For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலில் ஏழுமுனைப் போட்டி: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தலில் ஐந்து முனை போட்டி ஏற்பட்ட நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஏழு முனை போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. அதிமுக, திமுக, பாமக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக, தமாகா ஆகிய அரசியல் கட்சிகளுடன் உள்ளாட்சி தேர்தல் களத்தில் சுயேச்சைகளின் ஆதிக்கமும் அதிகரிக்கும் என்பதால் வெற்றிக்கனியை பறிப்பதில் கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை 40ஆயிரத்திற்கும் மேல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 3ஆம் தேதி ஆகும்.

Seven team competition in Tamil Nadu local body election

பல அரசியல் கட்சிகள் இன்னும் பேச்சுவார்தையை நடத்தாமல் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பலமுனைப் போட்டியால் உள்ளாட்சித் தேர்தல் களம் இப்போதே விறுவிறுப்படைந்து விட்டது என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.

உள்ளாட்சித் தேர்தல்

12 மாநகராட்சியில் 919 கவுன்சிலர் பதவிகள், 124 நகராட்சிகளில் 3,613 கவுன்சிலர்கள், 12,534 சிற்றூராட்சிகளில் 99,324 சிற்றூராட்சி தலைவர் பதவிகள், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6,471 வார்டு உறுப்பினர்கள் என தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சி பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.

ஏழுமுனைப் போட்டி

உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக, பாமக, தமாகா, பாஜக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், மக்கள் நலக் கூட்டணி என ஏழு முனை போட்டி நடைபெறுகிறது.

தனியாக களம் காணும் கட்சிகள்

மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, அரசியல்கட்சிகளிடையே ஐந்து முனை போட்டி நிலவியது. மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதால் தற்போது ஏழு முனை போட்டி நடைபெறுகிறது. ஒருவேளை விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை அறிவித்தால் 6 முனைப் போட்டி உருவாகும்

அதிமுக வேட்புமனு

தேர்தலில் தனித்து களமிறங்கிய ஆளும் அதிமுக, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, 12 மாநகராட்சிகளில் 919 வார்டுக்கும், 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மறுநாளே அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கலையும் முடிந்து, அடுத்த கட்ட வேலைகளிள் ஈடுபட தொடங்கி விட்டனர்.

பாமக பட்டியல்

சட்டசபைத் தனித்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று ஆரம்பம் முதலே அறிவித்து வந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் முதல் கட்டமாக 72 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது.

திமுக வேட்பாளர் பட்டியல்

எதிர்க்கட்சியான திமுக, சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்திருந்த, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சேலம், தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சி வார்டுகளுக்கான 158 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலையும் வெளியிட்டது. இரவில் திருப்பூர், வேலூர் ஆகிய மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இரண்டாம் கட்டமாக வெளியிட்டது.

மக்கள் நலக்கூட்டணி

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணி, உள்ளாட்சித் தேர்தலையும் இணைந்தே சந்திக்கின்றன. இதையடுத்து, திருச்சி மாநகராட்சியில், நான்கு கட்சிகளுக்கும் எத்தனை, எந்தெந்த வார்டுகள் என்ற பட்டியலையும் நேற்று வெளியிட்டு விட்டது.

தேமுதிகவின் நிலை

மக்கள் நலக் கூட்டணியில் இணைந்ததால், சட்டசபைத் தேர்தலில், ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியவில்லை என்பதால், தேமுதிக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, விருப்ப மனு பெறும் வேலைகளில் இறங்கியுள்ளது. ஓசியா கூப்பிட்டா கூட ஒருத்தரும் வரலையே என்பதால் தேர்தலை புறக்கணித்து விடலாமா? என்ற யோசனையும் விஜயகாந்த் வசம் இருக்கிறதாம்.

தடுமாற்றத்தில் தமாகா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைகள் ஒதுங்குவதால் தடுமாறிய ஜி.கே.வாசன், திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று யோசித்து அறிவாலயம் பக்கம் ஒதுங்கினார். ஆனால் அங்கே வரவேற்பு கிடைக்காமல் போகவே, தனித்து போட்டி என்று அறிவித்து விருப்பமனு வாங்கி வருகிறார்.

வெற்றி யாருக்கு?

உள்ளாட்சித் தேர்தலில் தற்போது வரை ஏழு முனை போட்டி நிலவுவதால், சட்டசபை தேர்தலைவிட, இந்த தேர்தல் களம் மிகவும் பரபரப்படைந்துள்ளது. அதோடு திமுகவில் ஒதுக்கிய வார்டுகளால் அதிர்ச்சியடைந்த கூட்டணி கட்சிகள் பலவும் தனியாக களமிறங்கினால் பலமுனைப் போட்டி ஏற்படும் என்பதே உண்மை. பலமுனை போட்டியால் வெற்றியும் கடினமாகவே இருக்கும். 12 மாநகராட்சிகளிலும் மேயர் அங்கி அணிந்து செங்கோலை ஏந்தப் போவது எந்தக்கட்சி என்பதை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

English summary
The Tamilnadu in this local body election, its expected that there will be seven team competition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X