For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள பூர்வீக இல்லத்தில் முகாமிட்டுள்ள வைகோவின் மகன் துரை வைகோ, சாத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Recommended Video

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அளித்த பிரத்யேகப் பேட்டி | Oneindia Tamil

    இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

    Mdmk General secretary Vaiko son Durai vaiyapuri Exclusive interview

    அதன் விவரம் பின்வருமாறு;

    கேள்வி: சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் ஏன் போட்டியிடவில்லை..?

    பதில்: நீங்கள் கேட்பது வாஸ்தவம் தான். எல்லோரும் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்வியை தான் கேட்கிறார்கள். சாத்தூர், கோவில்பட்டி என இரண்டு தொகுதிகளிலும் நான் நடத்திய சர்வேயில் இரண்டு தொகுதிகளும் நன்றாக இருக்கிறது என்றும், வைகோவின் மகன் என்பதால் நீங்களே போட்டியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனவும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டது. அதாவது நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என எங்கள் கட்சிக்காரர்கள் மட்டும் விரும்பினால் போதாது, மக்களும் விரும்பவேண்டும். அவர்கள் மனதில் எப்போது தாக்கத்தை ஏற்படுத்துகிறேனோ அப்போது நிச்சயம் போட்டியிடுவேன்.

    கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடாதது மதிமுக தொண்டர்களுக்கும்-நிர்வாகிகளுக்கும் சோர்வை ஏற்படுத்தியுள்ளதே..?

    பதில்: சிறிய ஒரு ஏமாற்றம் நிர்வாகிகளுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவர்கள் நடைமுறை அரசியலை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சாத்தூர் தொகுதியை பொறுத்தவரை சமூக நலப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் மருத்துவர் ரகுராமன் என்பவரை தான் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அவர் என்னை விட சாத்தூர் மக்களுக்கு அதிகம் நன்மை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. சாத்தூர் தொகுதியில் ரகுராமன் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றால் அவருக்கு பக்கபலமாக இருந்து தமிழகத்தில் முன் மாதிரி தொகுதியாக சாத்தூர் தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்பதை உங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    Mdmk General secretary Vaiko son Durai vaiyapuri Exclusive interview

    கேள்வி: உங்களை நேரடி அரசியலுக்கு கொண்டுவர அப்பா ஏன் தயக்கம் காட்டுகிறார்..?

    பதில்: அப்பாவை பொறுத்தவரை நான் அரசியலுக்கு வர வேண்டும் என அவர் என்றும் நினைத்ததில்லை. அதேபோல் தான் நானும் அரசியலுக்கு செல்ல வேண்டும் என விரும்பியதில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அரசியலால் எங்கள் குடும்பம் பட்ட கஷ்டங்கள் ஏராளம். மதிமுகவில் இன்று தொண்டனாக மட்டுமே இருக்கிறேன், பதவிகள்-பொறுப்புகள் குறித்தெல்லாம் இப்போது சொல்வதற்கு எதுவுமில்லை. காலம் பதில் சொல்லும்.

    கேள்வி: சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக வைகோ கூறியிருக்கிறார்.. அது என்னவாக இருக்கும்..?

    பதில்: நிச்சயம் தெரியாது, ஆனால் என்னை பொறுத்தவரை பதவி கிடைக்கவில்லை என்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் இந்தக் கால அரசியல் என்பது பணபலத்தை சார்ந்து இயங்குகிறது. இதனால் இதில் எப்படி செயலாற்ற முடியும் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது.

    கேள்வி: பம்பரம் சின்னத்தில் போட்டியிடவில்லை என்ற வருத்தம் மதிமுக தொண்டர்களுக்கு இருப்பது போல் தெரிகிறதே..?

    பதில்: மனம் திறந்து சொல்ல வேண்டும் என்றால் அந்த வருத்தம் மதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடந்த காலங்களில் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பு கை நழுவி சென்றதையும் இந்த தருணத்தில் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என எல்லோரும் எடுத்துக்கொண்டு இப்போது சிறப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.

    கேள்வி: முதல்முறையாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறீர்கள் -இந்த அனுபவம் எப்படி இருக்கிறது..?

    பதில்: புதிய அனுபவமாக இருந்தாலும் கூட பல இடங்களில் மக்கள் படும் துயரங்களை காணும் போது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் உலகம் 2021-ல் இருக்கும் சூழல், வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் விடும் அவலம் உள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எதுவும் செய்யவில்லை. எனக்கு அது தான் ஆச்சரியமாக இருக்கிறது, எதுவுமே செய்யாமல் எந்த தைரியத்தில் மக்களிடம் ஓட்டுக் கேட்டு அதிமுகவினர் வருகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் பெரிய பேச்சாளர் கிடையாது. மனதில் தோன்றியதை மக்கள் மத்தியில் பேசுகிறேன்.

    கேள்வி: பிரச்சாரத்தில் என்ன பேச வேண்டும் -எதை பேசக்கூடாது என அப்பா சொல்லிக் கொடுத்தாரா..?

    பதில்: அரசியல் பற்றியோ, மேடைப்பேச்சு தொடர்பாகவோ அப்பா எனக்கு எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை, சொல்லிக் கொடுக்கவும் மாட்டார். அப்பாவின் உடல்நலத்தையும், வயதையும் கருத்தில் கொண்டு நான் பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.

    English summary
    Mdmk General secretary Vaiko son Durai vaiyapuri Exclusive interview
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X