For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய வாக்காளர் சேர்ப்பு: திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது என்பது, பொறுப்பிலே உள்ளவர்களின் பணிதானே என்று நினைக்காமல், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அது தங்களுக்கு உரிய பணி என்று எடுத்துக் கொண்டு, பொறுப்பிலே இருப்பவர்களின் துணையோடு புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதிலும், பழைய வாக்காளர்களின் பெயர்களைச் சரிபார்ப்பதிலும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Karunanidhi's request to DMK men

வேளாண்மைத் துறைச் செயலாளராகப் பணியாற்றிய திரு. சந்தீப் சக்சேனா, ஐ.ஏ.எஸ்., தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு, அந்தப் பணியிலே அவர் பொறுப்பேற்று, செய்தியாளர்களுக்குத் தனது முதல் பேட்டியை அளித்திருக்கிறார். முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ள அவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் அளித்துள்ள முதல் பேட்டியில், "2014 ஜனவரி 1ஆம் தேதியுடன் 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரைச் சேர்க்கலாம். பெயர் சேர்ப்பதற்காகக் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 64,092 வாக்குச் சாவடி மையங்களில் அலுவலக நாளில் விண்ணப்பங்களைப் பெற்று, தங்கள் பெயரைச் சேர்க்கலாம். வேலைக்குச் செல்பவர்கள் அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி மையங் களுக்கு வந்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதற்காக, விடுமுறை நாளான அக்டோபர் 26 மற்றும் நவம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 27 ஆயிரம் மையங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால்தான் வாக்களிக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள வாக்குச்சாவடி மையம் சென்று பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரி பார்த்து, இல்லையெனில் பெயரை புதிய பட்டியலில் சேர்க்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், அது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அல்லது தேர்தல் அறிவிக்கை நிரல், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பிறகுதான் தொடக்கம் என்றோ, அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்தான் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டுமென்று நினைப்பது முற்றிலும் தவறாகும். தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தல் போன்ற பணிகள் மிகவும் இன்றி யமையாதவைகளாகும். தலைமைக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வந்தவுடன், ஓர் அறிக்கையினை முறைப்படி வெளியிட்டு, கழகத் தோழர்கள் புதிய வாக்காளர்களைச் சேர்த்திடும் பணியிலே உடனடியாக ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்வதும், அதனைக் கழக நாளேடான "முரசொலி" கட்டம் கட்டி பெரிதாக வெளியிடுவதும்தான் நடைபெறுகிறதே தவிர, "அந்தப் பணி கழக வேட்பாளர்களாக நிறுத்தப்படு பவர்களுக்கு மட்டுமே உரியது" என்றோ, "நமக்கும் அதற்கும் சம்பந்தமில்லை" என்றோ கழகத் தோழர்கள் எண்ணிக் கொண்டு, வாளா விருந்தால் அது மிகவும் தவறானதாகும்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம்தேதி வரை புதிய வாக்காளர்களைச் சேர்த்திடும் பணி நடைபெறும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் தலைமைக் கழகத்தின் சார்பிலும், நம்முடைய தம்பி முரசொலி செல்வம், முரசொலி இதழில் "எச்சரிக்கை, எச்சரிக்கை" என்ற தலைப்பிலே வெளியிட்ட "பெட்டிச் செய்தி" மூலமாகவும், வாக்காளர் சேர்க்கும் பணியில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பல நாட்களாகிய போதும், அந்தப் பணியில் கழக உடன்பிறப்புகள் போதுமான அளவுக்கு ஈடுபட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதே நேரத்தில் மாற்றுக் கட்சியினர், ஏன் அமைச்சர்களாக இருப்பவர்களே புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியிலும், முக்கியமான கழக உறுப்பினர்கள் என்று வெளிப்படையாகத் தெரிபவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலேயிருந்து நீக்குவதற்கான முறைகேடுகளிலும் ஈடுபடுவதாக எனக்குத் தகவல்கள் வருகின்றன.

25-4-2014 அன்று "இந்து" ஆங்கில நாளிதழில் ஒரு முக்கியமான செய்தி வெளி வந்திருந்தது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திலும், கடந்த தேர்தலைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்குப் பெருகியுள்ளது என்று கணக்கெடுத்து அறிவித்திருந்தது.

மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 2009இல் வாக்காளர்களின் எண்ணிக்கை 11 கோடியே 60 இலட்சம் ஆகும். இந்த எண்ணிக்கை 2014இல் 13 கோடியே 44 லட்சம் என்ற அளவுக்குப் பெருகியது. அதாவது 15.8 சதவிகிதம் கூடுத லாகும். மற்றொரு பெரிய மாநிலமான பீகார் மாநிலத்தில் 5 கோடியே 45 லட்சம் என்ற அளவில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2014இல் 6 கோடியே 21 லட்சம் என்ற அளவுக்கு அதாவது 13.9 சதவிகிதம் கூடுதலாயிற்று. மராட்டிய மாநிலத்தில் 7 கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் என்பது 7 கோடியே 90 லட்சம் என்ற அளவுக்கு, அதாவது 8.2 சதவிகிதம் அளவுக்குப் பெருகியது.

ஆந்திராவில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் என்பது 6 கோடியே 24 லட்சம் வாக்காளர்களாக, அதாவது 7.8 சதவிகிதம் கூடுதலாயிற்று. அதே நேரத்தில் தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை எப்படிப் பெருகிற்று தெரியுமா?

2009ஆம் ஆண்டு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சத்து 20 ஆயிரத்து 460 பேர். இந்த எண்ணிக்கை 2014இல் 5 கோடியே 37 லட்சத்து 52 ஆயிரத்து 682 பேராக உயர்ந்துள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டை விட 29.1 சதவிகிதம் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

இன்னும் சொல்லப்போனால், 1999ஆம் ஆண்டு தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 77 லட்சம் பேர். 2004ஆம் ஆண்டு 4 கோடியே 72 லட்சம் பேர். அதாவது 3 வாக்காளர் களின் எண்ணிக்கை குறைந்தது. அதற்குப் பிறகு 2009ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 16 லட்சம் பேர். அதாவது 12 சதவிகிதம் அளவுக்கு ஐந்தாண்டு களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் இந்தஎண்ணிக்கை கடந்த காலங்களில் குறைந்து கொண்டு வந்ததைப் போல், 2014ஆம் ஆண்டு மேலும் குறைந்து விடவில்லை; மாறாக 29.1 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்றால், என்ன பொருள்? புதிதாக வாக்காளர்களின் சேர்க்கை இந்த அளவுக்குப் பெருகியதற்கு என்ன காரணம்? அந்த அளவுக்கு புதிய வாக்காளர்கள் 2014ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்திலே சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட காரணத்தால்தான் அ.தி.மு.க. வுக்கு 37 இடங்கள் கிடைத்தன என்பது, ஆதாரப்பூர்வமாகத் தெரிகிறதா அல்லவா?

2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தலின் போதே, புதிய வாக்காளர் சேர்க்கையின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்திருந்தது. இந்த எண்ணிக்கை 2014இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, மேலும் பத்து சதவிகித அளவுக்கு புதிய வாக்காளர்கள் என்ற அளவில் அதிகரித்தது.

ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களில் 6லிருந்து 19 சதவிகிதம் அளவுக்குத்தான் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது எனும்போது, தமிழகத்திலே மட்டும் 29 சதவிகித அளவுக்குப் பெருக என்ன காரணம்? உண்மையான புதிய வாக்காளர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டார்களா? அல்லது வாக்காளர்கள் என்ற பெயரில் புதிது புதிதாகப் போலி வாக்காளர்கள் பெரிய எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டார்களா? சந்தேகம் வருமா வராதா? உடன்பிறப்பே, இந்தச் சந்தேகங்களையெல்லாம் போக்குகின்ற வகையில், தற்போது புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும்போது, பழைய வாக்காளர் பட்டியலிலே உள்ளவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா என்பதைச் சரி பார்க்கும் பணியிலும் நீ ஈடுபட்டாக வேண்டும். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான அட்டவணை "முரசொலி" நாளிதழில் 15-10-2014 அன்று தலைமைக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது என்பது, பொறுப்பிலே உள்ளவர்களின் பணிதானே என்று நினைக்காமல், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் அது தங்களுக்கு உரிய பணி என்று எடுத்துக் கொண்டு, பொறுப்பிலே இருப்பவர்களின் துணையோடு புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதிலும், பழைய வாக்காளர்களின் பெயர்களைச் சரிபார்ப்பதிலும் உடனடியாக ஈடுபட வேண்டும். இந்தப் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு கிளையிலும், கழகத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அதுபற்றிய குறைகளைத் தலைமைக் கழகத்தில் தெரிவிப்பதற்காக,

கழக உடன்பிறப்புகள் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபடுகிறீர்களோ, அதற்கு சற்றும் குறைந்திடாமல் - இன்னும் சொல்லப்போனால், அதை விட ஆர்வத்தோடு, வாக்காளர் பட்டியலிலே புதியவர்களைச் சேர்ப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டிட வேண்டும்.

உடன்பிறப்பே, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதில் அக்கறை காட்டுவதைப் போலவே, கடந்த முறை சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்பதையும் நீ உன்னிப்பாகக் கவனித்து விசாரித்து அறிய வேண்டும். ஏனென்றால், மாவட்டத் தேர்தல் அதிகாரிகளாக உள்ளவர்கள், குறிப்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், புதிய வாக்காளர்களாகச் சேருவதற்கான மனுக்களைப் பெற்ற போதிலும், வாக்காளர்களாகத் தவறுதலாக பட்டியலிலே இடம் பெற்றிருப்பவர்களை நீக்குவதிலே அவ்வளவாக அக்கறை காட்டவில்லை அல்லது அலட்சியப்படுத்துகிறார்கள் என்ற புகார் வந்துள்ளது. ஏற்கனவே இறந்தவர்களின் 4 பெயர்கள், வேறு இடத்திற்குப் பெயர்ந்து சென்றவர்கள், இரண்டு மூன்று இடங்களிலே வாக்காளர்களாக இருப்போர், ஒருவரே பல பெயர்களில் வாக்காளர்களாக இடம் பெற்றோர் என்று ஏராளமானவர்கள் தவறான வழிமுறைகளைக் கையாண்டு அந்தப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்களாம். அவ்வாறு கடந்த முறை சேர்த்த காரணத்தால் தான் 2009ஆம் ஆண்டினை விட 2014ஆம் ஆண்டில் வாக்காளர் களின் எண்ணிக்கை 29.1 சதவிகிதம் கூடுதலாகி, அப்படி வாக்காளர் பட்டியலிலே தவறாக - சட்டத்திற்குப் புறம்பாக இடம் பெற்றவர்கள் எல்லாம் வாக்களித்த காரணத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலிலே ஒரு கட்சிக்கு அபரிமிதமான வாக்குகள் கிடைக்கப் பெற்றன என்று கூறப்படுகிறது. அப்படிக் கூறப்படுவதில் அடிப்படை இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே உண்மையான வாக்காளர்கள் அல்லாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலே இடம் பெற்றிருந்தால், அந்த விபரங்களை உரிய அதிகாரியிடம் கொடுத்து, போலியாக இணைக்கப்பட்ட அந்தப் பெயர்களை நீக்குவதற்கான முயற்சிகளிலும் கழக உடன்பிறப்புகள் உறுதியாக ஈடுபட்டாக வேண்டும். அவ்வாறு போலியான வாக்காளர்களின் பெயர்களை நீக்கவேண்டுமென்று தரப்படும் மனுக்களை யாராவது அதிகாரிகள் ஏற்க மறுத்தாலோ அல்லது அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ, அதுபற்றி உடனடியாகத் தலைமைக் கழகத் திற்குத் தகவல் தெரிவித்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாகும். எனவே கழக உடன்பிறப்புகளும், வரவிருக்கின்ற கழகத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரும், கழகத்தின் சார்பில் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டிய இந்தப் பணியிலே தத்தமது பங்களிப்பைச் செலுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

"இடையறாத விழிப்புணர்வே ஜனநாயகத்திற்கு நாம் தரும் விலை" என்பதால், வெற்றி மீது மட்டும் கவனம் இருந்தால் போதாது; அந்த வெற்றிக்கு அடித்தளமான வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும், கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் தேர்தல்கள் நேர்மையாக நடைபெறும்; சட்டமன்ற ஜனநாயகம் நெறி பிறழாமல் செழுமை அடையும்! என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has requested the party men to indulge themselves in adding new voters' names in the list.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X