For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின் வாரிய ஊழல்: வாரிய தலைவரை தலைமைச் செயலாளராக்கி பாதுகாக்கும் அரசு- ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மின்வாரியத்தில் 4 ஆண்டுகளில் ரூபாய் 55,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த ஊழல் குறித்த சரியான விசாரணை தேவை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

Ramdoss says about EB scam…

மின்சார வாரியத்தில் மின் உற்பத்திக்கு பதிலாக முறைகேடு உற்பத்தி தான் நடைபெற்றிருக்கிறதோ என்று கருதும் அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மின்வாரியத்தின் இழப்பும், கடன்சுமையும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

மின்சார வாரியத்தின் மோசமான செயல்பாடுகள் குறித்து முந்தைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். ஆனால், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தங்களின் குறைகளை மறைப்பதற்காக தவறான தகவல்களை வெளியிட்டு வந்தார்களே தவிர, நிர்வாகத்தை செம்மைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் மின்சார வாரியம் எந்த அளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

மின்வாரியத்தின் கடன் சுமை அதிகரிப்பதற்கு காரணம் அந்த அமைப்பு சந்தித்து வரும் இழப்புகள் தான். 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டுகளில் மின் வாரியம் மொத்தம் ரூபாய் 77,917 கோடி இழப்பை ஈட்டியுள்ளது.

மின்வாரிய இழப்பு அதிகரிப்பதற்கு காரணம் அங்கு நடக்கும் நிர்வாக சீர்கேடுகளும், ஊழல்களும் தான். மின்சார வாரியத்தில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த விவரங்களை விட சிறந்த ஆதாரம் இருக்க முடியாது.

போதிய அளவில் மின்னுற்பத்தித் திட்டங்கள் நிறைவேற்றப்படாததும், அதைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்களிடமிருந்து மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதும் தான் மின்வாரிய இழப்புக்கு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு வரை மின்தட்டுப்பாடு இல்லை. இக்காலத்தில் மின்வாரிய இழப்பு சராசரியாக ஆண்டுக்கு ரூபாய் 1,000 கோடி என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், மின்வெட்டு தீவிரமடைந்த 2008 ஆம் ஆண்டில் ரூபாய் 7,771 கோடியாகவும், 2011 ஆம் ஆண்டில் ரூபாய் 14,312 கோடியாகவும் அதிகரித்திருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் 3 ரூபாய்க்கு கிடைக்கும் மின்சாரத்தை தனியாரிடமிருந்து ரூபாய் 15.14 என்ற அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதமும் இழப்புக்கு காரணம் ஆகும். குறித்த காலத்தில் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால் தனியாரிடம் மின்சாரம் வாங்குவதைத் தவிர்த்து இழப்பைக் குறைத்திருக்கலாம்.

ஆனால், மின்திட்டங்கள் திட்டமிட்டே தாமதப்படுத்தப்பட்டன. மேலும் மின்திட்டங்களை தாமதப்படுத்திய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்கவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேட்டூர், வடசென்னை மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக அவற்றின் ஒப்பந்ததாரர்களான பி.ஜி.ஆர் குழுமம், பெல் நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து ரூபாய் 7,418 இழப்பீடு வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், இந்த இழப்பீடு வசூலிக்கப்பட்டு இருந்தால் பேருதவியாக இருந்திருக்கும். ஆனால், இந்த நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்து விட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சார வாரியத்தை சீரமைப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், இவை பற்றி விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு பதிலாக மின்சார வாரியத்தின் தலைவரை தலைமைச் செயலாளராக்கி பாதுகாக்கிறது.

இப்படிப்பட்ட அரசு இந்த முறைகேடுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, மின்வாரியத்தில் நடந்த முறைகேடு மற்றும் ஊழல் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
PMK Leader ramadoss says that Government will take action on Electricity board scams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X