For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி. இரண்டையும் காப்பாற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

PMK wants Karnataka govt to appeal against Jaya verdict

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி வரை அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இத்தீர்ப்பு ஆச்சர்யமும், வியப்பும் அளிக்கும் போதிலும் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையே பல்வேறு குழப்பங்களுடன் தான் தொடங்கியது. ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த பிணை மனு பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர் தான் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியிருக்க வேண்டும்.

ஆனால், புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பதில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வழக்கில் குறுக்கிட்டு ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்படும் பவானிசிங்கை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்தது. இது ஒரு நீதிப்படுகொலை என்று 05.10.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் கண்டித்திருந்த நான், இந்த நியமனத்தை எதிர்த்து பொதுச்செயலாளர் க. அன்பழகன் மூலம் வழக்குத் தொடர வேண்டும்; இல்லாவிட்டால் ஊழலுக்கு துணை போன கட்சி என்ற அவப்பெயர் தி.மு.க.வுக்கு வந்து விடும் என்றும் கூறியிருந்தேன். ஆனால், தி.மு.க. உடனடியாக அதை செய்யாமல் மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங்கை வாதாட அனுமதித்தது முதல் கோணலாக அமைந்தது.

அடுத்ததாக ஏற்கனவே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா போன்றோர் பல மாத சிறைவாசத்துக்குப் பிறகே பிணை பெற முடிந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு மட்டும் 3 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. அதுமட்டுமின்றி ஜெயலலிதா கேட்காத நிலையில் அவரது மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது அடுத்த கோணலாக அமைந்தது.

பவானிசிங் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ஊழல் மிகப்பெரிய சமுதாயத் தீமை என்பதை கருத்தில் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பெங்களூர் உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் இம்முடிவுக்கு வந்தது என்பது சட்ட வல்லுனர்களுக்குக்கூட விடை தெரியாத வினாவாகவே உள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்டோர் எவ்வாறு சொத்துக்கள் வாங்கினர் என்பதை அவர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்து விட்டனர்; ஆனால், அவர்களின் வாதம் தவறு என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் கூறியுள்ளார். இந்த வழக்கின் அடிப்படையே இது தான். அரசு வழக்கறிஞராக வாதிட்ட பவானிசிங் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடாமல், ஆதரவாக வாதிட்டார் என்பது தான் அனைத்துத் தரப்பினரும் முன்வைத்த குற்றச்சாற்று ஆகும்.

பவானிசிங்கின் வாதத்தைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அதற்கு பதிலாக கர்நாடக அரசுத் தரப்பிலும், அன்பழகன் தரப்பிலும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட வாதங்கள் மட்டுமின்றி இவ்வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு உள்ளிட்ட ஆவணங்களையும் பரிசீலித்து தான் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்திருக்க வேண்டும். இது தான் உச்சநீதிமன்றம் அவருக்கு அளித்த வழிகாட்டுதல் ஆகும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரையை உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடைபிடித்ததற்கான அடையாளங்கள் தீர்ப்பின் எந்த பகுதியிலும் தென்படவில்லை.

ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்கள் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம்; அதுதொடர்பாக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்பட்டாலும் பின்னர் விடுதலை ஆகிவிடலாம் என்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி ஆகும். இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்; அதன்மூலம் ஜனநாயகத்தையும், நீதியையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has asked the Karnataka govt to file appeal against Jaya verdict at the SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X