For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ‘இந்து ஆன்மிக கண்காட்சி’ நிறைவடைந்தது... 8 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கடந்த ஒருவாரமாக நடந்து வந்த இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை சுமார் 8 லட்சம் மக்கள் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கியது 6-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி. 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு நற்பண்புகள் போதிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சிக்கென பிரத்யேகமாக ஆந்திர மாநில கோவில்களில் இருந்து ரதங்களும் கொண்டு வரப்பட்டு வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு தேவையான 6 பண்புகளை மையமாக வைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்ட இந்கக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

வன விலங்கு பாதுகாப்பு...

இறுதி நாளான நேற்று காடுகளையும், விலங்குகளையும் பாதுகாக்கும் வகையில் வனம் மற்றும் வனவிலங்குகள் ஆராதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக விழா மேடை காடுகள் போலவும், அதில் காட்டு விலங்குகள் நிற்பது போன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

நாக பூஜை....

வனவிலங்குகளை காக்கும் வகையில் நாகவந்தனம் நிகழ்ச்சியில் நாகத்திற்கு பூஜை செய்யப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகளின் பாம்பு நடன போட்டி மற்றும் காவடி போட்டிகள் நடத்தப்பட்டன.

அலங்காரம்....

அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்காக திருப்பதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூமிதேவி சிலைகள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

திருக்கல்யாணம்...

மேளதாளங்கள் முழுங்க சுவாமிகளுக்கு பட்டு மற்றும் வஸ்திரம் அணிவிக்கப்பட்டு, உலக நன்மைக்காக திருக்கல்யாணம் நடத்தப்படுவதாகக் கூறி பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் திருமாங்கல்ய பூஜை செய்யப்பட்டு, சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியும், ஹோமமும் நடைபெற்றது.

வாரணம் ஆயிரம்...

தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஆண்டாள் பாடிய "வாரணம் ஆயிரம்" திவ்யபிரபந்த பாடலும் ஓதப்பட்டது. முத்துக்களால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு மங்கள ஆராத்தி காண்பிக்கப்பட்டதுடன் திருமண நிகழ்ச்சி நிறைவடைந்தது.

பிரசாதம்...

விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தை கண்டு கழித்தனர். அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த மங்கள நிகழ்ச்சியுடன் ஆன்மிக சேவை கண்காட்சி நேற்று நிறைவடைந்தது.

சேவை கண்காட்சி...

இந்த ஒருவார கண்காட்சி குறித்து விழாக்குழு உறுப்பினர் எஸ்.குருமூர்த்தி கூறுகையில், ‘சமுதாயத்தில் நடக்கும் பிற கண்காட்சிகளுக்கும், இந்த ஆன்மிக கண்காட்சிக்கும் வேறுபாடு உள்ளது. இந்த கண்காட்சி சேவையை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இந்து மதத்திற்கு ஆன்மிக இயக்கங்கள் செய்து வரும் சமுதாய சேவைகள் மக்களுக்கு தெரியாமலே இருந்து வருகிறது.

6வது ஆண்டு...

இதனை மக்களுக்கு தெரியவைப்பதுடன், இந்த இயக்கங்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் சேவை செய்யவைப்பதற்காகவே இந்த ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்பட்டது. கடந்த 5 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி 6-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

8 லட்சம் பேர்...

நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியம், நாட்டுபற்று உட்பட பல்வேறு நல்ல குணாதிசயங்கள் பள்ளி மாணவர்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 356 பள்ளிகளை சேர்ந்த 40 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் 12 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆக மொத்தம் 1 லட்சம் மாணவர்கள் உட்பட 8 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழா ஏற்பாடுகள்....

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து ஆன்மிக சேவை கண்காட்சி விழா குழு தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன், மற்றும் விழாக்குழு உறுப்பினரும், பிரபல எழுத்தாளருமான எஸ்.குருமூர்த்தி, இந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை டிரஸ்டி ராஜலெட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.

English summary
Nearly eight lakh people visited Hindu exhibition which is happening in Chennai Thiruvanmiyur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X