சங்கர் கொலை வழக்கில் சாதி சார்ந்த கருத்துகள் வேண்டாம்... கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
கோயம்புத்தூர் : உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் சாதி சார்ந்த கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. சாதியை காரணம் காட்டி பகைமை உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்ததற்காக உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் நடுரோட்டில் வைத்து கூலிப்படையினரால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நேற்று முன் தினம் திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த கொலை வழக்கு குறித்து பரவலாக பல தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சங்கர் கொலை வழக்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த காரணத்திற்காகவும் உயிர் இழப்பை ஏற்படுத்துவது ஏற்க முடியாத ஒன்று. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையில் கொலைக்குற்றம் செய்தவர்களை மன்னிக்க முடியாது. தண்டனை கொடுத்துதான் தீர வேண்டும். ஆனால் சாதி வித்தியாச காரணங்களால் மட்டும் அது நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு தாய் தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான பாச போராட்டம் தான் அங்கு தலைதூக்கி நிற்கிறதே தவிர சாதி அல்ல. எதற்கு எடுத்தாலும் சாதியை காரணம் காட்டி சாதிகளுக்கு இடையிலான பகையை அதிகப்படுத்துவது ஏற்புடையதல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் முன்னேற்றத்திற்காக ஊழலற்ற ஒரு ஆட்சியும், திறமைமிக்க நிர்வாகமும் தேவைப்படுகிறது.
மதம் சார்ந்த, சாதி சார்ந்த கருத்துக்களை தெரிவித்து மக்களை திசைதிருப்ப கூடாது. தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், தமிழகம் பட்டிருக்கின்ற கடனை அடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், தமிழகம் பூராவும் தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று நினைப்பவர்கள் இன்றைய இலக்கு என்னவென்று புரிந்து கொண்டு ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவதற்கு அர்பணித்துக் கொள்ள வேண்டும். அதை சாதிப்பதற்கு எத்தகைய போராட்டமாக இருந்தாலும் நடத்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.