For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தப் பொன்மனத்தை இப்போது எதிர்பார்க்க முடியுமா... கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆரிடம் இருந்த அந்தப் பொன்மனத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. புண்படுத்தாத மனம் வேண்டாமா? அதுவும் சட்டசபையில்? விஜயகாந்த், தண்ணியிலேயே இருப்பவர் என்றால், அமைச்சர்கள் அனைவருமே ஆல்கஹால் பார்க்காத உடலும், குடலும் கொண்டவர்களா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.

சட்டசபையில் தன்னையும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும் தொடர்ந்து வசை பாடி வருவதைக் குறிப்பிட்டு இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை...

5 நாள் சட்டசபைக் கூட்டம்

5 நாள் சட்டசபைக் கூட்டம்

கேள்வி: தமிழகச் சட்டப் பேரவையின் ஐந்து நாள் கூட்டத் தொடர் எப்படி? ஒரு நாள் கூட தி.மு.கழக உறுப்பினர்களைப் பேச விட வில்லையே?

பதில்: அதைப் பற்றி நான் கூறுவதைவிட; "நடக்கட்டும் நாக்கு வியாபாரம்" என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையில் ஒரு சில பகுதிகளைக் குறிப்பிட்டாலே, நீங்களே பேரவை எப்படி நடைபெற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கட்டுரையின் தொடக்கமே, "அமைச்சர்கள் அனைவரும் கரூர் செந்தில் பாலாஜியையும், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் பின்பற்ற ஆரம்பித்தால்..... தமிழ்நாடு என்னாகும்?"" என்று ஆரம்பித்திருக்கிறார்.

அம்மா என்பது எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது...

அம்மா என்பது எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது...

மேலும் அந்தக் கட்டுரையில், "அம்மா" என்பது ஒரு பொதுச் சொல். ஆனால், பொதுவான சொல்லாகவா அது பயன்படுத்தப்படுகிறது? "அம்மா குடிநீர்" என்று பெயர் சூட்டினார்கள். அம்மா படத்தோடு, அந்தத் தண்ணீரில் இரட்டை இலை மலர்ந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால், சிறிய பேருந்துகளிலும் இரட்டை இலைகள் பூத்துக் குலுங்குகின்றன.

பாத்தி கட்டும் செந்தில் பாலாஜி

பாத்தி கட்டும் செந்தில் பாலாஜி

"அரசுப் பணத்தில், கட்சி சின்னமா?" என்றால், கறிவேப்பிலை, துளசி இலை, வாழை இலை.....என்று தோட்டத்தில் பாத்தி கட்டுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்படி ஒரு பசுமைப் புரட்சியை இந்த அரை நுhற்றாண்டு காலத்தில் எவரும் நடத்தியது இல்லை என்பதை உணர்ந்த ஜெயலலிதா, முகம் சிவக்க பெருமைப்பட்டுக் கொள்கிறார். செந்தில் பாலாஜி வாங்கிய நற்பெயரை நாம் எப்படி அடைவது என்று ஒவ்வோர் அமைச்சரும் அப்போதே திட்டமிடத் தொடங்கி விட்டார்கள்! சிலிர்த்துக் கிளம்பினார் புதுக்கோட்டை விஜயபாஸ்கர்.

ஆபாசமான, அசிங்கமான, அருவறுப்பான

ஆபாசமான, அசிங்கமான, அருவறுப்பான

தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஒலிக்கும் ஆபாசமான, அசிங்கமான, அருவருப்பான பேச்சுக்களை சட்டசபைக்குள் கொண்டு வந்தார். மயிலை மாங்கொல்லையில் என்ன பேச வேண்டும் என்பதற்கான வரையறையை கபாலீஸ்வரர் போடவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதற்கெல்லாம் ஏராளமான வரையறைகள் உள்ளன. "அமைச்சர் சொல்வது பொய்யான தகவல்" என்று கூடச் சொல்லக் கூடாது. "அமைச்சர், பேரவைக்குத் தவறான தகவலைத் தருகிறார், இது உண்மைக்கு மாறானது" என்றுதான் சொல்ல வேண்டும். அவையில் இல்லாதவர்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியும் பேச வேண்டியது வந்தால், அது விமர்சனமாக இருக்கலாமே தவிர, அவதூறாக, குற்றச்சாட்டாக இருக்கக் கூடாது. இப்படி ஏராளமான மாண்புகள் உள்ளன. எல்லா மாண்புகளையும் வரைமுறைகளையும் வரிசையாக மீறுவதுதான் அமைச்சர் பதவியை அடைவதற்கான வழி என்று தீர்மானித்துவிட்டால் என்ன ஆவது?

தள்ளுவண்டி...

தள்ளுவண்டி...

கருணாநிதியைத் "தள்ளு வண்டி" என்றும், விஜயகாந்தை "தண்ணியிலே இருப்பவர்" என்றும் வளர்மதியோ, செல்லூர் ராஜுவோ சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆச்சர்யம் உண்டாகி இருக்காது. ஆனால், விஜயபாஸ்கர், மருத்துவம் படித்தவர். முதுமையின் இயலாமையை கருணையோடு கவனிக்கச் சொல்கிறது மருத்துவம். ஆனால், இந்தப் பாழாய்ப்போன அரசியலும் பதவியும் அதனை சட்டசபையில் வைத்து அறுவை சிகிச்சை செய்யச் சொல்கிறது.

முசிறிப்புத்தன் வாழ்க்கை

முசிறிப்புத்தன் வாழ்க்கை

எம்.ஜி.ஆரின் இலட்சக்கணக்கான ரசிகர்களை, மெள்ள அரசியல் மயப்படுத்தி, இரட்டை இலை மயக்கத்தை ஏற்படுத்திய முசிறிப்புத்தனின் வாழ்க்கை தள்ளுவண்டியில்தான் கழிந்தது. நடக்க முடியாத முசிறிப்புத்தன்தான் பல்லாயிரக்கணக்கான எம்.ஜி.ஆர். மன்றங்களை உயிரோட்டம் குறையாமல் வைத்திருந்தார் என்பது விஜயபாஸ்கர்களுக்குத் தெரியாது. நல்லவேளை, தெரிந்தவர்கள் யாரும் சபைக்குள்ளும் இல்லை, அதிமுகவிலும் இல்லை.

திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று கூறும் வளர்மதி

திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று கூறும் வளர்மதி

கருணாநிதி, திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று பதிவு செய்தவர் வளர்மதி. விஜயபாஸ்கர் "தள்ளுவண்டி"என்று கிண்டல் செய்கிறார். கருணாநிதி, இப்போதும் இந்த அவையின் உறுப்பினர். இன்று மட்டுமா? 1957இல் இருந்து உறுப்பினர். கருணாநிதி, ஆயிரம் விமர்சனங்களுக்கு உரியவரே தவிர, அவரைக் கொச்சைப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

எம்.ஜி.ஆரின் பொன்மனம் இல்லையே...

எம்.ஜி.ஆரின் பொன்மனம் இல்லையே...

"கருணாநிதி, கருணாநிதி" என்று இதே சபையில் முன்பு ஒரு முறை அதிமுக உறுப்பினர் பேசிய போது, "கலைஞர் என்று சொல்லுங்கள், அவர் எனக்குத் தலைவராக இருந்தவர்"" என்று தடுத்தவர் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தப் பொன்மனத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது. புண்படுத்தாத மனம் வேண்டாமா? அதுவும் சட்டசபையில்?

ஆல்கஹாலைப் பார்க்காதவர்களா அமைச்சர்கள்

ஆல்கஹாலைப் பார்க்காதவர்களா அமைச்சர்கள்

விஜயகாந்த், தண்ணியிலேயே இருப்பவர் என்றால், அமைச்சர்கள் அனைவருமே ஆல்கஹால் பார்க்காத உடலும், குடலும் கொண்டவர்களா? எ.வ. வேலு கண்டக்டராக இருந்தாரா? கார்பென்டராக இருந்தாரா? என்பதா விவகாரம்? இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எ.வ. வேலு இப்போது அதைப் பற்றிப் பேச அருகதை இல்லை என்கிறார் அமைச்சர் கே.பி. முனுசாமி. இந்த முனுசாமி மட்டும் சுயம்புவா? தி.மு.க. மாணவர் அணியில் இருந்தவர் தானே கே.பி. முனுசாமி. அவருக்கு மட்டும் தி.மு.க.வைக் குற்றம் சொல்லிப் பேச அருகதை வந்து விடுமா?" என்று அதில் எழுதியிருக்கிறார்கள்.

அகமகிழும் ஜெயலலிதா

அகமகிழும் ஜெயலலிதா

ஆனால் பேரவையில் இப்படியெல்லாம் பேசியபோது, அதைக் கண்டித்து நிறுத்த வேண்டிய முதல்வர் ஜெயலலிதா மகிழ்ந்து பாராட்டியதோடு, மறுநாளே அந்த உறுப்பினருக்கு அமைச்சர் பதவியும் அளித்துச் சிறப்பித்திருக்கிறார். முதல்வர் அப்படிப் பாராட்டுகின்றபோது உறுப்பினர்கள் இவ்வாறு பேசத்தானே செய்வார்கள்!

மெட்ரோ ரயில் விவகாரம்

மெட்ரோ ரயில் விவகாரம்

கேள்வி: திமுக ஆட்சியில் தொடங்கப் பட்ட "மெட்ரோ ரெயில்" திட்ட சோதனை ஓட்டத்தின் துவக்க விழாவிலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் திறப்பு விழாவிலும் முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும், உலக சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைத்த விழாவில் பேசியதோடு விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகப் பேசியிருக்கிறாரே?

பதில்: திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசின் சார்பில் பல கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. தற்போது நடைபெறும் உலகச் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளும் விஸ்வநாத் ஆனந்தைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளே கழக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளன.

ஆனந்த்தைப் பெருமைப்படுத்தினேன்

ஆனந்த்தைப் பெருமைப்படுத்தினேன்

2007ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருந்தபோது, மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் முறையாக உலக சதுரங்கச் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 24.10.2007 அன்று 25 இலட்ச ரூபாய் நிதியினை வழங்கி பெருமைப்படுத்தினேன். மாஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலகச் சாம்பியன் ஆனதும், தொலைபேசியிலே அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தேன். மேலும், 2001ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று கலைவாணர் அரங்கத்தில் மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் உலகச் சதுரங்க சாம்பியன் பட்டத்தைப் பெற்ற விஸ்வநாதன் அவர்களுக்குப் பாராட்டு விழா ஒன்றினை தமிழக அரசின் சார்பில் நடத்தினேன்.

அந்தக் காலத்திலேயே 40 லட்சம் மதிப்பில்

அந்தக் காலத்திலேயே 40 லட்சம் மதிப்பில்

விழாவில் அவரைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நகரிலே "ஏ" வகை குடியிருப்பு ஒன்றினை - அந்தக் காலத்திலேயே அதன் மதிப்பு 40 இலட்ச ரூபாய் - விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு அன்பளிப்பாகவும் தமிழக அரசின் சார்பில் வழங்கினேன். ஆனந்த் தனது ஏற்புரையில் தமிழக அரசுக்கு நன்றி கூறியதோடு, அவர் வெற்றி பெற்ற போது முதன் முதலில் அவரை "தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது தமிழக முதலமைச்சர் கலைஞர் தான்" என்றும், அது தனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும், தமிழக அரசு இவ்வளவு பெரிய வரவேற்பை தனக்கு வழங்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனந்த்துக்கு மீண்டும் பாராட்டு

ஆனந்த்துக்கு மீண்டும் பாராட்டு

அந்த விழாவில் பொள்ளாச்சி மகாலிங்கம், சிவந்தி ஆதித்தன், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதுபோலவே 1990ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி சென்னை சோழா ஓட்டலில் தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு மற்றும் இந்தியன் வங்கி சார்பில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் நான் கலந்து கொண்டு பாராட்டினேன். அந்த விழாவில் என்னுடன் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் அவர்களும், பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களும், எம்.ஏ.எம். ராமசாமி அவர்களும், ஆரோன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

கழக ஆட்சியில்

கழக ஆட்சியில்

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களைப் பாராட்டியது மட்டுமல்ல; கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் விளையாட்டுக் கலை வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு பணிகளை நிறைவேற்றினோம். கிராமப்புற இளைஞர்களிடம் புதைந்து கிடக்கும் விளையாட்டுத் திறன்களை ஊக்குவித்து வளர்த்து வெளிப்படுத்திடும் நோக்கத்துடன் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளுக்கும் தலா 1 இலட்ச ரூபாய் வீதம் அனுமதித்து; அதன்மூலம் கிராமங்களில் சமுதாய விளையாட்டு மையங்களை ஏற்படுத்தி விளையாட்டுக் கலை வளர்ச்சிக்கு ஊக்கமளித்தோம்.

சேனல் 4 ஆவணப்படம்

சேனல் 4 ஆவணப்படம்

கேள்வி: ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்களை ஆவணப் படமாகத் தயாரித்த "சேனல் 4" தொலைக்காட்சி யின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவுக்கு இந்தியாவிற்கு வர "விசா" மறுக்கப்பட்ட நிலையிலும், 7-11-2013 அன்று அந்த ஆவணப் படம் டெல்லியில் திரையிடப்பட்டிருக்கிறதே?

பதில்: ஆமாம், அந்த ஆவணப் படங்கள் உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவில், டெல்லியில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை டெல்லியைச் சேர்ந்த "சமூக ஜனநாயகத்துக்கான நிறுவனம்" மற்றும் சில மனித உரிமை நிறுவனங்கள் டெல்லியிலே வெளியிட ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதற்காகத்தான் இதன் இயக்குனர் கெல்லம் மெக்ரோ "விசா" வுக்காக விண்ணப்பித்திருந்தார்.

டுட்டு ஆதரவு

டுட்டு ஆதரவு

இங்கிலாந்து நாட்டிலே உள்ள தமிழர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்ற வேண்டுகோளை பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்கள். கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் "இலங்கையில் நீதி நெறிமுறைக்கு அப்பால் நடந்துள்ள மனிதப் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் கைது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்" என்று அறிவித் திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அமைதி பிரசாரகர் ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு, காமன்வெல்த் மாநாட்டினை உலகத் தலைவர்கள் புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னையில் குடம் தண்ணீர் ரூ. 5

சென்னையில் குடம் தண்ணீர் ரூ. 5

கேள்வி: சென்னையில்"ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்" என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வந்திருக்கிறதே...

பதில்: "அம்மா குடிநீர்" பாட்டில் ஒரு லிட்டர் 10 ரூபாய்க்கு அ.தி.மு.க. ஆட்சியிலே விற்கும்போது, "ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய் என்பது எவ்வளவோ மலிவு" என்று அ.தி.மு.க. ஆட்சியினர் சமாதானம் கூறுவார்கள். ஆனால் அந்தப் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில், "சென்னையில் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போதியளவு குடிநீர் கிடைப்பதில்லை என்றும், கிடைக்கும் தண்ணீரும் சுத்தமாக இல்லை என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

குடிநீர் சப்ளை இல்லை

குடிநீர் சப்ளை இல்லை

குடிநீர் தினசரி சப்ளை இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் வருகிற குடிநீர் கூட 3 மணி நேரமே வருவதால் குடிநீர் பற்றாக்குறையாக இருக்கிறது. வேறு வழியில்லாமல் தனியாரிடம் காசு கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டிருப்பதாக மக்கள் கூறு கின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி கலைவாணி கூறுகையில், குடிநீர் கலங்கலாக இருக்கிறது. சிவப்பு புழுக்கள் நெளிகின்றன. வடிகட்டி பயன்படுத்தினாலும் நன்றாக இல்லை. மழைக்காலத்தில் குடிநீரில் கழிவு நீர் நாற்றம் அடிக்கிறது. அதனால்தான் கடந்த 7 மாதங்களாக பணம் கொடுத்து "வாட்டர் கேன்" வாங்குகிறோம் என்றார்.

சென்னையில் இப்படித்தான்

சென்னையில் இப்படித்தான்

சென்னையில் பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். வியாசர்பாடி, மகாகவி பாரதிநகர், முத்தமிழ் நகர், கண்ண தாசன் நகர், சர்மா நகர் போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குகிறார்கள்" என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பதோடு, மேலும் பல குறைபாடுகளை அந்தப் பத்திரிக்கை எழுதியுள்ளது.

இருக்கிறார்கள்.. ஆனால் ஏற்காட்டில் இருக்கிறார்கள்

ஆனால் இந்தப் பிரச்சினைகளைப் பற்றிக் கவனிக்க இந்த அரசில் அமைச்சர் இல்லையா என்று கேட்பீர்களே யானால், இருக்கிறார், ஆனால் அவர் ஏற்காட்டில் இடைத் தேர்தல் அராஜகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்ற பதில் கிடைக்கும். முதல்வர் இல்லையா? என்று மீண்டும் கேட்பீர்களேயானால், இருக்கிறார், ஆனால் சிறுதாவூரில் இருக்கிறார் என்று பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi slammed TN ministers for criticizing him and Vijayakanth in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X