For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாதி கொலை, வினுப்பிரியா தற்கொலை.. கருணாநிதி கடும் கண்டனம்! போலீசுக்கு அட்வைஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காவல் துறையினர் ஆட்சியிலே இருப்போருக்குப் பாதுகாப்புப் பணியிலே ஈடுபடுவதும், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் மட்டுமே தங்கள் பணி என்று நினைக்காமல், சாதாரணப் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பணியிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அப்படி ஈடுபடாமல் இருந்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பட்டப் பகலில் நடைபெற்று வரும் படுகொலைகளில் ஒன்றாக, 24-6-2016 அன்று நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண், பொதுமக்கள் முன்னிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கழகத்தின் சார்பில், பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் சுவாதியின் இல்லத்திற்கே சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வந்திருக்கிறார். பொது இடத்தில் நடைபெற்ற இந்தப் படுகொலை குறித்து தமிழகம் முழுவதும் பல கண்டனங்கள் காவல் துறைக்கு எதிராக வந்துள்ளன.

Karunanidhi condemned for swathi murder and Vinupriya suicide incidents

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான மேதகு என்.கிருபாகரன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மேதகு சஞ்சய்கிஷன் கவுலுக்கு, 28-6-2016 அன்று எழுதிய நீண்ட கடிதத்தில், "கடந்த 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொது மக்களின் முன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததையும், அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததையும் வெளிக் காட்டியுள்ளது. அறிவியல் வளர்ச்சியினால் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

நுங்கம்பாக்கத்தில் இப்படி ஒரு கொடூரக் கொலை நடந்திருப்பது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அந்தப் பெண் தன்னைக் காப்பாற்றும்படி அபயக் குரல் எழுப்பியும், யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை. அதனால், ஒரு அனாதை போல ரெயில் நிலையத்தில் பிணமாக பல மணி நேரத்துக்குக் கிடந்துள்ளார்.

தேவையற்றவைகளுக்காக கோடிக் கணக்கில் அரசு செலவு செய்கின்றது. அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கடற்கரை என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்தால், அது பொது மக்களுக்குப் பயன் அளித்திருக்கும்.

சென்னை ரெயில்வே மண்டலத்தில் மட்டும் 300 போலீஸ் பணி இடங்கள் காலியாக பயணிகளுக்கு முறையான பாதுகாப்பை வழங்கப் போலீசாரால் முடியவில்லை. ரெயில் நிலையங்களில் போலீசார் ரோந்து பணி செல்லாததாலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததாலும், இளம் பெண் சுவாதியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்கள் பல சென்னை புறநகரில்தான் உள்ளன. அங்கு பணி செய்யும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர். எனவே அந்த ஊழியர்கள், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும், தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளுக்கு பின்வரும் 10 கேள்விகளைக் கேட்க வேண்டும். அவற்றைச் செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்றெல்லாம் நீதிபதி கிருபாகரன் அவர்கள் எழுதியிருப்பதோடு, பின்வரும் பத்து கேள்விகளை மத்திய, மாநில அரசுகளிடம் கேட்க வேண்டுமென்றும் எழுதியிருக்கிறார்.

அந்தப் பத்துக் கேள்விகளில் முக்கியமாக - முக்கிய இடங்களில் ஏன் கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தக் கூடாது - கேமராக்களைப் பொறுத்த போதுமான நிதியை ஏன் அரசு இதுவரை ஒதுக்கவில்லை- மாநில போலீஸ், ரெயில்வே போலீஸ் மற்றம் இதர பாதுகாப்பு படைப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை - போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் முக்கியத் துவத்தை அறிந்தும், இந்தக் காலிப் பணி இடங்களை அரசு ஏன் நிரப்பவில்லை - என்பன போன்ற கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார்.

இந்தக் கடிதத்தைப் படித்த தலைமை நீதிபதி கவுல் அவர்கள், இந்தக் கடிதத்தையே ஒரு மனுவாகக் கருதி, தாமாக முன் வந்து, வழக்குப் பதிவு செய்து உத்தரவிட்டிருக்கிறார். அந்த வழக்கு நேற்றையதினம் தலைமை நீதிபதி, மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் எழுப்பியுள்ள பத்து கேள்விகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள் என்ற செய்தியும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.

நீதிபதி என். கிருபாகரன் தலைமை நீதிபதிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் சுவாதியைப் பாதுகாக்கத் தவறியதற்காக சுவாதியின் பெற்றோருக்கு ரெயில்வே அமைச்சகம் ஏன் இழப்பீடு வழங்கக் கூடாது என்றும் கேட்டிருக்கிறார். சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்டதைப் போல, சேலத்தில் வினுப்பிரியா என்ற 22 வயது ஆசிரியையின் படத்தை யாரோ மாற்றி, ஆபாசமாக வெளியிட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் பெற்றோர் கலெக்டரைச் சந்தித்து கதறியிருக்கிறார்கள்.

நாளேடுகள், கிழமை இதழ்கள் எல்லாம் தமிழகத்தில் பட்டப் பகலில் நடைபெறும் இப்படிப்பட்ட வன்முறைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன.

இப்படிப்பட்ட சம்பவங்களின் காரணமாக மறைந்தவர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காவல் துறையினர் ஆட்சியிலே இருப்போருக்குப் பாதுகாப்புப் பணியிலே ஈடுபடுவதும், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் மட்டுமே தங்கள் பணி என்று நினைக்காமல், சாதாரணப் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற பணியிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அப்படி ஈடுபடாமல் இருந்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Karunanidhi condemned for swathi murder and Vinupriya suicide in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X