For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும்- வைகோ

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சியளிக்கிறது. இத்திட்டத்தால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்படும். மத்திய அரசு அறிவிப்போடு இல்லாமல் ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மீத்தேன் திட்டம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 15ம் தேதி வருகிறது. அதில் மத்திய அரசு திட்டம் தொடர்பாக போட்ட மனுவை வாபஸ் பெற்று, ரத்து தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Methane project cancelled: Vaiko welcomes the move

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மனதுக்கு நிறைவையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய செய்தியாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் இல்லை; பாறை படிம எரிவாயுவாகிய ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் இல்லை என்று இன்று அறிவித்த செய்தியை தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டேன். இதில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஓ.என்.ஜி.சி. மூலமாக சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பம் போடுகிறது என்று தெரிந்த உடனே, மீத்தேன் காவிரி டெல்டா பகுதியை அழிக்கின்ற நாசகாரத் திட்டம் என்று தமிழ்நாட்டிலேயே முதல் அறிக்கை தந்தவன் நான் என்ற தகுதியோடு இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகிறேன்.

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் ஊர் ஊராகச் சென்று போராடினார். அவருடைய கனவுகளில், குறிக்கோள்களில் ஒன்று காவிரி டெல்டா பகுதியில் இந்த எரிவாயு திட்டம் வரக்கூடாது என்பது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மறைமுகமாக இந்தத் திட்டத்தைத் செயல்படுத்த முனைகிறது என்ற நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்களும் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த நிலையில், நீதியரசர் ஜோதிமணி, அப்போதைய நிபுணர் நாகப்பன் அமர்வில் மீத்தேன் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று நான் கோரினேன். உடனே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

காவிரி டெல்டா பிரதேசங்களுக்கு தலைக்குமேல் கத்தியாக மேகதாட்டு, ராசிமணல் அணைக்கட்டுத் திட்டங்களால் பேரழிவு ஏற்டும் என்ற சூழல் இருக்கிறது. அதைவிடக் கொடிய அழிவை இந்த மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ் திட்டங்கள் ஏற்படுத்தும் என்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பில் இருந்தபோது, 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்11 ஆம் தேதி, அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு திட்டம் நிறைவேற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தமிழ்நாட்டுக்குச் செய்த பச்சை துரோகம்.

ஆனால், ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் நேரத்தில் நாங்கள் மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டில் எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார். மீண்டும் பசுமைத் தீர்ப்பாயத்திற்குச் சென்றோம். வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் கட்டத்தில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், குறிப்பிட்ட கால இடைவேளைக்குள் அந்தத் திட்டத்தை செயல்படுத்தாததால், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு போட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்கிறோம். ஆனால், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்ட நோக்கத்தை நாங்கள் கைவிடவில்லை என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறினார்.

எதிர்ப்பை மீறி மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவந்தால் மக்கள் உடைத்து நொறுக்குவார்கள். தஞ்சாவூரில் இருக்கின்ற அலுவலகத்தை நாங்கள் இயங்க விடமாட்டோம் என்று முதல் நாள் ராஜ ராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் புறப்பட்ட அன்றே அறிவித்தேன். ஊர்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள். அன்று இரவோடு இரவாக தஞ்சையில் இருந்த மீத்தேன் எரிவாயு எடுக்கும் அலுவலகத்தை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.

மீத்தேனைவிட கொடுமையான ஷேல் கேஸ் எனும் பாறைப் படிம எரிவாயுவை எதிர்த்து எங்கள் விவசாய அணி மாநிலச் செயலாளர் முருகன் மூலமாக நாங்கள் வழக்குத் தொடுத்திருக்கிறோம். விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அவர்களும் வழக்குத் தொடுத்திருக்கிறார். இதில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. சார்பில் வழக்காடிய வழக்கறிஞர்கள், இது இந்தியாவின் பொருளாதாரத்தை நூறு மடங்கு உயர்த்தும். இது நாட்டுக்குத் தேவையான திட்டம் என்றார்கள்.

நாங்கள் என்ன பலி ஆடுகளா? நாங்கள் அடியோடு அழிந்துபோவோம். ஐரோப்பா கண்டத்தில் 13 நாடுகள் ஷேல் கேஸை தடை செய்திருக்கின்றன. அமெரிக்காவின் பல மாநிலங்களில் தடை இருக்கின்றது.

ஹைட்ராலிக் பிராக்சரிங் என்ற முறையில், பூமிக்கு அடியில் பத்தாயிரம் அடிக்குக் கீழே 634 வேதிப் பொருட்களை தண்ணீருக்குள் செலுத்தி நச்சுத் தண்ணீரை வெளியே விடுகிறார்கள். இதனால் விவசாயம் அடியோடு பாழாகிவிடும். எனவே, இந்த ஷேல் கேஸ் திட்டத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது என்று ஓ.என்.ஜி.சி. சேர்மேனாக இருந்த அறிவியல் நிபுணர் உண்மைகளை ஒப்புக்கொண்டு, இதனால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கி நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த ஆவணத்தையும், ஷேல் கேஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றிய சுற்றுச் சூழல் நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ஆவணங்களாக்கி தீர்ப்பாய நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, நெடுநேரம் வாதாடியிருக்கிறேன்.

இயற்கை எரிவாயு அனுமதி அளிப்பதில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து ஷேல் கேஸுக்கு அனுமதி தருவதற்கு மத்திய அரசு முயற்சி செய்தது. தீர்ப்பாய நீதிமன்றத்தில் முன்பு வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதியிலேயே ஷேல் கேஸுக்கும் சேர்த்து திருத்தம் கேட்டிருக்கிறார்கள். இது மிகவும் மறைமுகமான, தந்திரமான வேலை. நீதியரசர் ஜோதிமணி அவர்களும், இப்போது அமர்வில் இருக்கிற நிபுணர் ராவ் அவர்களும், சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் நீங்கள் புதிதாகத்தான் அனுமதி பெறவேண்டும். பழையவற்றில் திருத்தம் என்று நீங்கள் கொண்டுவரக்கூடாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.

தீர்ப்பாயத்தில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டதன் விளைவாகத்தான், ஓ.என்.ஜி.சி. புதிதாக அனுமதி வேண்டி விண்ணப்பம் கொடுத்திருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் குத்தாலம் பகுதியை தேர்வு செய்திருக்கிறார்கள். இதுதான் உண்மை. நீதிபதி ஜோதிமணி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எண்ணெய் எடுக்கிறோம் என்று ஷேல் கேஸ் ஆய்வில் மத்திய அரசு ஈடுபட்டபோது, விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த நிலைமையில் வருகிற 15 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதலில் மீத்தேன் எரிவாயுவுக்கு ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டி போட்டது ஜெயலலிதா அரசு. அந்தக் கமிட்டி மீத்தேன் எரிவாயு கூடாது என்று கூறியது போன்று, ஒரு எக்ஸ்பர்ட் கமிட்டியாவது போட வேண்டும் என்று கோரிக்கை வைத்துவிட்டு, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும என்று கேட்டுக்கொண்டோம். இப்படிப்பட் சூழ்நிலையில், ஷேல் கேஸ் நாங்கள் எடுக்கவில்லை என்று கூறினாலும், அதை எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி. பல இடங்களில் ஈடுபட்டது.

தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளபடி ஷேல் கேஸ் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்குக் கொடுத்த மனுவை திரும்பப் பெறவேண்டும். காவிரி டெல்டாவின் எந்தப் பகுதியிலும் ஷேல் கேஸ் எடுக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். தற்போது அறிவித்ததை நான் வரவேற்கிறேன். ஆனால், நாங்கள் திட்டத்தைக் கைவிடவில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியது போன்று முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பசுமைத் தீர்ப்பாயத்தல் வருகின்ற 15 ஆம் தேதி வழக்கு வருகிறது. அப்போது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை நீதிபதிகள் சொல்லச் சொல்வார்கள். ஆகவே மத்திய அரசின் நிலைமை வருகிற 15 ஆம் தேதி திட்டவட்டமாகத் தெரிந்துவிடும்.

English summary
MDMK general secretary Vaiko welcomes central government announcement Cancel of methane project in Cauvery delta district Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X