For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் கோர்ட்டில் குண்டு வீச்சு... சந்தி சிரிக்கும் தமிழக சட்டம்- ஒழுங்கு: ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சேலம் நீதிமன்ற வளாகத்தில் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் நீதிமன்ற வளாகத்தில் போக்கிலியை கொலை செய்வதற்காக வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பதற்கு இதுதான் உதாரணம்.

Ramadoss condemns court attack

சேலத்தில் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட போக்கிலி ஒருவர், பிணை நிபந்தனைப்படி நீதிமன்றத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை கொலை செய்ய முயன்றுள்ளது. போக்கிலி மீது வீசப்பட்ட குண்டு நீதிமன்ற வளாகத்தில் விழுந்து வெடித்ததில் வழக்கறிஞர் காயமடைந்துள்ளார். 3 பேர் நீதிமன்ற வளாகத்திலேயே சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டிருக்கின்றனர்.

தாக்குதலுக்கு ஆளான போக்கிலி நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் சென்று தஞ்சமடைந்ததால் உயிர் பிழைத்துள்ளார். இவை அனைத்தும் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தில் காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் முன்னிலையில் நடந்திருக்கிறது. இத்தனை தாக்குதலையும் நடத்திய வன்முறை கும்பல் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றிருக்கிறது. அனைத்தையும் காவலர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர வன்முறை கும்பலை தடுக்கவோ, பிடிக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.

சேலம் நீதிமன்றம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அந்த நீதிமன்ற வளாகத்தில் இதுவரை இப்படிப்பட்டதொரு நிகழ்வு நடந்ததில்லை. நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறை கும்பல் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்திவிட்டு பொறுமையாக திரும்பிச் செல்ல முடிகிறது என்றால் தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு நிலை எவ்வளவு மோசமடைந்திருக்கிறது என்பதை உணரலாம். இதேநிலை நீடித்தால் வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் சுதந்திரமாக நடமாட முடியும்; அப்பாவி மக்களால் வெளியில் பாதுகாப்பாக நடமாட முடியாது என்ற நிலை உருவாகிவிடும் போலிருக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு பெரும் அவமானமாகும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கை சீரமைக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்து விட்டார். தமிழகத்தில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை 9,948 படுகொலைகள், 1 லட்சம் கொள்ளை மற்றும் திருட்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலை, கொள்ளைகள் அதிகரித்து விட்டதாக குற்றஞ்சாற்றும் போதெல்லாம் முதல்வர் ஜெயலலிதா தரும் விளக்கம் என்னவெனில், ‘‘ தனிப்பட்ட முறையில் இருவருக்கிடையே நிலவும் பகை காரணமாக கொலைகள் நடப்பதை அரசாங்கம் எப்படி தடுக்க முடியும்?'' என்பது தான்.

இது முதல்வரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. நாட்டில் நேர்மையான, கண்டிப்பான ஆட்சி நடக்கிறது... கொலையோ, குற்றமோ செய்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவோம் என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டால் குற்றச்செயல்கள் தானாக குறைந்து விடும். ஆனால், அப்படிப்பட்ட எண்ணம் ஏற்படும் அளவுக்கு நேர்மையான, கண்டிப்பான ஆட்சியை ஜெயலலிதாவால் வழங்க முடியவில்லை; அதில் அவர் தோல்வியடைந்து விட்டார் என்பதையே அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் காட்டுகின்றன.

மாநில மக்கள் அமைதியாகவும், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதை உறுதி செய்யாத அரசுகள் நீடிக்கத் தகுதியற்றவை. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு இது 100% பொருந்தும். பெருகி வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களால் நிம்மதியிழந்துள்ள மக்கள், வரும் தேர்தலில் இப்போதுள்ள அரசை அகற்றி முன்னேற்றம் தரும் ஆட்சியை ஏற்படுத்தப்போவது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The PMK founder Ramadoss has condemned the bomb attack in Salem court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X