நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆகனும்.. சீமான் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

இதைத்தொடர்ந்து ஒரேநாடு ஒரே வரி என்ற அடிப்படையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதனால் தொழில் முனைவோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்தனர். இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,

அப்பட்டமான உண்மை

அப்பட்டமான உண்மை

ஓர் ஏழைப்பிரதமர் நாட்டையாளப் போகிறார் எனப் பரப்புரை மேற்கொண்டு ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த பாஜக, ஏழை எளிய மக்களுக்குக் கேடுவிளைவிக்கக்கூடிய அத்தனை திட்டங்களையும் மொத்தமாக நிறைவேற்றி அவர்களின் வயிற்றிலடித்துவிட்டது. வளர்ச்சி எனும் வர்ணம்பூசி மக்களுக்கு விளையும் இன்னல்களை மறைக்க முயல்வதில் காட்டும் முனைப்பில் ஒரு சதவீதத்தை கூடத் தன்மக்கள் நலனில் காட்டவில்லை என்பது அப்பட்டமான உண்மையாகும்.

பாமரனின் கேள்விக்கு பதில்

பாமரனின் கேள்விக்கு பதில்

ஓர் நள்ளிரவில் ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து, அதனைக் கறுப்புப்பணத்திற்கு எதிரான போர் எனப் பிரகடனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, அச்சம்பவம் முடிந்து ஓராண்டைக் கடந்திருக்கிற நிலையில் அப்போரினால் விளைந்த நன்மைகளை நாட்டு மக்களுக்குப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும். பண மதிப்பிழப்பிற்குப் பிறகு குறிப்பிட்ட விழுக்காடு பணம் வங்கிக்குத் திரும்பவே திரும்பாது; அதுவே கறுப்புப்பணம் என்றும், அதனைக் கண்டறிந்து அவ்விழுக்காட்டினைப் பெற்று மக்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவோம் என்றும் அள்ளி அளந்துவிட்ட நரேந்திரமோடி தற்போது கறுப்புப்பணம் முற்றும் முழுதாக ஒழிந்துவிட்டதா என்ற பாமரனின் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

என்ன திட்டங்கள் தீட்டப் போகிறார்?

என்ன திட்டங்கள் தீட்டப் போகிறார்?

வரி ஏய்ப்புச் செய்தவர்களைக் கண்டறிவதுதான் பண மதிப்பிழப்பின் நோக்கமென்றால் அதற்கு அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையுமே போதுமே, அதற்கு எதற்குப் பண மதிப்பிழப்பு? வரி ஏய்ப்புச் செய்தவர்களெல்லாம் கண்காணிப்புக்குள் வந்துவிட்டார்கள் என்றால், தற்போது நடக்கிற வருமான வரிச்சோதனைகளெல்லாம் எதற்காக நடக்கிறது? எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாது 3 இலட்சம் கோடி கறுப்புப்பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டது என்று மனம்போன போக்கில் கூறிய பிரதமர் மோடி அதுகுறித்து வெள்ளையறிக்கையை வெளியிடத் தயாரா? மேலும், மீட்கப்பட்டுவிட்டதாக அவர் கூறும் கறுப்புப்பணத்தினைக் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன திட்டங்களைத் தீட்டப் போகிறார் எனக் கூறுவாரா?

பெருமளவு பாதிப்பு - ஒப்புதல்

பெருமளவு பாதிப்பு - ஒப்புதல்

ஜி.எஸ்.டி. வரி கவுன்சிலானது, 178 பொருட்களின் மீதான வரியை 28 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. ஆனாலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான 18 விழுக்காடு வரி, தீப்பெட்டிகளுக்கு விதிக்கப்பட்ட 18 விழுக்காடு வரி, திரைப்படங்களுக்கான அதிகப்படியான வரி போன்றவை இன்னும் தளர்த்தப்படாமலிருக்கிறது. அவற்றின் வரிவிழுக்காட்டையும் குறைக்க வேண்டும் என்ற சராசரி மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பிறகு மத்திய அரசு செவிசாய்த்திடவேண்டும். இந்தத் திடீர் வரிகுறைப்பு நடவடிக்கைகளானது குஜராத்தில் நடைபெறவிருக்கிற தேர்தல் சுய இலாபத்திற்காகத்தான் என்றாலும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதையே இதுகாட்டுகிறது.

பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்

பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்

இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பை ஒட்டுமொத்தமாய் மோடியும், ஜெட்லியும் குலைத்துவிட்டார்கள் என்கிறார் அவர்களது கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு வரை குறைந்து, 3 இலட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள். ஆகையினால், நாடு எதிர்கொண்டிருக்கிற பொருளாதார வீழ்ச்சியை நாட்டையாளும் பாஜக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இத்தோடு, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு எனும் மோசமான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும். இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seeman urging Prime Minister Modi should ask appology for demonetization and GST. Modi made people to stand on the street without money He said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற