For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குழந்தைகளுக்கு பணத்தை விட நேரத்தை செலவிடுங்கள்- பெற்றோர்களுக்கு ஹைகோர்ட் அறிவுரை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு பண செலவு செய்வதை விட, நேரத்தை செலவு செய்வது அதிகமாக இருக்கவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரகாஷ் என்ற திருமுருகன், 22 என்பவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், மைனர் பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் கடந்த 84 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

Spend more time with your kids, HC judge

இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் 17 வயது மைனர் சிறுமியை காதலித்துள்ளார். பின்னர் அவரை கடத்திச் சென்று உடல் உறவும் கொண்டுள்ளார் என்று வாதிட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

மனுதாரர் வக்கீல் தன் வாதத்தில், 'மனுதாரர் ஒரு அப்பாவி. அந்த சிறுமி தான் மனுதாரரை அழைத்துக் கொண்டு ஓடி விட்டார்' என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு :

கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் விரும்பியே பிரகாசுடன் சென்றதாக கூறியுள்ளார். மேலும், தன் வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதால் தன்னை அழைத்து செல்லவேண்டும் என்றும் இல்லையென்றால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துக்கொள்வேன் என்று பிரகாசை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

தற்போது பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த சட்டம், பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகள், சிறுமிகளை பாதுகாக்கத்தான் இயற்றப்பட்டது. ஆனால், சங்கடமான வி‌ஷயம் என்வென்றால், 12 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள், ஒரு ஈர்ப்பினால் தன் ஆண் நண்பர்களுடன் ஓடுவதும், அவர்களை போலீசார் தேடி கண்டுபிடிப்பதும் வழக்கமான சம்பவங்களாக நடந்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்களால் அந்த சிறுமிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்த சிறுமியுடன் சென்ற அந்த பையனும் சட்டத்தினால் பாதிக்கப்படுகிறான். தற்போது இந்த வழக்கை பார்க்கும்போது, அந்த சிறுமியின் வற்புறுத்தலால் தான் மனுதாரர் அவரை அழைத்து சென்றுள்ளார். ஆனால், தற்போது அவர் 84 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார்.

இந்து திருமணச் சட்டத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண வயதை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வயது வருவதற்கு முன்பே, டீன்ஏஜ் வயதுள்ளவர்கள் ஓடிபோய் திருமணம் செய்துக்கொள்கின்றனர். அவ்வாறு செய்யப்படும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது. ஆனால், இப்படி திருமணம் செய்துக்கொள்ளும் குழந்தைகளினால், அவர்களது பெற்றோருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயர் சீரழிந்து விடுகிறது.

அதேநேரம், பெண்ணின் திருமண வயதை 21ஆகவும், ஆணின் திருமண வயது 25ஆகவும் உயர்த்தவேண்டும் என்று பலர் கோரிக்கை வைக்கின்றனர். இவ்வாறு வயதை அதிகரிப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

திருமண வயதை எட்டுவதற்கு முன்பு திருமணத்தை செய்து கொள்வதற்கு காரணம் ஊடகம் தான். ஊடகம் என்பது நல்லதையும் போதிக்கிறது. கெட்டதையும் போதிக்கிறது. சினிமா படங்களில், மைனர் பையன், பள்ளி செல்லும் சிறுமிகளுடன் காதல் வயப்பட்டு ஓடும் காட்சிகள் வருகின்றன. இதை பார்த்து பல சிறுமிகள் காதலனுடன் ஓடி விடுகின்றனர். பொதுவாக நல்லதையும், கெட்டதையும் அந்த சிறுவயதில் பிரித்து பார்க்கும் பக்குவம் அவர்களிடம் இல்லை. கெட்டவை எளிதாக மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், அந்த கெட்டவைக்கு அவர்களே இரையாகி விடுகின்றனர்.

ஒருவேளை காதலனை பிரிந்து பெற்றோரிடம் அந்த பெண்கள் திரும்பி வந்தால், அந்த காதலன் தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. அதாவது அந்த பெண் அனுப்பிய கைப்பேசி குறுஞ்செய்திகள், ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்டங்கள் காட்டி காதலன் மிரட்டுகிறான். இப்படி மிரட்டுவதற்காகவே ஒவ்வொரு காதலனும், தன் காதலியுடன் உள்ள தொடர்பை ஆவணப்படுத்தி பாதுகாக்கிறான்.

சமுதாயத்தில் நடக்கும் இந்த அவலங்களை பார்க்கும் போது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நல்ல வி‌ஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். பல குடும்பங்களில், குழந்தைகள் தங்களது விருப்பத்தையும், எண்ணத்தையும் பயத்தின் காரணமாக பெற்றோரிடம் தெரிவிக்காமல் உள்ளனர். அதனால் தங்கள் குழந்தையுடன் நட்புடன் பெற்றோர் பழகினால் தான், அவர்கள் தங்களது எண்ண ஓட்டத்தை தைரியமாக பகிர்ந்து கொள்வார்கள்.

எந்த வி‌ஷயத்தையும் மறைக்க மாட்டார்கள். தாயும், தகப்பனும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அவர்களால் தங்களது குழந்தைகளுடன் நீண்ட நேரம் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல இப்போதுள்ள குடும்ப சூழ்நிலையில், தாத்தா, பாட்டிகளை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுகின்றனர். அதனால் குழந்தைகளை பார்க்க குடும்பத்தில் யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது.

எனவே, தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர்கள் நீண்ட நேரம் செலவு செய்யவேண்டும். அதாவது, குழந்தைகளுக்கு பண செலவு செய்வதை விட, நேரத்தை செலவு செய்வது அதிகமாக இருக்கவேண்டும். இந்த வழக்கில், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன் என்று நீதிபதி வைத்தியநாதன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

English summary
Madras HC judge Vaithianathan has advised the parents to spend more time with their kids.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X