For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதானி உட்பட தனியார் துறைமுகங்களுக்காக சென்னை துறைமுகம் செயலிழக்க செய்யப்படுகிறதா? கருணாநிதி கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தொழிலதிபர் அதானி உள்ளிட்டோருக்கு சொந்தமான தனியார் துறைமுகங்கள் வளம்பெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சென்னை துறைமுகம் செயலிழக்க செய்யப்படுகிறதா? இதற்காகத்தான் மதுரவாயல் திட்டம் முடக்கப்பட்டதா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

தனியார் துறைமுகத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளின் முன்னோட்டம் தான் மதுரவாயல் திட்டம் முடக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம்.

"இந்து" ஆங்கில நாளேடு, 26-6-2015 அன்று "As Port Maduravoyal Project languishes, trade suffers" (மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்ட நெடுஞ்சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் வணிக நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன) என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளது. எந்தெந்த வர்த்தக நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கியிருந்தது. சென்னைத் துறைமுகத்தில் வழக்கமாகச் சரக்குகள் கையாளப்படும் திறன் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கி வைத்திருப்பதன் காரணமாக குறைந்து வருவதாகவும், அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபட்டணம் தனியார் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் திறன் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கியதைப் போலவே சென்னைத் துறைமுகத்தையும் செயலிழக்கச் செய்து, கிருஷ்ணாபட்டணம் தனியார் துறைமுகத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளின் முன்னோட்டம் தான் மதுரவாயல் திட்டம் முடக்கப்பட்டதற்கான அடிப்படை என்று அந்த ஆங்கில நாளேடு சுட்டிக் காட்டியுள்ளது.

Karunanidhi slams TN Govt. on Maduravoyal Project

மதுரவாயல் சந்திப்பையும் இணைக்கும் மேம்பாலச்சாலைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்

2006 தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் "பறக்கும்சாலைத் திட்ட"த்தை (Elevated Highway) செயல் படுத்துவோம்" என்று உறுதியளித்திருந்ததை அடுத்து, தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப் பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்திற்கு உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டேன். சென்னைத் துறைமுகத்திலிருந்து தங்கு தடையற்ற, வேகமான சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காக கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாகப் பறக்கும் விரைவுச் சாலை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு 22-6-2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது.

இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், மிகவும் பழமை வாய்ந்த சென்னைத் துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது.

அ.தி.மு.க. அரசினால் முடக்கப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், "மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை, நீதி மன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்கத் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேவைப்பட்டால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதையில் சிறிய மாற்றம் அல்லது புதிய பாதை அமைக்கக் கூட நாங்கள் தயாராக உள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், மிகவும் பழமை வாய்ந்த சென்னைத் துறைமுகம் வருங்காலத்தில் காட்சிப் பொருளாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்" என்று கூறினார். அதற்குப் பிறகும், எந்த முன்னேற்றமும் இந்த ஆட்சியில் ஏற்படவில்லை.

7-1-2013 அன்று முதலமைச்சர் கொடைநாட்டிலிருந்து வெளியிட்ட ஒரு அறிவிப்பில் மீனவர்களின் நலன் காப்பதற்காக காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து கப்பல் கட்டும் தளம் ஒன்றினை நிர்மாணிப்பதாகத் தெரிவித்தார். உண்மையில் அந்தத் திட்டம் யாருடைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது?

திருவள்ளூர் மாவட்டத்தில், காட்டுப் பள்ளியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 15-4-2008 அன்று என் முன்னிலையிலேதான் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து 3,068 கோடி ரூபாய் முதலீட்டில் அந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிப்ரவரியிலேயே பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன.

அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் இரண்டாவது பெரியதும், மூன்றாவது பழையதுமான துறைமுகம் தான் சென்னைத் துறைமுகம்.

2008-2009இல் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் இந்தியாவில் 17 சதவிகிதம் சென்னைத் துறைமுகத்தில் தான் கையாளப்பட்டது. இந்தத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் புள்ளி விவரத்தைப் பார்த்தால், 2000-2001ஆம் ஆண்டு 412 லட்சம் டன்; 2002-2003ஆம் ஆண்டு 336 லட்சம் டன்; 2004-2005ஆம் ஆண்டு 438 லட்சம் டன்; 2006-2007ஆம் ஆண்டு (தி.மு.கழக ஆட்சியில்) 534 லட்சம் டன்; 2008-2009ஆம் ஆண்டு 574 லட்சம் டன்; 2010-2011ஆம் ஆண்டு 614 லட்சம் டன்; 2012-2013ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் 534 லட்சம் டன்; 2014-2015ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில் 525 லட்சம் டன்களாகும். இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து அ.தி.மு.க. ஆட்சியில் சென்னைத் துறைமுகத்தில் கையாளப்பட்ட பொருள்களின் அளவும், செயல்திறனும் குறைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு குறைவதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து நெரிசல் தான். சென்னையின் புற நகரங்களிலிருந்து சென்னைத் துறைமுகத்தினை சரக்குகள் வந்தடைய நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை சரி செய்து, சரக்குகள் போக்குவரத்தைத் தேக்கமின்றி விரைவுபடுத்துவதற்காகத் தான் தி.மு. கழக ஆட்சியில் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டமே தொடங்கப்பட்டது.

சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்ட காரணத்தால், அதுவரை ஏற்றுமதியாகி வந்த 100 இலட்சம் டன்னில், 60 லட்சம் டன் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்திற்கும், 30 இலட்சம் டன் எண்ணுர் துறைமுகத்திற்கும் சென்றது. இதில் கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் தனியார் துறைமுகமாகும். 2008ஆம் ஆண்டு தான் இந்தத் துறைமுகம் தொடங்கப்பட்டு, இந்தக் குறுகிய காலத்தில் தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய துறைமுகமாக வளர்ந்துள்ளது.2014ஆம் ஆண்டு இந்தத் துறைமுகத்தில் ஏற்றுமதி 250 லட்சம் டன்கள் என்றால், 2015ஆம் ஆண்டு 407 இலட்சம் டன்கள் ஏற்றுமதியாகி உள்ளன.

2016ஆம் ஆண்டு அவர்களின் ஏற்றுமதி 560 லட்சம் டன்களாக உயரும் என்று "இந்து" ஆங்கில நாளிதழ் 8-7-2015 அன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இதனைப் பார்க்கும்போது, இரண்டாவது பெரிய துறைமுகமாக இருந்த சென்னைத் துறைமுகம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து, புதியதாக தொடங்கப்பட்ட கிருஷ்ணாபட்டணம் துறைமுகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கடல்சார் வாணிபத்தின் மிக முக்கிய அடையாளமான சென்னைத் துறைமுகத்தின் இந்த வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணங்களில் மையமான ஒன்று தான் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை உள்நோக்கத்துடன் முடக்கிப் போட்டதாகும். துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தும் ஒருவர் கூறும்போது, சென்னைத் துறைமுகத்திற்கு 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எர்ணாவூரிலிருந்து வருவதற்கு ஒரு நாளைக்கு மேல் ஆவதாகவும், ஆனால் கிருஷ்ணாபட்டணம் துறைமுகத்தைச் சென்றடைவதற்கு நான்கு மணி நேரமே போதும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம்.

புதியதாக காட்டுப்பள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்ட தனியார் துறைமுகம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு உரிமை உடையதாக இருந்தது. இந்தக் காட்டுப் பள்ளி துறைமுகத்தைத் தான் இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மிகவும் நெருக்கமான குஜராத் அதானி குழுமம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான மாற்றங்கள் பற்றி முடிவு தெரிய வரும் என்றும், நேற்று (27-9-2015) "இந்து" ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த அதானி குழுமத்திற்குத் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அரசினால் அவசர அவசரமாக சூரிய மின்சக்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் கூட, மற்ற தனியாரிடம் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி கிடைக்கும்போது, அதிக அளவுக்கு விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.

அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கையாண்டு வருகிறது. அவற்றில் ஒன்று தான் எண்ணுர் காமராஜர் துறைமுகம். அந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலே தான் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்திருக்கிறது.தற்போது அதே அதானி குழுமம் தான், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதாக "இந்து" ஆங்கில இதழில் வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு, முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தை நலிவடைந்திடச் செய்ததே அதானி குழுமத்திற்கு உதவிடும் உள்நோக்கத்தோடு தானா என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழத் தான் செய்கிறது.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா?

தனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன!

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi has slammed the Tamilnadu Govt. on Maduravoyal Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X