For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உப்பு இருக்கிறதா என்று கேட்டால் 'பினாமி முதல்வர்' பப்பு இருக்கிறது என்கிறார்: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரணை வேண்டுமென்று நானா கேட்டேன். பெரியவர் டிராபிக் ராமசாமி கேட்டார். அந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்டார்கள். அதற்கு பன்னீர்செல்வத்தின் பதில் என்ன என்று கேட்டால் - "உப்பு இருக்கிறதா என்று கேட்டால், பப்பு இருக்கிறது" என்று சொல்லும் மளிகைக் கடைக்காரரைப் போல - நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்குப் பதில் கூறிக் கொண்டிருக்கிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பற்றி பேசிய திமுக தலைவர் கருணாநிதியை கண்டித்து முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும், அதிமுக பொதுச் செயலாளரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது பற்றி கருணாநிதி பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கேள்வி, பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வசைபாடி

வசைபாடி

கேள்வி- கேரள எல்லையில் கன மழை பெய்த காரணத்தால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் கருத்திலே கொண்டு, இந்த நேரத்தில் உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் விடுத்த முறையான அறிக்கைக்கு முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே, உங்கள் மீது வசைபாடி அறிக்கை விடுத்துள்ளாரே?

கருணாநிதி- என்ன செய்வது? தூங்குபவர்களைத் தான் எழுப்ப முடியும்; தூங்குவது போல பாசாங்கு செய்பவர்களை என்ன செய்ய முடியும்? "பினாமி" அரசின் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தான் செயல்படுவதாகக் காட்டிக் கொள்ள படாதபாடு படுகிறார். அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடுவதிலேயே காலத்தைக் கழித்து விடலாம் என்று எண்ணுகிறார். அவருக்கு முதல்வராகச் செயல்படுவதை விட, அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியிலே இருக்கிறார் என்பது அவருடைய அறிக்கைகளைப் பார்த்தாலே தெரிகிறது.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பன்னீர் செல்வத்தையோ, அ.தி.மு.க. அரசையோ தற்போது நான் குறை கூறவில்லை. கேரள எல்லையிலே மிகுந்த மழை பொழிவதால், அதனைப் பயன்படுத்திக் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறினால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை விடுகிறார். முல்லைப் பெரியாறு பிரச்சினை யானாலும், வேறு எந்தப் பிரச்சினை ஆனாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் துரோகம் செய்தேன் என்று ஜெயலலிதா அல்ல, பன்னீர்செல்வம் அல்ல, வேறு யார் சொன்னாலும், அதை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. எனவே இனியாவது அந்த ஒன்றையே கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிராமல் வேறு ஏதாவது பயனுள்ள கருத்துகளை அறிக்கையிலே தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம்

கேள்வி - தமிழக சட்டப் பேரவைத் துறைச் செயலாளர், இறுதியாக 8-11-2014 அன்று ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்து விட்டாரே?

கருணாநிதி - ஐந்தாண்டு காலத்திற்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்ட அதிகாரி அல்லவா? அதற்காகவாவது நன்றி காட்ட வேண்டாமா? ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயலலிதா குற்றவாளி என்று செப்டம்பர் 27ஆம் தேதியே நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறைக்கு அனுப்பிவிட்டது.

அன்றைய தினம் முதல் ஸ்ரீரங்கம் தொகுதிக்குப் பேரவை உறுப்பினர் யாரும் இல்லை. காலியாகத்தான் உள்ளது. ஆனால் நம்முடைய சட்டப்பேரவைச் செயலாளர், ஜெயலலிதா சிறையிலே இருந்த 21 நாட்களுக்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்திலே ஜாமீன் மனு கோரி, அங்கே விடுவிக்கப்பட்டு, அவர் வீடு திரும்பிய அக்டோபர் 21ஆம் தேதிக்கு 18 நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் கமிஷனுக்கும் பத்திரிகைகளுக்கும் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பில், "27-9-2014 முதல் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் வகித்து வந்த இடம் வெற்றிடமானதாகக் கருதப்படுகிறது என்பது குறித்த அறிவிக்கை 8-11-2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பேரவைச் செயலகம் எவ்வாறு விரைவாகச் செயல்பட்டுள்ளது என்பதற்கு இதைவிடச்சான்று வேறு வேண்டுமா? 8-11-2014 அன்றே பேரவைச் செயலகத்திலே இந்த அறிக்கை தயாரான போதிலும், ஏடுகளுக்கு 9-11-2014 அன்றுதான் தரப்பட்டுள்ளது என்கிறது மற்றொரு தகவல்.

மைனாரிட்டி திமுக

மைனாரிட்டி திமுக

கேள்வி - அ.தி.மு.க.வினர், தி.மு.கழக அரசை "மைனாரிட்டி தி.மு.க. அரசு" என்று இன்று வரை அழைத்ததற்கு, தற்போதுள்ள அ.தி.மு.க. அரசை "பினாமி அ.தி.மு.க. அரசு" என்று தி.மு.கழகத்தினர் அழைத்து வருகிறார்கள். ஆனால் "பினாமி அ.தி.மு.க. அரசு" என்பது எவ்வாறு பொருந்துகிறது?

கருணாநிதி - "பினாமி" என்றால் உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்; உண்மையான உரிமை வேறொருவரிடம் இருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள முதல்வர் அப்படித்தானே இருக்கிறார். முதல்வர் அறை என்று பெயர் கூட போடப்படாத அறையிலேதான் அலுவலகம் நடத்துகிறார். முதல்வர் தான் அப்படி என்றால், நிர்வாகத்திற்குத் தலைமையேற்று நடத்த வேண்டியவர் தலைமைச் செயலாளர். தற்போது தலைமைச் செயலாளர் பெயருக்குத்தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்து தற்போது ஆலோசகராக இருப்பவரிடம்தான் உள்ளது. அது போலத்தான், காவல் துறையைப் பொறுத்தவரை டி.ஜி.பி.தான் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது அந்தத் துறையிலும் ஆலோசகர் ஒருவர் வந்துவிட்டார். எனவே "பினாமி அரசு" என்பது பொருத்தமாகத்தானே உள்ளது!

கிரானைட் முறைகேடு

கிரானைட் முறைகேடு

கேள்வி - கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அறிக்கை விடுத்திருக்கிறாரே?

கருணாநிதி - பதில் அறிக்கை விடாவிட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து கொண்டு விடப்பட்ட அறிக்கையாகத்தான் அது தெரிகிறது. அதிகாரி சகாயம், ஐ.ஏ.எஸ்., விசாரணை வேண்டுமென்று நானா கேட்டேன். பெரியவர் டிராபிக் ராமசாமி கேட்டார். அந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்டார்கள். அதற்கு பன்னீர்செல்வத்தின் பதில் என்ன என்று கேட்டால் - "உப்பு இருக்கிறதா என்று கேட்டால், பப்பு இருக்கிறது" என்று சொல்லும் மளிகைக் கடைக்காரரைப் போல - நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்குப் பதில் கூறிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க. அரசு, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, நியமித்த சகாயம் விசாரணையிலும் எவ்வளவு தவறுகள் என்பதைப் பற்றி எதிர்க் கட்சிக்காரர்கள் எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கெல்லாம் பன்னீர்செல்வத்தின் பதில் என்ன?

சகாயம் விசாரணைக்கான அரசாணையில், தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த வேண்டுமென்று கூறாமல் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் சகாயம் விசாரணை நடத்தினால் மாட்டிக் கொள்வோம் என்பதால்தானே? தற்போது அதனால் தான் திட்டவட்டமான தீர்ப்பைப் பெறலாம் என்று டிராபிக் ராமசாமி தமிழகம் முழுவதிலும் விசாரணை நடத்த வேண்டுமென்று வேறொரு புதிய வழக்கினைத் தொடுத்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

பன்னீர்செல்வம் எனக்குப் பதில் சொல்லிக் கொண்டு காலத்தைக் கழிக்காமல், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நாட்டு மக்களும் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல சூடு சொரணை இருந்தால் முயன்று பார்க்கட்டும்.

English summary
DMK supremo Karunanidhi has slammed CM O. Panneerselvam for releasing statments as a binami head of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X