For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழல் முதல்வர் ஜெயலலிதா என்ற அவப்பெயருக்கு முடிவு கட்டுவாரா மோடி?: கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'ஊழல் இந்தியா' என்ற அவப்பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'ஊழல் முதலமைச்சர்' என்ற அவப் பெயருக்கு எப்போது முடிவு கட்டப் போகிறார்? என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சுட்டிக்காட்டி திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: 'ஊழல் முதல் அமைச்சர்' என்ற அவப்பெயருக்கு எப்போது முடிவு கட்டப்போகிறார்?

பதில்: குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குற்றப் பின்னணியைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

குற்றப் பின்னணி உள்ள ஒரு முதலமைச்சர் மீதான வழக்கு 17 ஆண்டுகளாக வாய்தாவுக்குள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறதே; அதற்கு எப்போது தீர்வு? 'ஊழல் இந்தியா' என்ற அவப்பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ள பிரதமர், 'ஊழல் முதல் அமைச்சர்' என்ற அவப்பெயருக்கு எப்போது முடிவு கட்டப் போகிறார்?

17 ஆண்டுகால பயணம்

17 ஆண்டுகால பயணம்

கேள்வி: பா.ஜ.க. பற்றி தேர்தலுக்கு முன்பு எதிர்த்துப் பேசிய ஜெயலலிதா, இப்போது விழுந்து விழுந்து பாராட்டக் காரணம், பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குதான் என்று பேசுகிறார்களே?

பதில்: அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைய "ஆனந்த விகடன்" வார இதழில் பத்திரிகையாளர் ப. திருமாவேலன் "17 வருடங்கள் - திகில் ஜெயலலிதா கேஸ் - பகீர் பெங்களூரு ரேஸ்"" என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி வருமாறு :-

"பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக் கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு! 39க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக் கூடக் கொண்டாட முடியாமல், சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா கொடுக்கக் காத்திருக்கும் தீர்ப்புதான் ஜெயலலிதாவுக்கு நிம்மதியான தூக்கம் இல்லாமல் புரளவைக்கும் புலம்பலைக் கொடுத்து வருகிறது.

மாறிய நீதிபதிகள்

மாறிய நீதிபதிகள்

இந்திய நீதித் துறை வரலாற்றில் இப்படி ஒரு வழக்கு இழுபறிப் படலத்தை எட்டியது இல்லை என்ற சிறப்புப் பெருமையை ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெற்று விட்டது. இந்த வழக்கு பதிவான பிறகு, இந்திய நாடாளுமன்றம் ஐந்து தேர்தல்களைக் கடந்து விட்டது; தமிழ்நாடு சட்டமன்றம் மூன்று தேர்தல் களைச் சந்தித்து விட்டது; உச்ச நீதிமன்றத்துக்கு 16 தலைமை நீதிபதிகள் மாறி விட்டார்கள்; சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 12 தலைமை நீதிபதிகள் வந்து போய் விட்டார்கள். 49 வயதில் இருந்த ஜெயலலிதா பொன் விழா கடந்து, மணி விழா கடந்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கே நான்கு நீதிபதிகள் மாறிவிட்டார்கள். அரசு வழக்கறிஞரும் மாறி விட்டார். வழக்கின் விசாரணை அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனாலும் வழக்கு நகர்ந்து கொண்டே, நடந்து கொண்டே போகிறது.

கணக்கு தீர்க்கும் நாள்

கணக்கு தீர்க்கும் நாள்

எல்லாவற்றுக்கும் கணக்குத் தீர்க்கும் நாள் ஒன்று உண்டு என்பார்கள். ஆனால் அது என்று என்பதுதான் இந்த வழக்கைப் பொறுத்தவரை தெரியவில்லை. சட்டத்தின் ஆட்சி, சட்டம் தன் கடமையைச் செய்யும், சட்டம் தன் வழி செல்லும் என்று நம்பிக்கை நித்தமும் தரப்படுகிறது. ஆனால் எப்போது? என்பதுதான் பெங்களுரு வழக்கைப் பொறுத்த வரை பெரிய கேள்வி!.....

ஒரு ரூபாய் சம்பளம் ரூ. 66 கோடி வருமானம்

ஒரு ரூபாய் சம்பளம் ரூ. 66 கோடி வருமானம்

மாதம் ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, 66 கோடிக்கும் மேலான சொத்தை எப்படி வாங்க முடியும்? இந்த ஒற்றைக் கேள்விக்குப் பதில் தேடித்தான் 17 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இந்த வழக்கை நடத்துவதற்கு அரசும், நீதித் துறையும், ஜெயலலிதா தரப்பும் இதுவரை செலவு செய்திருக்கும் தொகை குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தொகையை விடக் கூடுதலாக இருக்கும். கால விரயம், பொருள் விரயம் மட்டுமல்ல; நீதியும் விரயம் ஆகிக் கொண்டு இருப்பதன் அடையாளம் இது.

இழுத்தடிக்கும் வழக்கு

இழுத்தடிக்கும் வழக்கு

"பதவியில் இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில் அவை தொடரப்பட்ட ஓர் ஆண்டு காலத்துக்குள் வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் முடித்து விட வேண்டும்"" என்று இன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா சொல்லியிருக்கிறார். முதல் வழக்காக இதிலேயே அதனை அமல்படுத்தலாமே? "நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும் உங்களை விடச் சட்டம் பெரிது"" என்று இதே வழக்கில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சீமா ஆகியோர் எழுதினார்கள். "நான் தனியாக கடந்த ஆறு மாதங்களாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல் உணர்கிறேன்" என்று நீதிபதி பச்சாப்புரே சொல்லும் அளவுக்கு - "எனக்கு விசாரணை நடத்த விருப்பம் இல்லை" என்று நீதிபதி பாலகிருஷ்ணா விரக்தி அடையும் அளவுக்கு - "இனி இந்த கோர்ட்டுக்கே வர மாட்டேன்"" என்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நொந்து கொள்ளும் அளவுக்கு இழுத்தடிப்புகள் எதற்காக?" இப்படியெல்லாம் "ஆனந்த விகடன்" கட்டுரை தீட்டியுள்ளது. ஏன்?

முடிவு கட்டுவாரா மோடி

முடிவு கட்டுவாரா மோடி

குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நாடாளு மன்றத்தில் பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, குற்றப் பின்னணியைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

தீர்வு எப்போது?.

தீர்வு எப்போது?.

குற்றப் பின்னணி உள்ள ஒரு முதலமைச்சர் மீதான வழக்கு 17 ஆண்டுகளாக வாய்தாவுக்குள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறதே; அதற்கு எப்போது தீர்வு? "ஊழல் இந்தியா" என்ற அவப்பெயரை மாற்றுவோம் என்று கூறியுள்ள பிரதமர், "ஊழல் முதல் அமைச்சர்" என்ற அவப் பெயருக்கு எப்போது முடிவு கட்டப் போகிறார்? இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi has been questioned Prime minister NarendraModi, 'Corruption in India' to change the name, saying the prime minister Narendra Modi, Chief Minister of corruption 'was the name she ever going to end? Jayalalithaa wealth case, pointing out that Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X