For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களிடம் இருப்பதைவிட அதிக சாதி, மதவாதம் ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது!- சீமான் பேட்டி 3

By Shankar
Google Oneindia Tamil News

சீமான் பேட்டி தொடர்ச்சி...

கேள்வி: 2016 தேர்தலில் சில கட்சிகள் பூரண மதுவிலக்கு தான் எங்களது முதல் கொள்கை என கூறி அதை முன் வைத்து வருகிறார்கள். பூரண மதுவிலக்கு சாத்தியமா? நாம் தமிழர் கட்சியின் மதுவிலக்கு கொள்கை என்ன??

சீமான்: மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்னவென்றால் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது தான். அதைத்தான் அரசுக்கும் கோரிக்கையாக வைத்தோம்... எவ்வாறு மதுவிலக்கை அமல்படுத்தலாம்? ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தலாம். முதலில் மதுக்கடைகளை தொலை தூரப்படுத்தலாம். மேலும், வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளின் அருகேயுள்ள மதுக்கடைகளை உடனே மூடி விடலாம். அதன் பிறகு அங்கு வேலைப் பார்க்கும் பணியாளர்கள் அனைவருக்கும் மாற்று வேலைகளைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மதுக் கடைகளை மூடி வரலாம். முதலில் ஆறு மாதங்களில் கொஞ்சம் கடைகள்.. அடுத்த ஆறு மாதங்களில் மீதமுள்ள கடைகள் என அனைத்தையும் மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்திவிடலாம்.

இதற்கு மாற்றாக நாங்கள் பார்ப்பது என்னவென்றால், ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு மது இருக்கிறது. உதாரணமாக ரஷ்யா என்றால் வோட்கா இருக்கிறது, ஒரு சில இடங்களில் ஒயின், ஒரு சில இடங்களில் விஸ்கி என ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொன்று இருக்கின்றது. நாம் நீண்ட வரலாற்று பெருமையுள்ள ஒரு தேசிய இன மக்கள், நமக்கென்று ஒரு மது கிடையாது... பாரம்பரிய சங்க கால இலக்கியங்களில் கள்ளைப் பற்றிய பாடல்கள் இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டமே கள் என்பது உணவில் ஒரு பகுதிதான் எனக் கூறுகிறது. நான் கூறுவது என்னவென்றால் பனம் பால், தென்னம் பால் இரண்டையும் தமிழர் தேசிய மதுபானமாக அறிவித்துவிட்டு, செயற்கை மது பானங்கள் அனைத்தும் மூடி விடலாம். எப்படி ரசாயண உரங்களை விட்டு விட்டு இயற்கை உரங்கள், இயற்கை விவசாயம் என வருகிறோமோ அதேபோல் பனம் பால், தென்னம் பால் வைக்கும் போது என் வேளாண்மை, குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. பனை, தென்னை இரண்டும் பாதுகாக்கப்படுகிறது. இது இயற்கையிலேயே வருகிற மது என்பதால் உயிருக்கு பேராபத்தையோ, பல லட்சம் ரூபாய்களை அழித்தோ, சொத்துக்களை அழித்தோ என்று அப்படி ஒரு சூழலை அது உருவாக்காது.

Seeman's Kelvigalal Oru Velvi Seivom 3

ஆகையால், பனம் பால், தென்னம் பாலை தேசிய மதுவாக அறிவித்து, கிராம புறங்களிலும், நகர் புறங்களிலும் இல்லாமல் தொலை தூரத்தில் வைத்து அதை விற்றுக் கொள்ள அனுமதிக்கலாம்.

கேள்வி: கல்வி கூடங்கள் தற்போது கொலைக் களமாக மாறிவரும் சூழல். இளம் பிள்ளைகள் பலர் கல்விக் கூடங்களில் மரணிக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இல்லாத ஒரு மோசமான சூழல் இப்போது ஏன், எப்படி வந்தது?

சீமான்: ஒரே காரணம்.. கல்வி என்பது வியாபாரம் ஆகிவிட்டதுதான். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்வி என்பது பொதுமையாக இருந்தது. அது அரசிடம் இருந்தது. மக்களுக்கான வரிப்பணத்தில் இருந்து கல்வி, மருத்துவம், குடிநீர், பாதை, மின்சாரம் என இவை அனைத்தையும் அரசே பொது விநியோகமாக கொடுக்க வேண்டும். இதற்காகத்தான் அதற்கான ஒரு பொது நிறுவனத்தை நிறுவுகிறோம். அதற்குத்தானே நாம் வரியும் கட்டுகிறோம். இதையெல்லாம் ஏற்படுத்தி வைத்துவிட்டு, அந்தக் கல்வியை தரமா, முறையா, சரியா, சமமாக தரமுடியாததால், தனியார் கல்வி நிறுவனங்களைத் தேடி ஓடுகின்றனர் மக்கள்.

என் பிள்ளைகள் அனைவருக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என எண்ணம் இருக்கிறது. ஆனால் படிப்பதற்கு பணம் இல்லை, இதனால் அங்கங்கு சரியாக அனுமதி பெற்றும், பெறாத கல்லூரிகளில் சேர்கின்றனர். கடைசியாக எஸ் வி எஸ் என்ற தனியார் கல்லூரியில் ஏற்பட்ட நிலைமை டி டி என்ற கல்லூரி மாணவர்களுக்கும் இருந்தது. அந்த கல்லூரி மாணவர்கள் ஒரு வருட காலமாக போராடினார்கள். அவர்களுக்கு ஆதரவாக நானும் போராடினேன். இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி அங்கீகாரம் பெறாமல் கல்லூரியை இவர்கள் இயக்கியிருக்கிறார்களே. இது அரசு அதிகாரங்களுக்கு தெரியாமல் வந்து விட்டதா? இல்லை. கமிஷன் வாங்குகிற தரகர்களால் வருகிறது. நாட்டை தலைவர்கள் ஆளாமல் தரகர்கள் ஆள்வதால் வருகிற சிக்கல்கள் இது. முதலாளிகளுக்கும் மக்களுக்கும் இடையே தரகு வேலைகள் பார்க்கும் தரகர்களால் வரும் சிக்கல் இது.

நம் பிள்ளைகள், நம் மண்ணின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தால், எந்த எந்த கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு இருக்கிறது என்பதை பார்த்து விட்டுதானே அந்தக் கல்லூரிகளுக்கு உரிமம் வழங்கியிருக்க வேண்டும். உரிமம் கொடுத்து விட்டு அப்புறம் இல்லை என்று ரத்து செய்தால் எப்படி? முதலில் அடிப்படை கட்டமைப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டுத்தானே உரிமம் கொடுத்திருக்க வேண்டும்.

எஸ் வி எஸ் கல்லூரியில் மூன்று பெண்கள் இறந்து விட்டார்கள், இறக்கவில்லை என்றால் இந்த உண்மைகள் வெளியே தெரிந்திருக்காது அல்லவா? இன்னும் எத்தனை கல்லூரிகள் இது போன்று இருக்கிறது என்று தெரியவில்லை. எதவாது ஒரு கல்லூரியில் யாராவது செத்தால்தான் அதுவும் நமக்கு தெரிய வரும் போல இருக்கிறது. அப்படி என்றால் கல்வி வர்த்தகமயமானது பேராபத்து தானே.

கேள்வி: சாதி வெறி கல்விக் கூடங்களில் அதிகமாகிக் கொணடே வருகிறது. அண்மையில் நடந்த ரோகித் வெமுலா தற்கொலை, அம்பேத்கார் படிப்பு வட்டத்திற்கு தடை போடுவது மாதிரியான விஷயங்கள் பெருகிக் கொண்டு வருகின்றனவே...

சீமான்: இதில் மதவாத அரசியல்தான் வேலை செய்கிறது. அம்பேத்கரை, பெரியாரை எதிர்க்கக் காரணம் ஜாதி இல்லை..மதம். இருவரும் தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். ஆதலால் அங்கு மத அரசியல் வேலை செய்கிறது. ஒரு தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசையை எரித்து விடுவார்கள். எரிந்த பின் அரசாங்கத்திடம் முறையிட்டால் 'நாய் கடித்தால் கூட அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல' என ஆணவத்தில் பேசுவது, இந்த மாதிரியான சிந்தனைகள் கல்வியறிவு பெறாத, விழிப்புணர்வு பெறாத, முழுமையான தெளிவு பெறாத சமூக சிந்தனையற்ற மக்களிடம் இருந்தால் இதை எப்படி சரி செய்வது என்று பேசலாம். ஆனால், இதையெல்லாம் சரிசெய்யக்கூடிய அதிகாரத்திடம், ஆட்சியாளர்களிடமல்லவா இப்படிப்பட்ட சிந்தனை இருக்கிறது! இதை எந்த மாதிரி நாம் எடுத்துக் கொள்வது... இதுதானே மிகவும் பேராபத்தும் கூட. ஒரு இடத்தில் நீதி கிடைக்கும் என்று சென்றால் அந்த நீதியே அநீதியாக இருந்தால் அதை எப்படி சரி செய்வது? அது தான் ஆபத்து.

ரோகித் விமுலாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி, 'பாரத மாதா ஒரு மகனை இழந்து விட்டாள். நான் மிகவும் மனம் வருத்தப்படுகிறேன்,' என்று கூறுகிறார். எடுத்தவுடனே அவர் இதைக் கூறியிருந்தால் பிரச்சனை எதுவும் வந்திருக்காது. அவர் யாக்கூப் மேமனுக்கு ஆதரவு தெரிவித்து போராடினார் என்று கூறுகிறார். யாக்கூப் மேமனுக்கு நான் கூடதான் ஆதரவு தெரிவித்துப் போராடினேன். யாக்கூப் மேமன் குற்றவாளி என்று யாராவது நிரூபித்தார்களா? அவர் குற்றவாளி என்றால் தலைமறைவு ஆகியிருக்க மாட்டாரா? அவரே வந்து சரணடைந்தார், அவரை எதற்காக தூக்கில் போட்டீர்கள்? அடிப்படையாக பார்த்தால் அப்சல் குருவிற்கு தூக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தினை இடிக்க வந்தவற்கு உதவினார் என்பதற்காகதான் தூக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் தீர்ப்பைப் படித்த நீதிபதி, எந்த தீவிரவாத அமைப்புகளுடனும் அப்சல் குரு தொடர்பு இருந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என்றுதான் படித்தார். தொடர்பு இல்லை என்றால் அப்சல் குருவை விடுதலை தானே செய்ய வேண்டும். ஆனால், 'தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியும், யாராவது ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதனால் இவருக்கு தூக்கு கொடுக்கிறேன்' என்று தூக்கு கொடுத்தார்கள்.

இப்படிப்பட்ட நீதியை நாம் எப்படி பார்ப்பது? பாராளுமன்றத்தை இடிக்க வந்தவருக்கு உதவி புரிந்ததற்காக அப்சல் குருவிற்கு தூக்கு என்றால் பாபர் மசூதியை இடித்தவனுக்கு என்ன தண்டனை கொடுத்து விட்டார்கள்? சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமையெல்லாம் சேர்ந்து தான் போர் நடத்தி ஈழத்தில் எங்கள் மக்களை கொன்று விட்டது என்று, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த மனசாட்சியும் கூறுகிறது. இந்த நாடு அவர்களை தூக்கில் போடுமா? இப்படியெல்லாமா நீதி இருக்கிறது... அதனால் தான் இந்த சிக்கல் வருகிறது.

மாட்டிறைச்சியை ஒருவர் சாப்பிட்டு விட்டார் என்பதற்காக அவரை கல்லால் அடித்துக் கொன்றார்கள். இதே மோடி அரசுதானே பிங்க் புரட்சி என்ற பெயரில் கடந்த ஆண்டு மட்டும் 24 லட்சம் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்திருக்கிறது? மாட்டிறைச்சியை சாப்பிட்டால் கசக்கும், அதை விற்று காசு, பணம் வந்தால் மட்டும் இனிக்குமா?

அடித்தட்டு மக்கள் மனதில் இருக்கின்ற மத, சாதி உணர்ச்சியை விட அதிகாரத்தில் மேலிடத்தில் இருப்பவர்களிடம் தான் மத, சாதி உணர்ச்சி மிகக் கொடியதானதாக உள்ளது. மேலிடத்தில் இருந்தவர்கள் சரியாக இருந்தால் இவையெல்லாம் சரியாக இருக்கும். அவர்கள் தான் இவை அனைத்தையும் நடத்துகிறார்கள். அதுதான் இவ்வளவு பிரச்சினை.

-வேள்வி தொடரும்..

சந்திப்பு: எஸ் ஷங்கர்

கேள்விகளை அனுப்ப: [email protected]
ட்விட்டரில் அனுப்ப: @Vinojasan

English summary
The 3rd part of Seeman's Kelvigalal Oru Velvi Seivom question - answer series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X