For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன், முருகன்,சாந்தன் மூவரும் விடுதலை செய்யப்பட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி: கருணாநிதி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் விடுதலை செய்யப்பட்டால் இரட்டி மகிழ்ச்சி அடைவேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்தது. மேலும் மூவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karunanidhi welcomes SC judgment on Rajiv case

இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

டெசோ கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறுகடிதங்களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக - உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன்,பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையிலும் துhக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொல். திருமாவளவன்

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருடைய மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் பி.சதாசிவம் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணை மனுவைப் பரிசீலிப்பதில் காலதாமதம் நேரிட்டால் அதைத் தண்டனை குறைப்புக்குக் காரணமாகக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இதன் மூலம் இன்னும் பல மரண தண்டனைக் கைதிகள் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மகத்தான தீர்ப்பின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்பதில் அய்யமில்லை.

மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மிகப் பெரும் அவலமாகும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையே இதற்குக் காரணம். மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கருணை அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து விடுதலை செய்யப்படுவதற்குத் தகுதி இல்லை என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்தவர்கள்கூட சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் தமிழக அரசின் மேற்கண்ட ஆணைதான். எனவே அந்த ஆணையை ரத்துச் செய்து 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டுமென வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தொல். திருமாவளவன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK leader Karunanidhi welcomes the Supere Court judgment which was commuted the death sentence of three convicted of killing former prime minister Rajiv Gandhi to life in prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X