For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நதிநீர் ஆணையம்: மத்திய அரசு மீது ஸ்டாலின் சாடல்

காவேரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே நதி நீர் ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்பு, காவேரி நீர் கிடைக்காமல் வாடும் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை மேலும் தாமதப்படுத்தும் செயல் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஒரே நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கர்நாடக அரசு தொடர்ந்து காவேரி நதிநீரை தமிழகத்திற்கு தராமலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் ஒத்துழைக்கவில்லை என்பதாலும் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என 1970 வாக்கிலேயே கழக அரசு கோரிக்கை வைத்து அந்தக் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு 20 ஆண்டு காலம் எடுத்துக் கொண்டது. மீண்டும் கருணாநிதி முயற்சியில் சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது காவேரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டது.

 M.K. stalin urges Cauvery Management Board will be set immediately

அந்த நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி காவேரி நதிநீர் ஆணையம் அமைக்க 7 வருடங்கள் ஆனது. காவேரி வழக்கில் 17 வருடம் எடுத்துக் கொண்டு 2007 ஆம் வருடம் தான் நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு 6 வருடங்களுக்கு மேல் கால தாமதம் செய்து உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகு 2013ல் தான் அந்த தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. மூன்று வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை அரசிதழில் வெளியிடப்பட்ட தீர்ப்பின்படி காவேரி மேலான்மை வாரியம் மற்றும் காவேரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வில்லை.

இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 109 டிஎம்சிக்கு மேற்பட்ட தண்ணீரும் கிடைக்கவில்லை. இதுவரை கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற தீர்ப்புகளை எதிர்ப்பதும், சட்டம் கொண்டு வருவதும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கூட மதிக்காமல் அடம் பிடிக்கும் போக்கையும் மட்டுமே பிரத்யேகமாக கடைப்பிடித்து தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் உச்சநீதிமன்றமே நியமித்த காவிரி மேற்பார்வை குழுவை துளி கூட மதிப்பதில்லை என்ற நிலையை கர்நாடக மாநிலம் எடுத்து, இதனால் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை அடுத்தடுத்து, தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை நடக்கிறது.

காவிரி இறுதி தீர்ப்பை நிறைவேற்ற நான்கு நாளில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதுடன், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசே உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கி விட்டதால் தமிழகத்தின் உரிமை அநியாயமாக, மனிதாபிமானமின்றி மறுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவிரி இறுதி தீர்ப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் தள்ளி போய் கொண்டு இருப்பது அதை விட பெரிதும் கவலை அளிக்கிறது.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை புறக்கணிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்றும், அனைத்து நதிநீர் பிரச்சனைகளுக்கும் ஒரே நதி நீர் ஆணையம் அமைக்கப் போகிறோம் என்றும் மத்திய அரசு கூறு வது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி கால வரம்பு இன்றி ஒத்தி வை பத்தற்கான மிகப்பெரிய அபாய அறிவிப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு இறுதி தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் மேலும் பல ஆண்டுகள் கால தாமதம் ஆகும் நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப் படுகிறதோ என்ற பலத்த சந்தேகம் தமிழக மக்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும் எழுகிறது. ஆகவே இனியும் காவேரி நதிநீர் உரிமைக்காக தமிழகத்தை கால வரையறையின்றி காத்திருக்க வைக்க மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த பாரபட்சமான முயற்சியை கைவிட வேண்டும்.

அதுமட்டுமன்றி, புதிதாக அமைக்க போவதாக சொல்லப்படுகின்ற "அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நதிநீர் ஆணையம்" என்ற தந்திரமான யோசனையுடன் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பினை சிறிதும் தொடர்புபடுத்தாமல், தமிழகத்திற்கு நீதி கிடைக்கவும், வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விட்ட விவசாயிகளை மீட்டு, காப்பாற்றுவதற்கும், காவேரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்றுக் குழுவையும் உடனே அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு, மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் தருவதுடன், உச்ச நீதிமன்றத்திலும் முறையிட வேண்டுமென்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer M.K. stalin urges central government to Cauvery Management Board will be set immediately
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X