For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகதாதுவில் அணைக் கட்டினால்.. கர்நாடக அரசைக் கலையுங்கள்.. அன்புமணி ஆவேசம்

காவிரி நடுவில் மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடக அரசைக் கலைக்க மத்திய அரசிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசின் மதியாமையை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை மத்திய அரசு அழைத்துப் பேசி, மேகேதாட்டுப் பகுதியில் அணைக் கட்டும் திட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்த வேண்டும் என்று அன்புமணி கோரியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

உறவை சீர்குலைக்கும் கர்நாடகம்

உறவை சீர்குலைக்கும் கர்நாடகம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. அதேநேரத்தில் மத்திய அரசின் தடையை மீறி புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். மாநிலங்களுக்கு இடையிலான உறவைச் சீர்குலைக்கும் வகையிலான சித்தராமய்யாவின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

அரிதிலும் அரிது

அரிதிலும் அரிது

கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருக்கும் மேகேதாட்டு அணையின் மொத்தக் கொள்ளளவு 67.14 டி.எம்.சி. ஆகும். இந்த அணை கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 171.73 டி.எம்.சி தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். இது மேட்டூர் அணையின் மொத்தக் கொள்ளளவை விடக் கிட்டத்தட்ட இரு மடங்கு ஆகும். மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குக் காவிரியில் நீர் கிடைப்பது என்பது அரிதிலும் அரிதானதாகி விடும்.

தொடர்ந்து கடிதம்

தொடர்ந்து கடிதம்

இதை உணர்ந்து தான் பிரதமர் நரேந்திர மோடியை 3 முறையும், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை 2 முறையும் நேரில் சந்தித்து பேசினேன். இதுதொடர்பாக இருவருக்கும் பலமுறை கடிதம் எழுதியுள்ளேன். இதுதொடர்பாக 18.03.2015, 29.04.2015 ஆகிய தேதிகளில் எழுதிய கடிதங்களுக்கும், 03.03.2015 அன்று மக்களவையில் ஆற்றிய உரைக்கும் பதிலளித்து மத்திய நீர்வள அமைச்சர் உமாபாரதி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

வாக்குறுதி

வாக்குறுதி

அக்கடிதத்தில், ‘‘மேகேதாட்டு அணைக்காக விரிவான திட்ட அறிக்கை கர்நாடக அரசிடமிருந்து மத்திய நீர்வள ஆணையத்திற்குக் கிடைக்கும் பட்சத்தில், அதைக் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் எட்டாவது பிரிவின்படி மத்திய அரசு ஆராயும். காவிரி ஆறு மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறு என்பதால், மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் ஒப்புதலைப் பெற்று விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்திருந்தால் மட்டுமே அதைப் பரிசீலிப்போம். இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவோம்'' என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மேகேதாட்டு அணை குறித்த கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையைத் திருப்பி அனுப்பிய மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தராமையாவிற்கு கண்டனம்

சித்தராமையாவிற்கு கண்டனம்

ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மேகேதாட்டு அணையைக் கட்டுவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், இதுபற்றி விவாதிக்க வரும் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர் கூட்டியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்குரிய பொறுப்பை உணராமலும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராகவும் பேசியுள்ள சித்தராமைய்யாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த பத்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவிருப்பதால், அதில் அரசியல் லாபம் தேடுவதற்காகவே அவர் இவ்வாறு பேசி வருகிறார்.

இறையாண்மைக்குச் சவால்

இறையாண்மைக்குச் சவால்

தமிழகத்திற்குக் காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவை பிறப்பித்த ஆணைகளைக் கர்நாடக அரசு கடந்த காலங்களில் மதிக்கவில்லை. அதன் தொடர்ச்சியாக இப்போது மத்திய அரசின் தடையை மீறி மேகேதாட்டு அணை கட்டப் போவதாக அறிவித்திருப்பதை இந்திய அரசின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்க வேண்டும்.

கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்

கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசின் மதியாமையை மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்க்கக்கூடாது. இதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை மத்திய அரசு அழைத்துப் பேசி, மேகேதாட்டுப் பகுதியில் அணைக் கட்டும் திட்டத்தைக் கைவிடும்படி வலியுறுத்த வேண்டும். அதையும் மீறி அணைக் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால் கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் எடப்பாடி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் எடப்பாடி

மேகேதாட்டுவில் அணையைக் கட்டியே தீருவது எனக் கர்நாடகம் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது எந்த வகையான பொறுப்புணர்வு என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கர்நாடக அரசு வரும் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக அமைதி காத்து வருகிறார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம்

தம்மை ஆண் ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு அவரைப் போலவே பாதுகாப்புக்குக் காவலர்களை குவிப்பது, தொண்டர்களைக் காலில் விழ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக்கூடாது. காவிரியைக் காப்பது குறித்து விவாதிப்பதற்காகத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
Anbumani Ramadoss condemns Karnataka CM Siddaramaiah over Mekedatu Dam issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X