For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சர்வாதிகாரத்தால் நிறைவேற்ற முடியாது : ஸ்டாலின்

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை சர்வாதிகாரத்தால் நிறைவேற்ற முடியாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை to சேலம் புதிய 8 வழி தேவையா?- வீடியோ

    சென்னை : சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடன் நிறைவேற்றிட முடியாது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    5 மாவட்டங்களின் வழியாக சென்னை வந்தடையும் இந்த 8 வழிச்சாலைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பாதையில் ஆறுகளும், மலைகளும் பாதிக்கப்படும் என்று மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

     நிலம் எடுக்கும் பணி

    நிலம் எடுக்கும் பணி

    இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை- சேலம் எட்டு வழி பசுமை விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்தை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயிகள், பாரம்பரியமாகத் தங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான விளைநிலங்கள் பறிபோகின்றனவே என்று மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எங்களைக் கொன்றுவிட்டு எங்களின் பிணங்கள் மீது நடந்து சென்று விளைநிலங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கதறிக் கண்ணீர் சிந்தியவாறு ஆவேசமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

     அழிவை ஏற்படுத்தும்

    அழிவை ஏற்படுத்தும்

    ஆனால் இப்படி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் மக்களைப்பற்றி தமிழக அரசு சிறிதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், காவல்துறையை துணைக்கு வைத்துக் கொண்டு நில அளவை செய்து விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்வது அங்குள்ள விவசாயிகளுக்கு ஆத்திரத்தையும் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. எட்டு வழிச் சாலை அமைப்பதால் எட்டு ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும்; ஐநூறு ஏக்கர் வனப்பகுதியை அழிக்க வேண்டியதிருக்கும்.

     முதல்வரின் எண்ணம்

    முதல்வரின் எண்ணம்

    எட்டு மலைகளை அழிக்க வேண்டியதிருக்கும் என்றெல்லாம் அங்குள்ள விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் எல்லாம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுப் போராடும் வேளையில், அவர்களின் கவலைகளையும் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டறியாமல், எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதிக்க எண்ணத்துடன் அதீத ஆர்வமும் அளவில்லா வேகமும் காட்டுவதன் பின்னணி என்ன?

     நிறைவேற்றத் துடிப்பது ஏன் ?

    நிறைவேற்றத் துடிப்பது ஏன் ?

    நீர் ஆதாரமே தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கின்ற நிலையில், இந்தத் திட்டத்தால் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள், நூறுக்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள் அழித்து நாசமாக்கப்படும் என்று வெளிவரும் செய்திகளை, கடமை உணர்வும் பொறுப்பும் உள்ள, மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு புறந்தள்ளி விட்டு, இத்திட்டத்தை நீர் ஆதாரங்களை அழித்து மண்மேடாக்கி நிறைவேற்றத் துடியாய்த் துடிப்பது ஏன்?

     அப்பட்டமான அராஜகம்

    அப்பட்டமான அராஜகம்

    திமுகவின் சார்பில் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்துங்கள் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்த பிறகு, ஆங்காங்கே நீர்த்துப்போன வெற்றுக் கருத்துக் கேட்பு என்ற கண் துடைப்பு நாடகம் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஏனோதானோவென நடத்திவிட்டு, விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றுவதைத் தொடருவது ஏன்? திட்டத்திற்கு எதிராக நியாயமான கருத்துகளைச் சொல்லும் மக்களை கைது செய்வதையும் மிரட்டுவதையும் நிறுத்தாதது ஏன்? தமிழக அரசின் இந்த அப்பட்டமான அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

     நிபுணர் குழு வேண்டும்

    நிபுணர் குழு வேண்டும்

    ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிக முக்கியம் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியாவது உணர முன்வரவேண்டும். சொந்த மாவட்ட மக்களின் போராட்டத்தைப் பார்த்தாவது, அவருக்கு இந்தத் திட்டத்தை எதிர்க்கும் மக்களின் வீரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே விவசாய நிலங்களோ, நீர் ஆதாரங்களோ, பசுமை நிறைந்த மலைகளோ பாதிக்கப்படாத வகையில், இந்த சென்னை-சேலம் பசுமை விரைவு சாலைத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு ஏற்றதொரு திட்டத்தைத் தயாரிப்பதற்கு அல்லது இப்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்கு, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்திட வேண்டும்.

     அறவழிப்போராட்டம் நடக்கும்

    அறவழிப்போராட்டம் நடக்கும்

    ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் சனிக்கிழமை சேலத்தில் இதை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக அரசு தொடர்ந்து இதே பாதையில் திட்டத்தைப் பிடிவாதமாக நிறைவேற்றவும், மக்களைத் துன்புறுத்தி, அவர்களின் விளை நிலங்களை அத்துமீறிப் பறிக்க முயலுமேயானால், இந்தத் திட்டம் தொடர்புடைய அனைத்து மாவட்டங்களிலும் திமுக அறவழியில் மாபெரும் போராட்டத்தை நடத்தும்.

     பயங்கரவாத அணுகுமுறை

    பயங்கரவாத அணுகுமுறை

    இது ஜனநாயக நாடு; ஆகவே மக்களின் ஒத்துழைப்பும் ஒப்புதலுமின்றி, சர்வாதிகார மனப்பான்மையுடனும் தன்முனைப்புடனும், எந்தத் திட்டத்தையும் அரச பயங்கரவாதத்தைக் கொலுவேற்றி வைத்துக்கொண்டு, நிறைவேற்றிட முடியாது என்பதை முதல்வர் பழனிசாமி புரிந்துகொண்டு, குறுகலான ஒருவழிப்பாதை அணுகுமுறையைக் கட்டாயம் தவிர்த்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Salem Chennai Green Corridor not done by Dictatorship says Stalin. DMK Leader Stalin says that, Green corridor project affects many Farmers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X