For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களுக்கு பணம் தரமாட்டோம் என்று அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா?: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramadoss slams cash for votes in yercaud
சென்னை: சுயமரியாதைக்கு பேர்பெற்ற தமிழக மக்களை பணத்திற்காக வாக்களிக்கும் நிலைக்கு ஆளாக்கிய பெருமை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வையே சேரும். தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் தரமாட்டோம் என்ற அறிவிக்க தி.மு.க., அ.தி.மு.க தயாரா? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"தேர்தல்கள் நடத்தப்படுவதன் நோக்கமே மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். ஆனால், தமிழ்நாட்டில் தேர்தல்களின் போது வாக்குகள் ‘வாங்க'ப்படும் விதத்தைப் பார்க்கும்போது வெகு விரைவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடுமோ? என்ற அச்சம் தான் எழுகிறது.

கொள்கைகளையும், வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களின் வாக்குகளை அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாங்குவது தான் காலம்காலமாக வழக்கமாக இருந்து வருகிறது. மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக பணமும், பரிசுப் பொருட்களும் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தால் கூட அது எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் விதிவிலக்காகவே இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பணத்தையும், பரிசு பொருட்களையும் கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் விதி என்ற நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

டெல்லியை சேர்ந்த ஊடக ஆய்வு மையம் (Centre for Media Studies - CMS) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வாக்குகளை வாங்குவதற்காக மக்களுக்கு பணம் தருவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

தமிழக வாக்காளர்களில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பணம் பெற்றுக் கொண்டு தான் வாக்களிக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சுயமரியாதைக்கு பேர்பெற்ற தமிழக மக்களை பணத்திற்காக வாக்களிக்கும் நிலைக்கு ஆளாக்கிய பெருமை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வையே சேரும். தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தருவதற்காக கொண்டு செல்லபட்ட போது பிடிபட்ட தொகை மட்டும் ரூ.60.10 கோடி என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இது அப்போது நடந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட மொத்த தொகையான ரூ.74.27 கோடியில் 80 சதவீதம் ஆகும். கைப்பற்றப்பட்ட பணமே இவ்வளவு என்றால், இதைவிட பத்து மடங்கிற்கும் அதிகமான தொகை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடும்.

அதேபோல் இப்போது நடைபெறும் ஏற்காடு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஏற்காடு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தது முதல் இன்று வரை, ரூ.8.6 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத பணமும், நகைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

ஏற்காடு தொகுதியுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. மொத்தம் 630 தொகுதிகளை உள்ளடக்கிய 5 மாநிலங்களில் கைப்பற்றப்பட்ட தொகையில் பாதியளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் ஒரே ஒரு தொகுதியில் பிடிபட்டிருக்கிறது. இதிலிருந்தே ஏற்காடு இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்று போற்றப்படும் நிலையில் அதை ‘மணி சக்தி' மூலம் வாங்க முயல்வது இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. எத்தனையோ தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் தேர்தல் ஆணையம் பணபலத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்று வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. இந்த அளவுக்குத் தான் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளன.

தேர்தல்களில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதனால் தான் வாக்காளர்களுக்கு ஒரு போதும் பணம் வழங்க மாட்டோம் என்றும், வாக்குச்சாவடி செலவுகளுக்காக பணம் வழங்குவதில்லை என்று உறுதி ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்தை ஆளும் கட்சியாகவும், ஆண்ட கட்சியாகவும் இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எங்களைப் பின்பற்றி இனி வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட தர மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்து, பின்பற்ற முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஊழல் செய்து சேர்த்த பணம் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க அவர்கள் முயல்வதாகவும், தமிழகத்தில் நிலவுவது ஜனநாயகம் அல்ல.... பணநாயகம் தான் என்றும் மக்கள் கருத வேண்டியிருக்கும்.

தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் தருபவர்களை எச்சரிப்பது, கண்டித்து விட்டு விடுவது, வழக்குப்பதிவு செய்துவிட்டு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது என்பன போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளை எடுப்பதுடன் நின்று விடக்கூடாது. ஓட்டுக்கு பணம் தருபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை தேர்தல் ஆணையம் பெற்றுத்தர வேண்டும். அப்போது தான் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்" இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed that all the major parties are giving cash to voters in Yercaud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X