உழைக்கும் வர்க்கத்தின் இருட்டை கழுவிய சூரியன்.. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பிறந்த நாள் இன்று.

மொத்த வாழ்க்கை 29 ஆண்டுகளே. திரையுலக ஆட்சி 6 ஆண்டுகளே. படங்களின் வரிசை வெறும் 57, தான் வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய பணம் ஒரு லட்சத்து சொச்சம். இதுதான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சுவடு.

திரையுலக இசையின் அறிவுசுடர்களாக, ஜாம்பவான்களான உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் போன்றோர் நடுவே புயலாய் உள்ளே நுழைந்தவர் பட்டுக்கோட்டையார்.

மொழி சிறப்பு, காதல், வீரம், பக்தி, என்றிருந்த பாடல்களின் இடையே, புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு, போன்றவற்றினை புகுத்தி பாடல்களின் தடத்தையே மாற்றி காட்டியவர் பட்டுக்கோட்டையார்.

விரட்டிய வறுமை

விரட்டிய வறுமை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற சின்ன கிராமத்தில் ஏப்ரல் 13, 1930ல் பிறந்தார் கல்யாணசுந்தரம். வறுமையின் பிடியில் சிக்கி, விவசாயம், மாடு மேய்ப்பது, மாம்பழம் விற்பது, உப்பளத் தொழில் என செய்தும் பொருளீட்ட வழி வழியின்றி, பாடல் எழுத எண்ணி சென்னை நோக்கி ஒரு பயணம்.

பட்டிதொட்டி புகழ்

பட்டிதொட்டி புகழ்

பல இன்னல்களுக்கு பின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் 1955-ஆம் ஆண்டு வெளிவந்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் முதல் பாடல் வெளிவந்தது. "பாசவலை" என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் இவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டது. தொடர்ந்து குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதினார்

சிந்தனை சிதறல்

சிந்தனை சிதறல்

கல்யாண சுந்தரம். கம்யூனிச இயக்கத்தின் மேலிருந்த காதலால் ஒரு பக்கம் கட்சி பணி மற்றொரு பக்கம் பாடல் எழுதுவது. இவரது பாடல்கள் அனைத்தும் எளிய நடை, இனிமை, சிந்தனை சிதறல், அழகியல் நடை, கருத்துசெறிவு, உணர்ச்சி கொந்தளிப்பு, காதல் என வஞ்சனையில்லாமல் அனைத்தும் நிறைந்தே தென்பட்டன. தெருக்களிலும் திண்ணைகளிலும் வாசிக்கப்பட்டன-நேசிக்கப்பட்டன.

நான்காவது நாற்காலி

நான்காவது நாற்காலி

மக்கள் திலகம் எம்ஜிஆர் நாயகனாக உருவெடுக்க காரணமாக இருந்தது பட்டுக்கோட்டையார்தான் என்று அவரே சொல்லியிருக்கிறார். தன்னுடைய நாற்காலியில் ஒருகால் பட்டுக்கோட்டை என்று எம்ஜிஆர் அடிக்கடி சொல்வது உண்டாம்.

'உழைப்பின் மேன்மை சொன்ன பாடல்,"காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்'.

மூட நம்பிக்கைக்கு எதிராக பறைசாற்றிய பாடல், "வேப்பமர உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க... வேலயற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பிவிடதே - நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே"

அன்றே அம்பலம்

அன்றே அம்பலம்

மேடு பள்ளமற்ற சமுதாயம் உருவாக செதுக்கப்பட்டதே, "வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா-தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா-தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" இன்றுவரை சமுதாயத்திற்கு பொருந்தி போககூடிய பாடல், ‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'

தனிமனித நம்பிக்கை

தனிமனித நம்பிக்கை

சமுதாய அவலத்தின் செவிற்றில் ஓங்கி அறைய, "குறுக்குவழியில் வாழ்வுதேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா-இதயம் திருந்த மருந்து சொல்லடா". தனி மனித தன்னம்பிக்கையை உயர்த்தி பிடிக்க, "வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே!' -

சாந்தது பாட்டுக்கோட்டை

சாந்தது பாட்டுக்கோட்டை

சில்லறை விமர்சனங்களில் சிக்காத இந்த கலைஞனின் வாழ்வு இளமையிலேயே முடிவுக்கு வந்தது. மூளை இரத்தக்குழாய் வெடித்துச் சிதறியதால் தனது 29 வயதிலேயே காலமானார். பாவேந்தர் பாரதிதாசன் முதல் கண்ணதாசன் வரை அனைவராலும் நேசிக்கப்பட்டார் கல்யாணசுந்தரம். அதனால்தான் அவர் மறைந்தபோது, 'பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பாட்டுக் கோட்டையே சாய்ந்ததம்மா!' என்று கண்ணதாசன் உருக்கமாக பாடினார்.

இருட்டை கழுவிய சூரியன்

இருட்டை கழுவிய சூரியன்

தன்னுடைய எழுத்தைபோலவே வாழ்ந்து முடித்தவர் கல்யாணசுந்தரம். உழைக்கும் வர்க்கத்தின் ஆசைகளையும் ஆவேசத்தையும், ஆதங்கத்தையும் பாடல்வரிகள் மூலம் எழுதித் தீர்த்தான் இந்த அலங்காரமற்ற மனிதன். குறுகிய காலமே வாழ்ந்தாலும் மகாகவி பாரதியாருக்கு பிறகு சமூக அக்கறை மிகுந்த பாடல்களை எழுதியதோடு அதை பாமரன் மனதிலும் பதியவைத்தான் இந்த பாவலன். சமுதாய இருட்டை கழுவிய இந்த சூரியனின் பாடல்கள் எல்லா காலங்களும் பொருந்தக்கூடிய ஒன்றே என்தை தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றியோடு நினைத்து பார்ப்பது அவசியம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Pattukottai Kalyana Sundaram is an excellent Tamil scholar, thinker and songwriter. His specialty is to sing the social reforms in simple Tamil. His songs are nationalized. He has learned the problems of proletarian life through his songs. The Tamil community must remember his songs that are passing over time.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற