For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா பல்கலைக்கழக நியமனங்களில் அளவே இல்லாமல் முறைகேடுகள்...: கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களில் அளவற்ற முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

விண்ணப்ப தேதி முடிந்து ஆறு மாதங்கள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது திடீரென அவசர அவசரமாக எழுத்துத் தேர்வையும், நேர்காணலையும் குறைந்த நாட்களிலேயே நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருப்பதில் இருந்தே பெரிய அளவில் முறைகேடுகள் நடத்த முடிவு செய்திருப்பது நன்றாக தெரிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம்...

அண்ணா பல்கலைக்கழகம்...

தமிழக அரசின் ஆட்சி முடிவுக்கு வருகின்ற நிலையில், ஐந்தாவது ஆண்டின் இறுதிக் கட்டத்தில், துணை வேந்தர் முதல் ஆசிரியர்கள் பணி வரை நியமனம் செய்வதில் ஊழல், பேரம் நடைபெறுவதாக எங்கும் பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணிகளுக்கு நியமனம் செய்வதில் பல தவறுகள் நடைபெறுவதாக தொடர்ந்து ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களின் நலன் கருதி, அண்ணா பல்கலைக் கழகம், ஐந்து பல்கலைக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றின் கீழ் 17 பொறியியல் கல்லூரிகள் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வந்தன.

பணி நியமன விளம்பரம்...

பணி நியமன விளம்பரம்...

அங்கே தகுதியான 626 பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக் கழகங்கள் ஐந்தும் மீண்டும் இணைக்கப்பட்டன. அண்மையில் 112 உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கும், 178 இணைப் பேராசிரியர் பணி இடங்களுக்கும், 102 பேராசிரியர் பணி இடங்களுக்கும் நேரடி நியமனத்தின் மூலம் பணி நியமனம் செய்ய அண்ணா பல்கலைக் கழகம் விளம்பரம் செய்தது.

தகுதி...

தகுதி...

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 31-7-2015 கடைசித் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விண்ணப்பிப்பவர்கள் 11-7-2015 அன்றைய நிலையில் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டுமென்றும்; உதவிப் பேராசிரியர் பணி இடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் எம்.இ. முதுநிலை பொறியியல் படிப்பு முடித்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு எம்.இ. படிப்பு முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோரின் விண்ணப்பங்களை பல்கலைக் கழகம் முதலில் நிராகரித்துவிட்டது. இதில் எம்.இ. படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றவர்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐயப்பாடு...

ஐயப்பாடு...

இந்த நிராகரிப்பு பற்றி நாளிதழ் ஒன்று பெரிதாகச் செய்தி வெளியிட்ட பிறகு, அண்ணா பல்கலைக் கழகம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று கூறியிருக்கிறது. சமாளிப்பதற்காக இவ்வாறு கூறிய போதிலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உண்மையில் பரிசீலிக்கப்படுமா என்ற பலத்த அய்யப்பாடும் எழுந்துள்ளது.

விண்ணப்பங்கள்...

விண்ணப்பங்கள்...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட பிறகு, ஆறு மாதங்கள் அதுபற்றி எந்தத் தகவலும் இல்லை. ஆனால் கடந்த 18ஆம் தேதி திடீரென்று ஓர் அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட்டது. அதில் 23-1-2016 அன்று காலையில் கட்டிடவியல் பிரிவுக்கும், 24ஆம் தேதி காலையில் மின்னணு தகவல் தொடர்பியல், பிற்பகலில் மின்சாரம், மின்னணுவியல் பிரிவுகளுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. விடைத்தாள்கள் உடனுக்குடன் திருத்தப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

முறைகேடு...

முறைகேடு...

விண்ணப்ப தேதி முடிந்து ஆறு மாதங்கள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டு, தற்போது திடீரென்று அவசர அவசரமாக எழுத்துத் தேர்வினையும், நேர்காணலையும் இவ்வளவு குறைந்த நாட்களிலேயே நடத்தப் போவதாக இணைய தளத்தின் மூலமாக அறிவித்திருப்பதில் இருந்தே இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடத்த முடிவு செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் யார் யார் என்பதை அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சரும் சேர்ந்து ஏற்கனவே முடிவு செய்து பட்டியலிட்டு விட்டதாகவும், தற்போது தேர்வு என்பதெல்லாம் ஏமாற்றுகின்ற வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்றும் விண்ணப்பித்தவர்கள் கூறி வேதனைப்படுறார்கள்.

வழக்குகள்...

வழக்குகள்...

மேலும் பணி இடங்களுக்கான விளம்பரத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்குரிய ஏற்கனவே நிரப்பப்படாத பணியிடங்கள், மற்றும் மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் ஆகியோருக்குரிய ஏற்கனவே நிரப்பப்படாத பணி இடங்கள் மறைக்கப்பட்டு, அந்தப் பணி இடங்களை, பொதுத் தொகுப்பில் உள்ள பணி இடங்களாக மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கடுமையான புகார் கூறப்படுகிறது.

வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்...

வழக்கு தொடர்ந்துள்ள நிலையில்...

இது குறித்து சென்னை உயர் நீதி மன்றம், மதுரைக் கிளையில் பலர் வழக்குகள் தொடர்ந்துள்ள நிலையில், அண்ணாப் பல்கலைக் கழகம் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ள எந்தப் பிரச்சினைக்கும் உரிய தீர்வு காணாமல் அவசர அவசரமாக எழுத்துத் தேர்வினை 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடத்துவதாக 18-1-2016 அன்று அறிவித்து விட்டு; பின்னர் அனைத்து எழுத்துத் தேர்வுகளும், 24-1-2016 அன்று நடைபெறும் என்றும், அன்று மாலையிலேயே எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கான ஆணை நேரடியாக பல்கலைக் கழகத்திலேயே வழங்கவும் முடிவு செய்து 22-1-2016 அன்று அறிவித்திருக்கிறார்கள்.

சப்தமில்லாமல் ஊழல்...

சப்தமில்லாமல் ஊழல்...

ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொள்ளும் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, முடிவும் அன்றே அறிவிக்கப்பட்டு, நேர்முகத் தேர்விற்கான ஆணைகள் அப்போதே பல்கலைக் கழக வளாகத்திலேயே நேரடியாக வழங்கப்படும் என்பது ஊழல் முறைகேடுகளை சப்தமில்லாமல் நடத்துவதற்காகவே என்ற சந்தேகம் எல்லோ ருக்கும் ஏற்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வுகளுமே சடங்குக்காக மட்டுமே அல்லாமல், வெளிப்படைத் தன்மையோடு நேர்மையாக நடத்தப்படுபவை அல்ல என்று பலரும் எண்ணுவதை அடிப்படை ஆதாரமற்றது என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.

அவகாசம் தேவை...

அவகாசம் தேவை...

இந்தப் பெரும் முறைகேட்டில் துணை வேந்தரும், அமைச்சரும் ஈடுபட்டிருப்பதாக பல்கலைக் கழகத்தின் அனைத்துத் தரப்பிலும் கூறப்படுவதால், இந்தத் தேர்வுகளை அவசரம் காட்டாமல் ஒரு சில நாட்கள் தள்ளி வைத்து முறையாக தேவையான நாட்கள் அவகாசம் கொடுத்து எதிலும் ஒளிவுமறைவின்றி நடத்துவது தான் நியாயமாக இருக்கும். அத்துடன், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எவ்வித ஊனமும் ஏற்பட்டு விடாமல், காலிப்பணி இடங்களைச் சரியாகக் கணக்கிட்டு அறிவிக்கை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
The DMK president Karunanidhi has accused that there is a corruption in Anna university appointments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X