For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அதென்ன, ஒரு பிரபல நடிகன் மட்டும் இத்தனை எதிர்ப்பைச் சந்திக்க வேண்டுமா?'

By Shankar
Google Oneindia Tamil News

- பட்டுக்கோட்டை பிரபாகர்

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் ரஜினியின் ஆதரவாளனுமில்லை. எதிர்ப்பாளனுமில்லை. சமூகப் பார்வையாளன் மட்டுமே.

பொதுவாக ஒரு தொழிலதிபரின், டாக்டரின், என் ஜினியரின், விஞ்ஞானியின் வளர்ச்சி வெளியில் தெரிவதில்லை. ஆனால் நடிகர், அல்லது் நடிகையின் வளர்ச்சி, வீழ்ச்சி, ஏற்றம், இறக்கம், வெற்றி, தோல்வி, அந்தரங்கமான பலம், பலவீனம் இத்தனையும் ஒவ்வொரு நிமிடமும் ஷேர் மார்க்கெட் நிலவரம் போல கவனிக்கப்படுகின்றன, அவர்கள் மீது எப்போதுமே அணைக்கப்படாமல் செலுத்தப்படும் மஞ்சள் வெளிச்சத்தின் காரணமாக.

Pattukkottai Prabhakar's question to Rajini haters

பிரபலமாயிருப்பதற்கு அவர்கள தர வேண்டிய நியாயமற்ற.. ஆனால் பழகிப்போன நடைமுறையில் இருக்கும் விலை இது. ஆனால் எதற்கும் ஓர் எல்லையிருக்கிறது.
ஒரு நடிகர், நடிகையின் அந்தரங்க வாழ்க்கை, அவர்களின் தொடர்புகள் பற்றி அத்தனை மீடியாக்களிலும் சகட்டுமேனிக்கு விமரிசிக்கும்போதும் அதீத சகிப்புத்த்மையுடனும் பொறுமையுடனும் ஏற்கிறார்கள்.

நாம் மனம் விட்டு ரசிக்கும், பாராட்டும் , கமெண்ட் அடிக்கும், மனதிற்குள் ரகசியமாக வக்கிரத்துடன் நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ளூம் ஒரு நடிகைக்கு வீடு தர முன்வருவதில்லை. திருமணம் செய்ய முன்வருவதில்லை. ஒழுக்க விஷயத்தில் ஏதோ நடிகைகள் மட்டுமே பெண்களின் பிரதிநிதிகள் போலவும் மற்ற அத்தனைத் துறையிலும் இயங்கும் பெண்கள் அனைவரும் கற்பைக் கட்டிக் காப்பது போலவும் ஒரு பிரமை மக்கள் மனதில் உண்டு.

அதேப் போல எக்கச்சக்கமாக பணம் சம்பாரிக்கும் மற்ற துறையில் இயங்கும் பணக்காரர்கள் ஏன் சமூகத்திற்கு செய்வதில்லை என்று கேள்வி கேட்பதில்லை. ஆனால் ஒரு நடிகன் மட்டும் சமூகத்திற்கு செய்வதற்குக் கடமைப்பட்டவனாகிறான்.

கமல் தன் சொத்துக்கள் அனைத்தும் பிரச்சினையில் இருப்பதாக தொண்டையடைக்க அறிவித்தபோது அவரால் பயனடைந்தவர்கள் தவிர அவரை பல வருடங்களாக ரசித்த பொது மக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று துணை நின்றார்களா என்ன? சமூகத்திற்குச் செய்வதும், அறிக்கை விடுவதும் விடாமலிருப்பதும் ஒரு தனி மனிதனின் சுதந்திரம்.

அதேப்போல அரசியலுக்கு வருவதும் வராமல் இருப்பதும் தனி மனித சுதந்திரம். முழுமையாக முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே நீ வரக் கூடாது, சமூகத்திற்கு என்ன செய்தாய் என்று கேள்விகள் எழுப்புவது சரியில்லை. இதுவரை அரசியலுக்கு வந்தவர்கள் அத்தனைப் பேரும் அதற்கு முன்பாக சமூகத்திற்கு செய்துவிட்டு தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு மக்கள் தோள்களில் கை போட்டு நடந்துவிட்டு பிறகுதான் வந்தார்களா என்று ஒரு அலசல் செய்துப் பார்க்க வேண்டும்.

இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்த அசாதாரண சூழ்நிலையில் ராஜீவ் காந்தி என்கிற ஒரு பைலட்டை பிரதம மந்திரியாகவே ஆக்கினார்களே.. முதல் நாள் வரை அவருக்கு என்ன தெரியும் அரசியல் பற்றி?

பல வருடங்கள் வெளிநாட்டில் இருந்துவிட்டு ஜெயலலிதா இறந்ததும் பேரவை துவங்கிய தீபாவை நீ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொன்னார்களா? இதுவரை யாரென்றே தெரியாத தீபாவின் கணவர் திடுதிப்பென்று கட்சி துவங்கி இரட்டை இலையைக் கைப்பற்றுவேன் என்கிறார். அதற்காக அவரின் உருவ பொம்மையைக் கொளுத்தினார்களா?

அதென்ன ஒரு பிரபல நடிகன் மட்டும் இத்தனை எதிர்ப்பை சந்திக்க வேண்டுமா? இதில் நீ கர்நாடகன், காவிரி பிரச்சினைக்காக நமக்கு ஆதரவுக் குரல் தரவில்லை என்று இனப் பாகுபாடு காட்டுவது தேசத்தின் மதச்சார்பின்மையையே கேலி செய்யும் விஷயம். தமிழ்நாட்டில் பெரிய இனக் கலவரங்கள் இல்லை. பல நண்பர்கள் இன்று நெருங்கிப் பழகுபவர்களின் ஜாதியை அறிந்திருப்பதுமில்லை. கேட்பதுமில்லை. அதைப்பற்றிக் கவலைப் படுவதுமில்லை.. காதல் என்று வரும்போதும் இனம், மொழி, மாநிலம் எல்லாம் விசாரித்துவிட்டா காதலிக்கிறார்கள்? உள் நோக்கத்துடன் இனப் பாகுபாட்டை மக்கள் மனதில் புகுத்த நினைப்பது முறையற்ற செயல்.

இதுவரை தமிழகத்தில் மிக முக்கியமான பொறுப்புகளில் பலரை மக்கள் அமர வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழர்களா? அந்த ஒரு தகுதியைப் பார்த்துத்தான் ஓட்டுப் போடுகிறார்களா? தமிழே தெரியாத வேற்று மாநில கவர்னர்கள் நம் மாநிலத்தை நிர்வகிக்கவில்லையா? அத்தனை மாவட்ட கலெக்டர்களும் தமிழர்களா? தமிழ்நாட்டில் நிர்வாகம் செய்யும் அரசு அதிகாரிகள், கலெக்ட்டர்கள் அனைவரும் தமிழர்களாகத்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அது சரியா? பல நல்ல திறமையான நிர்வாகிகள் அத்தனை மாநிலங்களிலிருந்தும் வந்து தங்கள் திறமையை, உழைப்பைத் தந்துகொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது. அரசு இயந்திரம் அரசியல்வாதிகளால் இயங்கவில்லை. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால்தான் இயங்குகிறது.

காமராஜர் கல்விக்கும் தொழிற்சாலைகளுக்கும் முன்னுரிமை தர விரும்பினார். அது அவரின் எண்ணம். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் அதிகாரிகள். நல்லாட்சி தர.. நல்லெண்ணம், மக்கள் மீது நிஜமான அக்கறை, மனிதாபிமானம், தொலைநோக்குப் பார்வை இவை இருந்தால் போதும். மற்றவற்றை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்.

ரஜினி நல்லவரா, கெட்டவரா? எனக்குத் தெரியாது.. அவர் திறமையானவரா, திறமையற்றவரா? எனக்குத் தெரியாது.. அவர் வந்தால் நல்லாட்சி தருவாரா இல்லை இன்னொரு ஊழல்வாதியாக மாறுவாரா? எனக்குத் தெரியாது. ஆனால்..ஒரு நபர் முடிவெடுப்பதற்கு முன்பாகவே வரவேக் கூடாது என்று முரட்டுத்தனமாக எதிர்க்கும் செயல் ஜனநாயக விரோதம் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

English summary
Writer Pattukottai Prabhakar's questions to politicians those opposing his entry to politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X