For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. அமைச்சரவையின் மியூசிக்கல் சேர்... 23 முறை நடந்த அமைச்சரவை மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதை அத்தனை எளிதாக யாராலும் சொல்லிவிட முடியாது. அந்த அளவிற்கு பதவியும், துறையும் நிரந்தரமில்லை என்பதை அமைச்சர்களே அறிந்துதான் வைத்துள்ளனர்.

தமிழக சட்டசபையில் எத்தனையே அமைச்சர்கள் கோலோச்சியிருக்கிறார்கள். அமைச்சராக கடைசி வரை நீடிக்க முடியுமா? என்ற பயத்தோடும் ஒருவித பதற்றத்தோடுமே நாற்காலியில் அமர்வது வாடிக்கையாகி விட்டது.

2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசு பொறுப்பேற்ற போது அமைந்த அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சராகப் பொறுப்பேற்றனர். 2011 முதல் 2016 வரையிலான ஐந்து ஆண்டுகால ஆட்சி காலத்தில் இதுவரை 23 முறை அமைச்சரவை மாற்றம் கண்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்ற சில நாட்களிலேயே மரியம் பிச்சையில் விபத்தில் மரணிக்க, அப்போது தொடங்கிய அமைச்சரவை மாற்றம், கடந்த மாதம் நீக்கப்பட்ட சின்னையா வரை கிட்டத் தட்ட 50 எம்.எல்.ஏக்கள்வரை இந்த ஐந்து ஆண்டுகளில் அமைச்சர் நாற்காலிகளில் அமர்ந்து சென்றுள்ளனர்.

Jayalalithaa reshuffles her cabinet for 23 times

2011 முதல் அமைச்சரவை

2011ம் ஆண்டு மே 16ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான முதல் அமைச்சரவையில், உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் முதல்வர் கையில் இருந்தன. முதல்வருக்கு அடுத்த இடத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், மூன்றாம் இடத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையனும் அதற்கு அடுத்து மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும் இருந்தனர்.

மரியம் பிச்சையின் மரணம்

மே 24ம் தேதி கூடிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க திருச்சியில் இருந்து காரில் வந்தபோது, விபத்தில் சிக்கி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை பலியானார். அந்த இலாகாவை பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையாவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

  • 2011ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி முகமது ஜான், அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மேலும், 3 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன.
  • 2011 ஜூலை மாதம் 3ம் தேதி சட்டத்துறை அமைச் சராக இருந்த இசக்கி சுப்பையா மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். அவருக்குப் பதிலாக செந்தூர் பாண்டியனை சேர்த்தார். ஒரே வாரத்தில் இரண்டு முறை நிகழ்ந்த அமைச்சரவை மாற்றம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
  • ஜூலை 25ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் கருப்பசாமி இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டார். அவரது பொறுப்பு பள்ளி கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
  • 2011 நவம்பர் 4ம் தேதி அமாவாசை தினத்தன்று தமிழக அமைச்சரவையில் இருந்த ஊரக தொழில் அமைச்சர் சி.சண்முகவேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கால்நடைத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, தகவல், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
  • புதிதாக எஸ்.தாமோதரன், ஆர்.காமராஜ், டாக்டர் எஸ்.சுந்தரராஜ், எம்.பரஞ்சோதி, வி.மூர்த்தி, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகிய 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
  • 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், அமைச்சரவையில் செல்வாக்காக இருந்த செங்கோட்டையனின் சரிவு, இந்த அமைச்சரவை மாற்றத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. செங்கோட்டையனின் துறையும் மாற்றம் கண்டது. வேளாண்மை துறை அமைச்சராக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை மாற்றப்பட்டது.
  • அமைச்சரவையில் அசைக்க முடியாதவராக வலம்வந்த செங்கோட்டையன், முக்கியத்துவம் இல்லாத ஐ.டி துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டு மீண்டும் வருவாய்த் துறைக்கு மாற்றப்பட்டு, ஆறாவது அமைச்சரவை மாற்றத்தில் அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது.
  • 2011 டிசம்பர் 9ம் தேதி அமாவாசை தினத்துக்கு முதல் நாள், சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயத்தின் பதவியும் பறிக்கப்பட்டது. இருவருக்கும் பதிலாக எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோர் அமைச்சர்களாகப்பட்டனர். 4வது முறையாக அமைச்சரவை மாற்றமானது.
  • 5வது முறையாக, 2012 ஜனவரி 26ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக என்.ஆர்.சிவபதி, சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • 6வது முறையாக, 2012 ஜூலை 18ம் தேதி, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.
  • 7வது முறையாக, 2012 அக்டோபர் 3ம் தேதி, வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக பி.மோகன் நியமிக்கப்பட்டார். அப்போது 4 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.
  • 8வது முறையாக கடந்த பிப்ரவரி 28ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜய் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
  • புதிய அமைச்சர்களாக வைகைச்செல்வன், டி.பி.பூனாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அமைச்சர் செந்தூர் பாண்டியனின் இலாகாவும் மாற்றப்பட்டது.
  • அமைச்சரவை மாற்றம் அமாவாசை, பவுர்ணமிக்கு ஒட்டிய தினங்களிலேயே நிகழ்ந்ததால் அமாவாசை தினம் என்றால் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற அச்சமும் அமைச்சர்களிடையே ஏற்பட்டது.
  • 9வது முறையாக 2013ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் எஸ்.டி.செல்லப்பாண்டியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.முகமதுஜான் ஆகிய 2 பேர் நீக்கப்பட்டனர்.
  • அப்போது புதிய அமைச்சர்களாக எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போது 3 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டது.
  • 10வது முறையாக 2013 செப்டம்பர் 5ம் தேதி, பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் நீக்கப்பட்டார். உயர்கல்வி அமைச்சராக இருந்த பழனியப்பனிடம் பள்ளி கல்வித்துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
  • 11வது முறையாக 2013 அக்டோபர் 30ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். வீரமணியிடம் இருந்த சுகாதாரத்துறை மாற்றப்பட்டு பள்ளி கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.
  • 12வது முறையாக 2013 நவம்பர் 11ம் தேதி, கே.வி.ராமலிங்கத்திடம் இருந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக வழங்கப்பட்டது. கல்வி அமைச்சரிடம் இருந்த விளையாட்டு துறை பறிக்கப்பட்டு கே.வி.ராமலிங்கத்திடம் வழங்கப்பட்டது.
  • 13வது முறையாக 2013 டிசம்பரில் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் சேர்க்கப்பட்டுள்ளார். தோப்பு வெங்கடாச்சலம், ரமணா, சம்பத் ஆகிய 3 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டது.
  • 3 ஆண்டுகளில் 16முறை மாற்றமானது அமைச்சரவை, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து ஜெயலலிதாவும் பதவியிழக்கவே முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் 2014ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி பதவியேற்றார். அதன்பிறகு அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழவில்லை.
  • வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலையை அடுத்து அந்த துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்க ஓ.பன்னீர் செல்வம் பரிந்துரை செய்யவே 2015 மார்ச் மாதம் அவரது பதவி பறிக்கப்பட்டது.
  • 2015ம் ஆண்டு மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அப்போது புதிய அமைச்சரவை மூன்றாவது முறையாக பொறுப்பேற்றது. அமைச்சர் ஆனந்தன், செந்தூர் பாண்டியன் ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. அமைச்சர் ஆனந்தன் கவனித்து வந்த வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
  • ஆகஸ்ட் 27ம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து கழற்றி விடப்பட்டார். தற்போது ஆனந்தன் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கவனித்து வந்த வனத்துறை மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது.
  • அமைச்சரவை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட துறை என்றால், அது பள்ளிக்கல்வித்துறை தான். படாதபாடு பட்ட இந்த துறை சி.வி. சண்முகத்திடம் இருந்து பலரின் கைக்கு மாறி கே.சி. வீரமணியிடம் தஞ்சமடைந்தது.
  • ஆட்சி முடியப்போகும் கடைசி நேரத்தில் பால்வளத்துறை அமைச்சர் ரமணாவும், கால்நடைத்துறை அமைச்சர் சின்னையாவும் அமைச்சர் பதவியை பறிகொடுத்தனர்.
  • இத்தனை சூறவளியிலும் அசையாமல் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் சிலர் இருக்கின்றனர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பழனிச்சாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர்தான் மாற்றம் எதுவுமின்றி தப்பிப்பிழைத்தவர்கள்.
  • அமாவாசையோ, பவுர்ணமியோ வந்தால் யார் தலை உருளுமோ என்ற அச்சம் அமைச்சர்கள் மத்தியில் சுழன்றடித்தது என்னவோ உண்மைதான். பெண் சர்ச்சை ஊழல் சர்ச்சையில் சிக்கியவர்கள், ஊழல் குற்றச்சாட்டு, அதிகாரி தற்கொலை குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்தவர்களே அதிகம்.
English summary
Jayalalithaa has reshuffled her cabinet 23 times after assuming office in May 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X