For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும் -கருணாநிதியின் ஓணம் வாழ்த்து

Google Oneindia Tamil News

Karunanidhi greets Malayalis on Onam festival
சென்னை: ஓணம் திருநாள், வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணவமும் அகம்பாவமும் அழிக்கப்பட வேண்டும்; அன்பு, ஓற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பனவற்றை மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் என மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.

மாபலிச் சக்கரவர்த்தி பகைவரால் வெல்ல முடியா வீரனாகவும், மக்கள் நலம்நாடி நல்லரசு செலுத்திய வேந்தனாகவும் விளங்கியவன் என்றும்; வஞ்சகத்தால் அவனை வெல்லக் கருதிய பகைவர் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு குள்ளமான வடிவுகொண்டு மாபலியிடம் மூன்றடி மண் யாசகமாகக் கேட்க; மாபலியும் அதனைத் தானமாகத் தர, உடனே விஷ்ணு வானளாவிய வடிவெடுத்து, மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்து, மூன்றாம் அடியை மாபலியின் தலையில் வைத்து அவனை அழித்தான் என்றும் புராணக் கதையொன்று புகல்கிறது.

புராணக் கதைப்படி வஞ்சகத்தால் கொல்லப்பட்ட அந்த மாமன்னனின் ஆற்றலை கேரள மக்கள் இன்றும் போற்றி வருகின்றனர். கேரள மக்கள் அந்த மாபலி மன்னன் ஆண்டுக்கொரு முறை தம் நாட்டைக் காண வருவான் என்றும்; அப்போது அவன் தம் இல்லம் வருவான் என்றும் கருதி, அந்த நம்பிக்கையோடு அவனை வரவேற்க தம் இல்லத்தை அழகுபடுத்தி, வாசலில் ‘அத்தப்பூ' எனும் சித்திரக் கோலங்கள் இட்டுக் கொண்டாடி மகிழும் நாள் இந்த ஓணம் திருநாள்.

இந்த ஓணம் திருநாள், வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணவமும் அகம்பாவமும் அழிக்கப்பட வேண்டும்; அன்பு, ஓற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பனவற்றை மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது.

ஓணம் திருநாளைத் தமிழகத்தில் வாழும் கேரள மக்கள் அனைவரும் உற்றார் உறவினர் நண்பர்கள் சூழச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறைந்து வாழும் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்குக் கழக அரசு காலத்தில் 2006ஆம் ஆண்டிலும்; சென்னை மாநகருக்கு 2007ஆம் ஆண்டிலும் அரசு விடுமுறை வழங்கிக் கேரள மாநில மக்களின் உணர்வுகளைப் போற்றிய நிகழ்வுகளை நினைவுகூர்கிறேன்.

திராவிட மொழிக் குடும்பங்கள் எனும் உணர்வுடன் அண்டை மாநில மக்களோடு என்றும் நல்லுறவு பேணுவதையே விரும்பிடும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has greetsd Malayalis residing in Tamil Nadu on Onam festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X