளியேறிய டிஆர்எஸ்

டி.ஆர்.எஸ். அமைச்சரவையில் இணைந்தது. இருப்பினும் காங்கிரஸ் மாநில அமைப்பிற்கான நடவடிக்கையில் இறங்காததால் டி.ஆர்.எஸ். கூட்டணியிலிருந்து வெளியேறியது.

ராஜசேகரரெட்டி

ராஜசேகரரெட்டி

2008 தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த முறை சந்திரபாபு நாயுடு கோரிக்கையை ஆதரித்தார். காங்கிரஸின் மறைந்த ராஜசேகர ரெட்டியும் தேர்தலுக்கு முன்பு தானும் தெலுங்கானாவை ஆதரிப்பதாக அறிவித்தார். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றதும் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

சந்திரசேகரராவ் உண்ணாவிரதம்

சந்திரசேகரராவ் உண்ணாவிரதம்

இந்தச் சூழலில்தான் சந்திரசேகரராவ் டிசம்பர் 29 தேதி தனது சாகும் வரையான உண்ணாவிரதத்தை அறிவித்தார். மத்திய அரசு உடனே மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கையில் இறங்குவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் வெற்றி விழாக்கள் தெலுங்கானாவெங்கும் ஆர்ப்பரித்தது. மக்களின் 60 ஆண்டுக் கோரிக்கைக்கு புதிய வெளிச்சமும், உத்வேகமும் கிடைத்தன.

2009 டிசம்பர் 9

2009 டிசம்பர் 9

2009-ல் தனித் தெலுங்கானா கோரிக்கை விஸ்வரூபமெடுத்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதாக உறுதியளித்தது மத்திய அரசு.

600 பேரின் உயிர்தியாகம்

600 பேரின் உயிர்தியாகம்

ஆனாலும் அது தொடர்பான நடவடிக்கையில் இறங்காத காரணத்தால் மேலும் போராட்டம் வலுவடைந்தது. மாணவர்கள் பலர் தீக்குளித்து மாண்டனர். தெலுங்கானா தனிமாநிலம் தொடர்பான போராட்டத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

கிருஷ்ணா கமிட்டி

கிருஷ்ணா கமிட்டி

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் தொடர்பாக ஆராய கிருஷ்ணா கமிட்டியை அமைத்தது. பின்னர் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.

மசோதா நிறைவேற்றம்

மசோதா நிறைவேற்றம்

கடந்த பிப்ரவரி 18ம் தேதி, மக்களவையில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப் பட்டது. தெலுங்கானா மாநிலம், இன்று அதிகாரபூர்வமாக உதயமாகியுள்ளது.

English summary
There are no barbed wires and road blocks at either the assembly or the secretariat and Raj Bhavan which were quite visible for over three years. Instead they have been replaced with pink flags, hoardings, festoons and flexis all over the Nizam's town on the occasion of the birth of a new state. At the strike of midnight on Sunday, the 29th state of Indian Union, Telangana, was born after almost 60 years of unhappy merger with the Andhra state in 1956 and following a long struggle for separation from that mismatched union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X