For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா கையால் அண்ணா விருதைப் பெற்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் பெரியார், அண்ணா விருதுகள் உள்ளிட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடந்தது. அதில் சமீபத்தில் தேமுதிகவை விட்டு வெளியேறி வந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதைப் புன்னகை பூத்த முகத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Panruti Ramachandran honoured with Anna award by Jaya

அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் இவ்விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் 2013-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர் அண்ணா விருதினை பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அண்ணல் அம்பேத்கர் விருதினை பேராயர் முனைவர் பிரகாசுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை அய்யாறு வாண்டையாருக்கும், மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஞானசம்பந்தனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை முனைவர் ராதா செல்லப்பனுக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதினை அசோகமித்திரனுக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை பேராசிரியர் முனைவர் ஜெயதேவனுக்கும் வழங்கினார்.

விருதாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவற்றையும் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் மூ. இராசாராம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன் சமீ்பத்தில்தான் தேமுதிகவை விட்டும், அரசியலை விட்டும் வெளியேறி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Senior political leader Panruti Ramachandran was honoured with Anna award by chief minister Jayalalitha today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X