For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பவானி சிங் நீக்கம் ரத்து - கோர்ட் தீர்ப்பு குறித்து நான் கருத்து தெரிவிப்பதில்லை -கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். நீதிமன்றத் தீர்ப்பு குறித்து நான் எப்போதுமே கருத்து தெரிவிப்பதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள்...

Karunanidhi's comments on SC order on Jaya assets case PP

கேள்வி - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பதவி நீடிப்பு வழங்க வேண்டுமென்று, ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி தங்கள் கருத்து என்ன?

கருணாநிதி - உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, உயர்நீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ நான் எப்போதும் கருத்து தெரிவிப்பதில்லை. இந்த வழக்கினைப் பொறுத்தவரையில், காலையில் செய்தி வந்தபோது, நீதிபதியின் நீடிப்பு குறித்து கர்நாடக அரசு, கர்நாடக உயர் நீதிமன்றத்தோடு கலந்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

கேள்வி - மாலையில் உச்ச நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பை படித்தபோது, கர்நாடக மாநில அரசு கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தோடு ஆலோசனை செய்து இதே நீதிபதியை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது பற்றி முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தாகக் கூறியிருக்கிறது.

கருணாநிதி - ஒப்பந்த அடிப்படையில் மறு நியமனம் செய்யப்பட்டு இது போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டால் அது ஏற்கத்தக்கதா என்பதில் சட்ட வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையே இதுவரை அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாலகிருஷ்ணா இன்றோடு அவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, நீதிபதி முடிகவுட அவர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து விட்டார். மாநில அரசு என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கேள்வி - பதவியிலிருந்து ஓய்வு பெற்று சென்று விட்ட நீதிபதி பால கிருஷ்ணா மீண்டும் ஒப்பந்த அடிப்படையிலே அந்த பதவிக்கு வருவாரா?

கருணாநிதி - நான் அறிந்த வரையில், நீதிபதி பாலகிருஷ்ணா தன் மீது ஒரு பிரச்னை நீதிமன்றத்திலே வெளி வந்த நிலையில் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நீதிபதியாக வந்து இந்த வழக்கை விசாரிப்பார் என்று நினைக்கவில்லை.

கேள்வி - இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட வேண்டிய அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கர்நாடக மாநில அரசே நீக்கி நடவடிக்கை எடுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்திருக்கிறதே?

கருணாநிதி - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட வேண்டியவர் அவர். ஆனால் சாட்சிகளைக் கூட அவர் குறுக்கு விசாரணை செய்யவில்லை. அரசு வழக்கறிஞராக அவர் ஆற்றியிருக்க வேண்டிய பல கடமைகளை நிறைவேற்றவில்லை. அதைத் தான் பேராசிரியர் அன்பழகன் தி.மு.க. சார்பில் எடுத்துக் கூறி பவானி சிங்கை நீக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கிடையே கர்நாடக மாநில அரசு அவரை நீக்கி ஆணை ஒன்று பிறப்பித்தது. அந்த ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்று தான், ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருந்தார். அதைத்தான் ஏற்றுக் கொண்டு, உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநில அரசு, பவானி சிங்கை பதவி நீக்கம் செய்த ஆணையை ரத்து செய்துள்ளது.

இப்போது வழங்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலே கூட, தி.மு.க. சார்பில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தாமல், அவை குறித்து தனியாக விசாரணை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே அரசு வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில் பவானி சிங் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK chief Karunanidhi has commented on the SC order on Jaya assets case PP issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X