ஜல்லிக்கட்டு.. சென்னை கலவரம்.. விசாரணை ஆணையத்திடம் மார்ச் 31-க்குள் தகவல்களை அளிக்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த தகவல்களை மார்ச் 31க்குள் புகாராக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்த போது ஜனவரி மாதம் 23-ம் தேதியன்று சென்னையில் பெரும் கலவரம் வெடித்தது.

jallikattu enquiry Commission request for information by March 31

கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சூழல் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரனை கொண்ட தனிநபர் விசாரணை ஆணையத்தை கடந்த ஜனவரி 31-ம் தேதி அமைத்தது.

இதனையடுத்து சட்டம் ஒழுங்கு, காவல்துறை அத்துமீறல் குறித்து புகார் கூறப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற ஓய்வு நீதிபதி ராஜேஸ்வரன் முதற்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது போராட்டத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த உயர் போலீஸ் அதிகாரிகளான பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து அறிந்தவர்கள், அது குறித்த தகவல்களை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தனிநபர் ஆணையம் ஊடக விளம்பரம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

தகவலை சத்தியப் பிரமாண உறுதிமொழி பத்திர வடிவத்தில் செயலாளர், நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன், விசாரணை ஆணையம், பொதிகை மாளிகை, சென்னை-28 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தகவல்களை இம்மாதம் 31-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என தனிநபர் விசாரணை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
jallikattu enquiry Commission request for information by March 31, Retired Judge Rajeshwaran has started inquiry about Chennai violence
Please Wait while comments are loading...