For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘நாற்பதும் நமதே’ இலக்கினை அடைய தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செல்கிறார் ஜெ.

Google Oneindia Tamil News

கோத்தகிரி: நாற்பது தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கினை அடைய தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் மரியாதை, எனவே களப்பணியைத் தொடங்குங்கள் என நேற்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழா இன்று கோத்தகிரி டானிங்டன் பகுதியில் நடைபெற்றறது. அப்போது விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

காற்றில் பறந்த கொள்கைகள்...

காற்றில் பறந்த கொள்கைகள்...

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட கட்சியை தனது குடும்ப சொத்தாக்கி பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே கட்சியில் இருந்து வெளியேற்றிய கருணாநிதியை அரசியலை விட்டே ஒழித்துக் கட்டுவதற் காக துவக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் இயக்கம்.

இதுவே சாட்சி...

இதுவே சாட்சி...

கருணாநிதி தலைமை ஏற்றுள்ள தி.மு.க., 1996-ஆம் ஆண்டிலிருந்து 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடுவில் ஓர் ஆண்டைத் தவிர தொடர்ந்து மத்திய ஆட்சியில் 17 ஆண்டு காலம் அங்கம் வகித்து வந்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியே வந்தாலும் காங்கிரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

2ஜி எனும் இமாலய ஊழல்...

2ஜி எனும் இமாலய ஊழல்...

17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக-வால் தமிழ் நாட்டிற்கு ஏதாவது நன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. மத்திய ஆட்சியின் மூலம் தன் குடும்பத்திற்கும், தனது கட்சிக்கும் என்ன நன்மை என்று தான் சுயநலமாகவே சிந்தித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. இது போதாது என்று 2- ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் நாட்டையே சுரண்டியவர்கள் தான் கருணாநிதியின் குடும்பமும், திமுக-வினரும். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்து, தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தட்டிக் கேட்காமல்; தமிழக மக்களுக்கு எல்லா வகையிலும் துரோகம் இழைத்தவர் கருணாநிதி.

குடும்ப அரசியல்....

குடும்ப அரசியல்....

இலங்கைப் பிரச்சனையை பெயர் அளவிற்கு காரணம் காட்டி, "காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை" என்று தெரிவித்து, கடந்த ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளி வந்தார் கருணாநிதி. பிறகு சில மாதங்கள் கழித்து தன் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியிடம் மன்றாடினார். யாசகம் கேட்டார். காங்கிரஸ் கட்சியும் கருணாநிதியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்தது. காங்கிரஸ் தயவில் தனது மகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கினார் கருணாநிதி. இப்படி தன்னலத்திற்காகவும், தன் குடும்ப நலத்திற்காகவும், தமிழர்களின் நலன்களை தமிழ்நாட்டின் நலன்களை பல முறை தாரைவார்த்தவர் கருணாநிதி.

இலங்கை இனப்படுகொலை....

இலங்கை இனப்படுகொலை....

உண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழ் உணர்வு என்று ஒன்று இருந்திருந்தால்; தமிழ் மக்களின் நன்மை பற்றி கவலைப்படுபவராக இருந்திருந்தால்; தமிழர்களின் உணர்வுகளுக்கு கிஞ்சித்தேனும் மதிப்பு அளிப்பவராக இருந்திருந் தால்; 2008-ஆம் ஆண்டு மத்திய அரசு இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை வழங்கிய போதே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். வெளி வந்தாரா கருணாநிதி? இல்லையே! 2009-ஆம் ஆண்டு இலங்கையில் இனப் படுகொலை நடந்த போதாவது அதைத் தடுக்க முன்வராத மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். வெளி வந்தாரா கருணாநிதி? இல்லையே! மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை தானே அரங்கேற்றினார். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்த போதாவது மத்திய ஆட்சியில் இருந்து வெளி வந்திருக்க வேண்டாமா? அல்லது மத்திய அரசை தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? அதைக் கூட கருணாநிதி செய்யவில்லையே.

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி....

மீண்டும் காங்கிரஸ் கூட்டணி....

தற்போது மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கூறி உள்ளார். ஆட்சி முடியும் தருவாயில் இது நாள் வரை தான் அங்கம் வகித்த ஆட்சிக்கு தலைமை தாங்கிய கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து வெளியேறுவது கருணாநிதிக்கு கைவந்த கலை. அந்த வகையில் தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார். இந்த நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இல்லை. ஏதாவது சிறிய கட்சிகள் தடுமாறி தள்ளாடி தன் வலையில் வந்து விழுமா என்று காத்துக் கொண்டிருக்கிறார். வலை யில் எதுவும் சிக்கவில்லை என்றால் மீண்டும் காங்கிரசு டன் கூட்டணி வைப்பதற்கும் தயங்க மாட்டார் கருணாநிதி.

தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு....

தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசு....

காவேரி நதிநீர்ப் பிரச்சனை என்றாலும்; முல்லைப் பெரியாறு பிரச்சனை என்றாலும்; ஏழை, எளிய மக்கள் அன்றாடம் எரிபொருளாக பயன்படுத்தக் கூடிய மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சனை என்றாலும்; தமிழக மீனவர்கள் பிரச்சனை என்றாலும்; தமிழகத்திற்கு மின்சாரம் ஒதுக்குவது குறித்த பிரச்சனை என்றாலும்; கச்சத் தீவு பிரச்சனை என்றாலும்; ஈழத் தமிழர்கள் பிரச்சனை என்றாலும்; மத்திய காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும்....

காங்கிரஸை தூக்கி எறிய வேண்டும்....

தனது தவறான பொருளா தாரக் கொள்கைகள் மூலம் பெட்ரோல், டீசல், விலை உயர்வு; அனைத்துப் பொருட் களின் விலைவாசி உயர்வு; பண வீக்கம்; விவசாய விரோதக் கொள்கை; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என ஏழை, எளிய மக்களை வாட்டி வதைத்து பெரும் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

விழிப்புணர்வு தேவை....

விழிப்புணர்வு தேவை....

காங்கிரசுடன் கூட்டணி இல்லாத நிலையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், தவறான கொள்கைகளுக்கும் தாங்கள் காரணம் அல்ல என்று தி.மு.க.-வினர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்வார்கள். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகியதற்கு இவை தான் காரணங்கள் என்று மாய்மாலம் செய்வார்கள். எனவே, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

முகத்திரை கிழிய வேண்டும்....

முகத்திரை கிழிய வேண்டும்....

நமது அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனை களையும்; தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்களையும்; திமுக-வின் தன்னலக் கொள்கை களையும் பட்டியலிட்டு; பட்டிதொட்டி எங்கும் பரப்பி அவர்களுடைய முகத் திரையை நீங்கள் எல்லாம் கிழித்து எறிய வேண்டும்.

களப்பணி....

களப்பணி....

தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் மற்றும் தி.மு.க.-விற்கு, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்காத வகையில் உங்களுடைய களப்பணி அமைய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படவும்; உரிமைகள் நிலைநாட்டப் படவும் வேண்டும் என்றால்; மத்திய அரசை வழி நடத்தும் அதிகாரம் நமது கைக்கு வர வேண்டும். இதனை மனதில் நிலை நிறுத்தி "நாற்பதும் நமதே" என்ற இலக்கினை அடைய நீங்கள் இன்று முதல் அயராது உழைக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளப் பெருமக்களை அவர்கள் இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து நமது அரசின் சாதனைகளையும்; தி.மு.க.-காங்கிரஸின் துரோகங் களையும்; சதித் திட்டங்களையும் பட்டிய லிட்டு; வாக்காளர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

சூறாவளிப் பிரச்சாரம்...

சூறாவளிப் பிரச்சாரம்...

கழக ஆட்சி மன்றக் குழு தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களோடு இணைந்து நானும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி மீது வெற்றி வந்து....

வெற்றி மீது வெற்றி வந்து....

உங்களுடைய உறுதியும், ஊக்கமும், தன்னம்பிக்கையும் தடைகளை எல்லாம் தகர்த் தெறியும் ஆற்றல் கொண்டது என்பதை நான் நன்கு அறிவேன். நாம் மேற்கொள்ள இருக்கும் கடின உழைப்பு நாற்பது தொகுதிகளையும் நமக்கு பெற்றுத் தரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, "வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம், உன்னைச் சேரும்" என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலை நினைவுபடுத்தி; சீரோடும் சிறப்போடும் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் கலைச்செல்வனுக்கும், அவருடன் ஒத்துழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கும், சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள காவல் துறையினருக்கும் எனது இதயமார்ந்த பாராட்டு களைத் தெரிவித்து, இன்று புதிதாக கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வந்துள்ள பல்வேறு கட்சி களைச் சேர்ந்த 7,076 பேர்களையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்புடன் வருக, வருக என வரவேற்கிறேன்.

நம்பிக்கை வீண் போகாது....

நம்பிக்கை வீண் போகாது....

எத்தகைய நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய நீங்கள் வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண் போகாது என்பதைத் தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
For the forth coming parliament election, the TN chief minister and the AIADMK general secretory Jayalitha has planned to campaign in all the 40 constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X