For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடன்பிறப்பே, உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முப்பெரும் விழாவுக்கு வருமாறு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

வரும் 15ம் தேதி திமுக சார்பில் சென்னையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கட்சியினருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

முப்பெரும் விழா

முப்பெரும் விழா

உடன்பிறப்பே, இந்த ஆண்டு முப்பெரும் விழாவிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. மாநாடுகள் என்றாலோ, போராட்டங்கள் என்றாலோ கழக உடன்பிறப்புகளை எல்லாம் அதற்கு அழைத்து நான்கைந்து கடிதங்கள் எழுதுவேன். இது ஆண்டுதோறும், தலைமைக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் முப்பெரும் விழா - பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 136வது பிறந்த நாள் - பேரறிஞர் அண்ணா அவர்களின் 106வது பிறந்த நாள் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் 66வது பிறந்த நாள் - இந்த மூன்று நாள்களையும் இணைத்துத்தான் ஆண்டுதோறும் முப்பெரும் விழாவாக நாம் கொண்டாடி வருகிறோம்.

சென்னை

சென்னை

செப்டம்பர் 15! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை நம் நினைவில் பதித்து - நெஞ்சில் செதுக்கிய - நிகரில்லாத் தமிழர் கோமான் யார் என்ற கேள்விக்கு - ஒரே விடையாக விளங்குகின்ற வித்தகர் - தன்மானக் குன்றம் - தரணி வாழ் தமிழர்க்கெல்லாம் பெரு மன்றம் - தகைமைக்கு இலக்கணமாய் - பகைமைக்கும் பரிவு காட்டும் நற்குணச் செல்வமாய்த் திகழும் பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாள்! அந்த நாளிலேயே இந்த ஆண்டு முப்பெரும் விழாவினை நாம் சென்னையில் நடத்து கின்றோம்.

அண்ணா சிலை

அண்ணா சிலை

செப்டம்பர் திங்கள் 15ஆம் நாள் காலை 7.30 மணியளவில், சென்னை வள்ளுவர்கோட்டத்திற்கு எதிரே அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவச் சிலைக்கு நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் தளபதி ஸ்டாலினும் மற்றும் கழக முன்னணியினரும் வழக்கம் போல மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறோம்.

விருது

விருது

அன்று மாலையில் முப்பெரும் விழா விருது வழங்கும் நிகழ்ச்சி - திமுக அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நிதியளிப்பு நிகழ்ச்சி - முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி - சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பண முடிப்பு, பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி அத்தனையும் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மாணவர்கள்

மாணவர்கள்

முப்பெரும் விழா மேடையில் - அண்ணா அவர்கள் தன் வாழ்வில் மாணவர்கள்பால் பெரிதும் அன்பும் அக்கறையும் கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாடுபட்டார் என்பதற்கு அடையாளமாக - மேல் நிலைப் பள்ளித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு திமுகழக அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் நிதியளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, தொழிலாளர்கள்பால் அண்ணா நேசம் கொண்டவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்குவதைப் போலவே இந்த ஆண்டும் சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நற்சான்று, பண முடிப்பு, பதக்கம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

குமரிமுத்து

குமரிமுத்து

இவற்றைத் தொடர்ந்து முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி - அந்த விழாவிற்கு பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் தலைமை தாங்கிட தந்தை பெரியார் விருதினை பழம்பெரும் கழக உடன்பிறப்பு, கர்நாடக மாநிலத்தில் கழகம் வளர்த்தவர்களில் ஒருவரான பெங்களூரு வி.டி.சண்முகம் அவர்களுக்கும், அண்ணா விருதினை கழக உடன்பிறப்பு திருமதி முனவர் ஜான் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை சிறு வயது முதல் பட்டிதொட்டியெங்கும் கழகப் பிரச்சாரம் செய்து வரும் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்களுக்கும் என் பெயரால் உள்ள கலைஞர் விருதினை கலையுலக உடன்பிறப்பு, எதையும் எதிர்பாராது இயக்கப் பணியாற்றும் குமரிமுத்து அவர்களுக்கும், என்னால் வழங்கப்படவுள்ளது. தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. வரவேற்புரை ஆற்றிடவுள்ளார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

பொருளாளர் தம்பி தளபதி மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு நா. வீரா சாமி, துணைப்பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, திருமதி சற்குண பாண்டிய ன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிட இருக்கிறார்கள்.

30வது ஆண்டு

30வது ஆண்டு

திமுகழகம் எடுக்கும் முப்பெரும் விழாவில் கழகச் சான்றோர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி என்பது 1985ஆம் ஆண்டு முதல் ஒரு ஆண்டு கூட தொய்வின்றி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது ஆகிய மூன்று விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. 2000ம் ஆண்டு முதல் பாவேந்தர் விருதும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஆண்டுதோறும் நான்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சி என்பது முப்பதாவது ஆண்டாகும். இதுவரை 101 பேருக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முப்பதாவது ஆண்டில் விருதுக்குரியவர்கள் யார் யார் என்பதை முதலில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

பெரியார் விருது

பெரியார் விருது

பெரியார் விருது பெறும் பெங்களூரு வி.டி.சண்முகம் கழகத்தின் வளர்ச்சியே தனது உயிர் மூச்செனக் கொண்டு கழகத்தில் பணியாற்றி வருபவர். கர்நாடக மாநிலத்தில் கழகத்திற்கென சொந்த தலைமை அலுவலகம் அமைந்திட வேண்டும் என அரும்பாடுபட்டு பெங்களூர் இராமச்சந்திராபுரம் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டி அதற்கு "கலைஞரகம்" என்ற பெயரைச் சூட்டியதுடன், பெங்களூர் சீராமபுரம், சுதந்திர நகர் பகுதியில் கழகத்தின் எந்தவொரு கிளைக் கழகத்திற்கும் சொந்தக் கட்டிடம் இல்லாத நிலையில் மூன்று அடுக்கு மாளிகை கட்டி அதற்கு "கலைஞர் அறிவாலயம்" என பெயர் சூட்டப்பட்டதற்காக பெரிதும் உழைத்தவர். இத்தகு சிறப்புக்குரிய பெங்களூரு வி.டி.சண்முகம் அவர்கள் ஆற்றி வரும் கழகத் தொண்டினைப் பாராட்டிடும் வகையில் தலைமைக் கழகத்தின் சார்பில் பெரியார் விருது இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

அண்ணா விருது

அண்ணா விருது

அண்ணா விருது பெறும் திருமதி எஸ்.ஏ.முனவர் ஜான் தன்னுடைய இளம் வயதிலேயே பொதுப்பணியில் ஆர்வம் கொண்டு, அதற்கேற்ற இடம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்றுணர்ந்து அதில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருபவர். தலைமைக் கழகம் மற்றும் மாவட்டக் கழகம் அறிவிக்கும் அனைத்து மக்கள் நலப் போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகளில் தவறாது பங்கேற்பவர். போராட்டத்தின் காரணமாக இருமுறை கைதானவர். ஒவ்வொரு தேர்தலிலும் நமது கழகத்தின் வேட்பாளர்களுக்காக வீடுவீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்க முழுமூச்சுடன் ஈடுபட்டு, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட்டு வருபவர். இத்தகைய சிறப்புக்குரிய திருமதி எஸ்.ஏ. முனவர் ஜான் அவர்களது கழகப் பணியினைப் பாராட்டிடும் வகையில் தலைமைக் கழகத்தின் சார்பில் இவருக்கு அண்ணா விருது வழங்கப்படவுள்ளது.

பாவேந்தர் விருது

பாவேந்தர் விருது

பாவேந்தர் விருது பெறும் திருமதி. புதுக்கோட்டை விஜயா கழகக் கொள்கை முழக்கம் செய்வதையே தனது கடமையாகக் கொண்டவர். தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்தவர். தமிழகத்தில் அவர் பேசாத நகரங்கள் இல்லை. மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக, புதுக்கோட்டை மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக, பின்னர் மகளிர் அணி பிரச்சாரக் குழுச் செயலாளராக பணியாற்றி, மகளிர் அணிச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் ஆற்றும் தொண்டினைப் பாராட்டிடும் வகையில் தலைமைக் கழகத்தின் சார்பில் முப்பெரும் விழாவில், இவருக்கு பாவேந்தர் விருது வழங்கப்படவுள்ளது.

கலைஞர் விருது

கலைஞர் விருது

என் பெயரால் வழங்கப்படும் கலைஞர் விருது இந்த ஆண்டு நகைச்சுவை நடிகர் குமரி முத்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தன்னுடைய இளம் வயதிலேயே பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவினைக் கேட்டு, கழகத்தின் அபிமானியாக மாறியவர் இவர். திரைத்துறையில் புகழ் பெற்று விளங்கிய நடிகர் நம்பிராஜன் அவர்களின் உடன்பிறந்த தம்பி என்பதால் நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் தனது நாடகக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டார்.

இவருடைய சிரிப்பே இவரது புகழை அதிகப்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதால் "கலைமாமணி", "கலைச்செல்வம்", "கலைவாணர்" ஆகிய விருதுகளைப் பெற்றவர். பகுத்தறிவுப் பாசறையாம் திராவிடர் கழகம் இவருக்கு "பெரியார் விருது" வழங்கி கௌரவித்துள்ளது. இத்தகைய சிறப்புக்குரிய குமரி முத்துவின் பெருமைகளுக்கு மேலும் சிறப்புச் சேர்த்திடும் வகையிலும், அவரது தொண்டினைப் பாராட்டிடும் வகையிலும் இந்த ஆண்டு கலைஞர் விருது இவருக்கு வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் கேடயமும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கி ழியும் தலைமைக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது.

அழைப்பு

அழைப்பு

உடன்பிறப்பே, இந்த விழாக்கள் பற்றிய செய்திகள் ஏற்கனவே ஏடுகளில் வெளிவந்து அவற்றில் கலந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு நீ இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். இருந்தாலும், அண்ணாவின் விழாவிற்கு, அண்ணன் நான் அழைக்கவில்லையே என்ற குறை உனக்குமிருக்குமல்லவா? அதற்காகவே இந்தக் கடிதம்! தலைமைக் கழகம், அண்ணாவிற்கு விழா எடுத்த போதும், உனது சொந்த ஊரில் உன்னால் முடிந்த அளவிற்கு அண்ணாவிற்கு விழா எடுப்பாய் என்பதை நான் நன்கறிவேன். அதுதான் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசும். இருந்தாலும் சென்னையில் தலைமைக் கழகம் எடுக்கும் இந்த விழாவிற்கு நீ உன் குடும்பத்தோடு புறப்படத் தயாராகு!

வாலிப முறுக்கு

வாலிப முறுக்கு

மனக் கலக்கத்தில் ஒரு மணல் துளியளவு கூட தலைவனுக்கு வருதல் கூடாது என்று என் தம்பிமார்கள் எண்ணிடுவார்களேயானால்; அண்ணா போல் புன்னகை தவழும் முகத்துடன் அய்யா போல் நெஞ்சு நிமிர்த்திய நடையுடன் வயதான இந்தக் காலத்திலும் வாலிப முறுக்கு எனக்கும் வந்தே தீரும் தம்பீ! என்று திடம் கொள்கிறேன் - திசையெட்டுமிருந்து தீ பரவினாலும் - தீயோர் வலை நாள்தோறும் விரிக்கப்பட்டாலும் - கணைகள் ஆயிரமாயிரம் கடுகிப் பறந்து வரினும் கவலைப்படாது;
கருமமே கண்ணாக -
கழகமே பாசறையாக -
பெரியாரே துணையாக -
பேரறிஞர் அண்ணாவே என் உயிரின் இணையாக -
இருக்கும்போது; இந்த முப்பெரும் விழா நடைபெறுகிறது என்று நான் முன்பொருமுறை எழுதியதை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

அன்புள்ள,
மு.க. என்று அந்த கடிதத்தில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

முப்பதாண்டு காலமாக முப்பெரும் விழாவிலே தொடர்ந்து நான் கலந்து கொண்டு கழகத் தீரர்களுக்கு, கழகத்துக்காக உழைத்தவர்களுக்கு என் கையால் இந்த விருதுகளை வழங்கும் வாய்ப்பு பெறுகிறேன் என்பதை நினைத்தால்; என் மகிழ்ச்சிக்கு எல்லைதான் ஏது? விழாவிற்கு இன்னும் மூன்று நாட்கள் தான் உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி அன்பழகனும், தலைமைக் கழகத்தினரும் இணைந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டினைப் போலவே இந்த ஆண்டு முப்பெரும் விழாவினையும் சிறப்பிக்கச் செய்ய உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்!

English summary
DMK supremo Karunanidhi has written a letter to the party cadres inviting them to the Mupperum Vizha to be held in Chennai on september 15th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X