For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை இளம் பெண் வித்யா ஆசிட் வீசி கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இளம் பெண் வித்யாவை ஆசிட் வீசி கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் வித்யா, 23. சிறுவயதிலேயே தந்தையை இழந்த வித்யா தன்னுடைய தாயார் சரஸ்வதி, அண்ணன் விஜய் உடன் வசித்து வந்தார். சரஸ்வதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். எனினும் போதிய வருமானம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் வித்யா வேலைக்கு சேர்ந்தார்.

Man gets life imprisonment in 2013 Adambakkam acid attack case

கிண்டி நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த விஜயபாஸ்கர், 31 என்பவர், வித்யா வேலை செய்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்திற்கும் தெரியவந்தது. இரு தரப்பினரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

எனினும் தங்கையின் திருமணம் முடிந்த பிறகு உன்னுடைய திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று விஜயபாஸ்கரிடம் அவருடைய பெற்றோர் கூறினர். மேலும் வேறு எங்கும் ஜோடியாக ஊர் சுற்றக்கூடாது என்று இருவருக்கும் அவர்களின் குடும்பத்தினர் நிபந்தனை விதித்தனர். ஆனால் வித்யா வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்ற விஜயபாஸ்கர், அடிக்கடி வெளியே வருமாறு வற்புறுத்தினார். இதற்கு வித்யா மறுப்பு தெரிவித்து வந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதியன்று மதியம் கம்ப்யூட்டர் மையத்துக்கு சென்ற விஜயபாஸ்கர், வித்யாவை வெளியே அழைத்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயபாஸ்கர் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

சிறிது நேரத்தில் கையில் ஆசிட் பாட்டிலுடன் மீண்டும் அங்கு வந்த விஜயபாஸ்கர், எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி கையில் வைத்திருந்த ஆசிட்டை வித்யாவின் முகத்தில் வீசினார். இதில் படுகாயமடைந்த வித்யா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை ஜார்ஜ் டவுன் மெட்ரோ பாலிடன் 7-வது மாஜிஸ்திரேட்டிடம் வித்யா வாக்குமூலம் அளித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விஜயபாஸ்கரை கைது செய்து அவர் மீது செங்கல்பட்டு மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், திராவகம் வீசி கொலை செய்த குற்றத்திற்காக விஜயபாஸ்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராத தொகை கட்ட வேண்டும் என்றும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். தீர்ப்பை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் விஜயபாஸ்கர் அடைக்கப்பட்டார்.

அதே ஆண்டில்தான் காரைக்கால் இளம்பெண் வினோதினியும் ஆசிட் வீச்சு சம்பவத்தில் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
The Principal District and Sessions Court, Chengalpattu, has slapped a life sentence on the accused, S. Vijaya Bhaskar, who was found guilty of throwing acid on Vidya on January 30, 2013 leading to her death on February 13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X