70 ஆவது சுதந்திர தினத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா ? கி.வீரமணி ‘‘சுதந்திரமான’’ கேள்வி

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''அடானிகளுக்கும்'', ''அம்பானிகளுக்கும்'' கிடைத்துள்ள, வாய்ப்பும், வசதியும், ஆதிதிராவிட அமாவாசைக்கும், மண்ணாங்கட்டிக்கும், மீதி திராவிட சூத்திர சுப்பன், குப்பன்களுக்குக் கிடைத்துள்ளதா என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய 'சுதந்திரத்தின்' 69 ஆம் ஆண்டு நிறைவு. 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் - இன்று!1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில், ஜோதிடரிடம் நல்ல காலம் - நல்லநேரம்பார்த்து (12 மணி அவர் குறித்தது) பிறந்த சுதந்திரம்.

 K Veeramani statement about Independence Day

'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே!' என்று பாடிப் பரவசம் அடைந்த நாள் - 70 ஆண்டுகளுக்கு முன்! அன்று 'இருகொடி ஏந்திகளான'நம்மூர்கம்யூனிஸ்ட்டுதோழர்கள்உள்பட-'துக்கநாள்- இது ஒரு அதிகாரமற்ற மேடோவர்' நாள் என்று பெரியார் சொன்னதை அன்று வன்மையாகக் கண்டித்தனர்!

வெள்ளைக்காரனிடமிருந்து வடநாட்டு மற்றும் பார்ப்பனக் கொள்ளைக்காரனுக்கு அதிகாரத்தை மாற்றிக் கொடுத்த நாள்! வெள்ளையன் சாவியை விட்டெறிந்த நாள் என்றார் பெரியார்! ''சுதந்திர நாடு'' என்றால் அங்கு தாழ்ந்த நாலாஞ்ஜாதி, 'சூத்திரன்' - (பார்ப்பனரின் தாசி மகன்), பஞ்சமன், பறையன், பள்ளன், சக்கிலி, தோட்டி, உயர்ந்த ஜாதி 'பார்ப்பான்' என்ற பேதமில்லா நாடாக, ''மனிதன்''மட்டுமே உள்ள நாடாக, பிறவி இழிவு இல்லா நாடாக இருப்பதுதானே ஒரு சுதந்திர நாட்டின் இலட்சணம். அது இந்த 69 ஆண்டுகால ''சுதந்திரத்தில்'' இங்கே கிடைத்துள்ளதா?

''அடானிகளுக்கும்'', ''அம்பானிகளுக்கும்'' கிடைத்துள்ள, வாய்ப்பும், வசதியும், ஆதிதிராவிட அமாவாசைக்கும், மண்ணாங்கட்டிக்கும், மீதி திராவிட சூத்திர சுப்பன், குப்பன்களுக்குக் கிடைத்துள்ளதா மனிதகுலத்தின் சரிபகுதியான நம்மாதர்லங்கள் அன்றாடம் சந்திக்கும் அவலங்களும், வன்கொடுமைகளும், வேதனைகளும், அவமானங்களும் இன்றும் குறைந்துள்ளதா? ''நிர்பயாக்கள்'' நிலைமை மாறியுள்ளதா? கறுப்புப் பணம் திரும்பி வந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் பொத்தென்று கொட்டியுள்ளதா?

உண்ணும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் 'சுதந்திரம்' நம் குடிமக்களுக்கு உண்டா? ஏற்கெனவே இருந்த உரிமையும் பறிபோனதுதானே மிச்சம்? ''ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக் கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே''
என்று பாடிய அப்பர் அடிகளின் பாட்டுக்குஇன்றைய'இந்துத்துவாவில்'இடம்உண்டா அவர்கள்வாழவேஉரிமைஉண்டா? இடம் இருந்திருந் தால் காந்தி பிறந்த மண்ணில், பிரதமர் மோடி மாநிலத்தில்'உன்னாக்கள்' நடக்குமா?

சிறுபான்மை - பெரும்பான்மை எல்லா பான்மையும் ஒருமையுடன் உறவு கலந்து வாழ்வதுதானே உண்மை ஜனநாயகக் குடிஅரசு? இன்று அந்நிலை உண்டா? ''வேற்றுமையில் ஒற்றுமை'' என்ற நிலைப்பாடு, பன்மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் உள்ள ''பரந்த பாரத தேசத்தில்'', ''சிறந்த ஞானபூமியில்'' இன்று உண்டா? மனச்சாட்சிப்படி பதில் கூற முடியுமா? நம் இந்திய ''இறையாண்மை'' காப்பாற்றப்பட்டுள்ளதா?

''விதேசிகளைவிரட்டினோம்;சுதேசிகளை ஊக்குவிப்பீர்''என்ற''சுயமரியாதை''முழங்கிய தேசியத்தவர்கள்,'24கேரட்தேச பக்தர்களே!' இன்று பாதுகாப்பு தளவாட உற்பத்திகள் கூட 100 சதவிகித அன்னிய முதலீட்டில்தானே! (தனியார் துறையில்தானே).

அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தில் இடந்தேட ஆலாய்ப்பறந்து, தோல்வியில் திரும்பியது தான் நமது சுதந்திரத்தின் இறையாண்மைப் பெருமையா? வெட்கக்கேடு அல்லவா?

கல்வியில்கூட 'குலக்கல்வி' மீண்டும் அவதாரம், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நம் வாசல்களை அகலமாகத் திறந்து, உள்நாட்டுக் கல்விக் கூடங்களைக் காணாமற் செய்யும் கன வேக சிவப்புக் கம்பள வரவேற்பு. தடபுடல் சுதந்திரம். இத்தியாதி! இத்தியாதி!!

நமது அரசமைப்புச் சட்ட முகவுரை கூறும் அய்ந்து கூறுகள்:

1. இறையாண்மை
2. சமதர்மம்
3. மதச்சார்பின்மை
4. ஜனநாயகம்
5. குடிஅரசு

இதன் தன்மைகள் - சமவாய்ப்பு- ஜாதி ஒழிப்புக்கு இடம் உண்டா? இட ஒதுக்கீடு உண்டா? உச்சநீதிமன்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக உயர்ஜாதி ஆதிக்கம்தானே! பார்ப்பன - பனியா ஆதிக்கம்தானே!

எழுத்துரிமை, கருத்துரிமைக்கு உத்திரவாதம் உண்டா? பல மாநில உயர்நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் உண்டா? (பிற்படுத்தப்பட்டோர் ஓரிருவர், தாழ்த்தப்பட்டோர் 0) ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடும் 'சும்மா!' மத்திய அரசு பதவிகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உண்டா? 27 சதவிகிதத்திற்கு - 12 சதவிகிதம்கூட இல்லை 23 சதவிகிதத்திற்கு - 14 சதவிகிதம்கூட இல்லை என்ற யதார்த்தம்தானே இன்றைய (சு)தந்திரக்காட்சி?

உண்மை ஜனநாயகம் இருந்தால் 'பசுப் பாதுகாப்புக்' கொலைகளும், ஆணவக் கொலைகளும், காப்பஞ்சாயத்துக் கொலைகளும்நடக்குமா? என் நாட்டுச் சுதந்திரத்தைக் கொண்டாடத்தான் குடிமகன் நினைக்கிறான். ஆனால், கொண்டாட முடியவில்லையே - பெரியார்தானே ''தீர்க்கதரிசியாக'' இன்றும் உயர்ந்து நிற்கிறார்!'' இவ்வாறு அந்த அறிக்கையில் வீரமணி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dravidar Kazhagam (DK) leader K Veeramani issued statement about Independence Day
Please Wait while comments are loading...