For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமநாதஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம்... 7 கோடி பிணம் விழும் என பீதி கிளப்பும் இந்து அமைப்புகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் ஜனவரி 20ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. முகூர்த்தக்கால் நட்டது தொடங்கி கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தது வரை பலவித சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை. திருப்பணிகள் முடிவதற்குள், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் வேலை, அம்பாள் முன் மண்டப வேலை எதுவும் முழுமை பெறவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற, மூன்றாம் பிரகார ஓவியங்கள் பொலிவிழந்து உள்ளன. அதோடு, அம்பாள் சிலையின் இடது கையில், சிறிய அளவில் தெறிப்புகள் இருக்கின்றன. 'பின்னமான சிலையை மாற்றாமல், கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது' என, சிற்ப சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மாதங்களில் கும்பாபிஷேகம் செய்தால் 7 கோடி பிணங்கள் விழும் என்றும் சர்ச்சை கிளப்பியுள்ளனர் இந்து அமைப்பினர்.

kumbabishekam of Rameswaram temple on January 20

புனிதமான ராமேஸ்வரம்

தமிழகத்தில் மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற மூன்று வகை பெருமை பெற்ற ராமேஸ்வரம் ராமாயண காவியத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. சிவபக்தனான ராவணனை வதம் செய்ததால் ராமனைப் பிடித்த பிரம்ம ஹத்திதோஷம் நீங்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சீதை மணலால் செய்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது. ராமன் வழிபட்ட சிவபெருமான் என்பதால் இங்குள்ள சிவபெருமானுக்கு ராமநாதசுவாமி என்று பெயர் விளங்கலாயிற்று. பஞ்ச பூதங்களில் மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் என்பதாலும் ராமன் வணங்கிய ஈசன் என்பதாலும் இந்த இடம் ராமேஸ்வரம் என பெயர் விளங்கலாயிற்று. ராமாயண காவிய காலத்திற்கு முன்பிருந்த கோயில் என்பதால் இந்தக் கோயில் தோன்றிய காலம் கணக்கிடப்பட முடியவில்லை.

காசிக்கு இணையான தலம்

காசிக்கு இணையான தீர்த்த ஸ்தலமாக விளங்குவதால் காசி யாத்திரை ராமேஸ்வரம் வந்தபின்பே பூர்த்தியடையும் என்பது நம்பிக்கை. இத்தனை பெருமை பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் கருவறை இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவினால் கட்டப்பட்டது. சேதுபதி மன்னர்கள் ராமநாதசுவாமியை தங்கள் குலதெய்வமாகக் கொண்டதை அடுத்து உலகில் மிகப்பெரிய மூன்றாம் பிரகாரம் கட்டப்பட்டது. தினமும் இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதசுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்பது ஆகம விதிகளுள் ஒன்று. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2001ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2013 ல் நடக்க வேண்டிய கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன.

திருப்பணிகள் விறுவிறுப்பு

இரண்டு கோடி ரூபாய் செலவில் முதல் பிரகாரம் பழமை மாறாமல் வாட்டர் வாஷ் செய்து வார்னீஸ் பூசுதல், உலகப் புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் மராமத்து மற்றும் வண்ணம் பூசுதல் பணிகள் நடைபெற்றன. விறுவிறுப்பாக பணிகள் நடந்த நிலையில் மொட்டைக் கோபுரங்களாக இருந்த வடக்கு,தெற்குகோபுரங்கள் புதிதாக கட்டும் திருப்பணிகளால் கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு பணிகள் தீவிரம்

கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடல் பகுதி பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் ஒருங்கிணைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலை சுற்றிலும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

8 கோடி செலவில் பணிகள்

25 லட்சம் ரூபாய் செலவில் கிழக்கு ராஜகோபுரத்தில் மராமத்து பணிகளும், 12 லட்சம் ரூபாய் செலவில் மேற்கு ராஜகோபுர மராமத்து பணிகளும், 3 கோடியே 71 லட்சம் செலவில் புதிய வடக்கு தெற்கு ராஜகோபுர பணிகளும் நடந்துள்ளன. இதுதவிர ஒரு கோடி ரூபாய் செலவில் பர்வதவர்த்தனி அம்மன் சன்னதி முகப்பு கருங்கல் மண்டபம் அமைக்கும் பணிகளும், சுவாமி, அம்மன், காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, விநாயகர்கள், சுப்பிரமணியர்கள், அனுமன், நடராஜர், மகாலட்சுமி, சேதுமாதவர், பைரவர் சன்னதிகளின் விமானங்கள் மற்றும் நந்தி மண்டபம் மராமத்துப் பணிகள் 75 லட்சத்திலும் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை ஒட்டி மொத்தம் 7 கோடியே 90 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன

கும்பாபிஷேக சர்ச்சை

8 கோடி ரூபாய் செலவில், திருப்பணிகள் நடைபெறுகின்றன; ஆனால், திருப்பணி கமிட்டி அமைக்கவில்லை. திருப்பணிகள் முடிவதற்குள், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்திற்கு வண்ணம் பூசுதல், சுற்றுச்சுவர் வேலை, அம்பாள் முன் மண்டப வேலை எதுவும் முழுமை பெறவில்லை.மேலும், உலக பிரசித்தி பெற்ற, மூன்றாம் பிரகார ஓவியங்கள் பொலிவிழந்து உள்ளன. அதோடு, அம்பாள் சிலையின் இடது கையில், சிறிய அளவில் தெறிப்புகள் இருக்கின்றன. 'பின்னமான சிலையை மாற்றாமல், கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது' என, சிற்ப சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.ராமேஸ்வரம் கோவிலில், முக்கிய முடிவுகளுக்கு சிருங்கேரி சுவாமிகள் ஒப்புதல் பெறுவது வழக்கம். ஆனால், கும்பாபிஷேகம் நடத்த, அவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

யுத்தநாளில் முகூர்த்தக்கால்

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் திருக்கோயில் - திருமடங்கள் பாதுகாப்பு அமைப்பின் மாநில அமைப்பாளரும் ஜோதிடருமான பக்ஷி சிவராஜன், தை 6ம் தேதி அதாவது ஜனவரி மாதம் 20 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலின் திருப்பணிகளுக்கு என குழு ஏதும் அமைக்கப்படவில்லை. ஊர் மக்களுக்கும் முறையான அறிவிப்பு செய்யவில்லை. இப்படி எதையும் முறையாகச் செய்யாமல் ‘போதாயன அமாவாசை' தினத்தில் அவசர அவசரமாக முகூர்த்தக்கால் நட்டுள்ளனர். யுத்தம் செய்வதற்கான நாளை மட்டுமே இந்த நாளில் குறிப்பார்கள். அறநிலைய அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கும்ப லக்னத்தில் கும்பாபிஷேகம்

இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் கும்ப லக்னத்தில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்துள்ளதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கும்ப லக்னத்தில் கேது உள்ளது. அப்படி இருந்தால் கும்பாபிஷேகத்தை நடத்தக்கூடிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் எஜமானின் உயிருக்குக் கேடு ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சரஸ்வதி மஹால் சார்பில் வெளியிடப்பட்ட ஆய்வு நூலான, ‘கால விதான பத்ததி'யில் குரு அதிசாரவக்கிரத்தில் இருந்தால் 7 கோடி பிணங்கள் விழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைக்கு ஆபத்து

குரு வக்கிரத்தில் இருக்கக்கூடிய தை, மாசி மாதங்களில் நல்ல நாட்களே கிடையாது. இந்த மாதங்களில் கும்பாபிஷேகம் செய்தால் 7 கோடி பிணங்கள் விழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள நாங்கள் நம்புகிறோம் என்று கூறியுள்ள பக்ஷி சிவராஜன், மக்களையும், மக்களின் தலைமைகர்த்தாவாக இருக்கக்கூடிய தலைவரையும் அழிக்கக்கூடிய நாளில் கும்பாபிஷேகம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தடை கோரி மனு

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ராமமூர்த்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில்
20.1.2016ல் கும்பிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த பணிகள் முழுமை அடையவில்லை. இன்னும் பல பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதனை முடிக்காமல் கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் , மனு மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, தேதி குறிப்பிடாமல் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

15 கோவில்களில் கும்பாபிஷேகம்

ஜனவரி 20ல் ராமேஸ்வரம் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளையும் ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனையுடன் எடுக்கப்பட்ட முடிவு. இதில் மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை. முன்பு இப்படித்தான் சில கோயில்களைக் குறிப்பிட்டு சர்சை கிளம்பி பிறகு அடங்கியது. தேதி குறித்ததில் தவறு ஏதுமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்றம் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்குமா? அல்லது குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகம் நடக்குமா? எல்லாம் அந்த ராமநாத சுவாமிக்கே வெளிச்சம். மக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லாமல் கும்பாபிஷேகம் நடந்தால் சரிதான்.

English summary
The much awaited kumbabishekam at the historic Sri Ramanathaswamy Temple, dedicated to Lord Shiva in this pilgrim island, would take place on January 20 and the rituals for the mega event would commence on December 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X