அழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன?

சென்னை: அழகிரி - செல்லூர் ராஜூ சந்திப்பு ஏன் நடந்தது? அதன் பின்னணி என்ன? அழகிரி தற்போது புதுக்கட்சி தொடங்க போகிறதா சொல்கிறாரே... உண்மையா? என்பது போன்ற கேள்விகள்தான் மக்களின் மனதில் நேற்றிலிருந்து குடைந்து எடுத்து வருகிறது.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற ஆளுமைகள் தற்போது உயிருடன் இல்லை. இன்னொரு பக்கம், ரஜினி, கமல் போன்றவர்களின் வருகை நிகழ்ந்துள்ளது. இதில் ஆளும் கட்சியின் மறக்க முடியாத ஆர்.கே.நகர் தோல்வி வேறு. இதனால் தாங்கள் பலமிழந்திருக்கிறோம், செல்வாக்கும் மங்கி வருகிறது என்ற யதார்த்தத்தை அதிமுக தற்போது நன்றாகவே உணர்ந்துள்ளது.

அதிரடி பேச்சுகள்
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து, அமைச்சர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவது, என்ன வேண்டுமானாலும் பகீர் கிளப்புவது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, கண்டபடி பேட்டிகள் கொடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் அதிரடிகளை காட்டிக் கொண்டே கடந்த 2 வருடங்களை ஓட்டி வருகிறார்கள்.

ஸ்டாலினின் வளர்ச்சி
இதனால் தங்கள் மீதான கவனத்தை திசை திருப்பியும் வருகிறார்கள். அதே நேரத்தில் திமுகவுக்கு என்று ஓரளவு செல்வாக்கு தற்போது இருப்பதையும், ஸ்டாலின் தனிப்பெரும் தலைவராக உருவாகி இருக்கிறார் என்பதையும் நன்றாகவே உணர்ந்து வருகிறார்கள். இதற்காகவே அழகிரியை லாவகமாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

அழகிரி வெற்றி பேரணி
திமுக தலைமை மீது அழகிரிக்கு ஏற்பட்ட அதிருப்தியிலிருந்தே, அவரை தங்களுக்கு ஏற்றவாறு கையாள அதிமுக துணிந்துவிட்டது. முதலாவதாக, அழகிரி நடத்திய பேரணியில்,பெரும்பாலும் கலந்துகொண்டது அதிமுகவினர் என்றும் ஊடகங்களில் சொல்லப்பட்டது. இரண்டாவதாக, அழகிரி பேரணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அவசியம் அதிமுகவுக்கு என்ன? மூன்றாவதாக, பேரணி முடிந்தபிறகும் தம்பிதுரை முதல் செல்லூர் ராஜூவரை அழகிரியின் பேரணி ஒரு வெற்றி பேரணி என்று புகழ்ந்தும் தள்ளினார்கள்.

அழகிரியின் புது அமைப்பு
நான்காவதாக, சமீபத்தில் செல்லூர் ராஜூ அழகிரி பற்றி செய்தியாளர்களிடம் பேசும்போது, "அழகிரியின் 40 ஆண்டுகால அரசியல் பணியைப் பற்றி மதுரையில் உள்ள நான் நன்கு அறிவேன். அவரது திறமை, ஆற்றல், தேர்தல் காலத்தில் பணியாற்றும் பாங்கு போன்றவை எனக்கு நன்றாகத் தெரியும். மிகச் சிறந்த ஒரு அரசியல் தந்திரம், அரசியல் சாணக்கியம் கொண்டவர்"என்று ஒருபடி மேலே போய் அழகிரி தலையில் கூடை நிறைய ஐஸ் வைத்தார். ஐந்தாவதாக, நேற்றைய தினம் அழகிரி-செல்லூர்ராஜு சந்திப்பு நடந்துள்ளது. ஆறாவதாக, 'கலைஞர் எழுச்சி பேரவை' என்ற புதிய அமைப்பை அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவு தருவார்களோ?
இதற்கெல்லாம் என்ன காரணம்? நேற்றுதான் செல்லூர் ராஜூவை அழகிரி சந்தித்தார். ஆனால் இன்று ஒரு புதிய அமைப்பை அழகிரி ஆரம்பிக்க போவதாக கூறப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அதிமுகவின் எண்ணம், திருப்பரங்குன்றத்தில் திமுகவின் ஓட்டுக்களை பிரிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே அழகிரியை தனி அமைப்பு ஆரம்பிக்க வழி தெரிவிக்கப்பட்டதோ, அல்லது அழகிரியின் தனி அமைப்புக்கு ஆதரவு தருவதாக சொல்லப்பட்டதோ என்பது நமக்கு தெரியாது.

திமுக ஓட்டுக்கள் பிரியுமா?
ஆனால் அழகிரி தனித்து நின்றால் திமுக ஓட்டுக்கள் பிரிந்து அதன்மூலம் அதிமுகவுக்கு லாபம் என்றே கணிக்கப்படுகிறது. ஒருவேளை, அழகிரியின் புது அமைப்பை தங்களுடன் அதிமுக இணைத்து கொண்டாலும் ஆச்சயரிப்படுவதற்கில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் களத்தில் ஒன்றுசேர்ந்தாலும் அதிசயமில்லை. ஆனால் அழகிரி இப்படி தனிக்கட்சியோ, தனி அமைப்போ தொடங்குவது நிச்சயமாக அதிமுக, பாஜக போன்றோருக்குதான் சாதகமாகத்தான் அமையும் என்பதில் சந்தேகமில்லை.