சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு.. ஸ்டாலின் கண்டனம்.. போலீஸ் நடவடிக்கைக்கு கோரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், மேலும் செருப்பு வீச்சு தமிழர்கள் போற்றி பாதுகாத்து வரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை :

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் மீது சேலத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஆய்வு மாணவர் முத்துகிருஷ்ணன் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவருக்கும் வேதனை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

கட்சி சார்பற்ற முறையில் அந்த மரணத்திற்கு கண்டனத்தை அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். சி.பி.ஐ. விசாரணை மூலம் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறேன்.

முத்துகிருஷ்ணன் பெற்றோருக்கு ஆறுதல்

முத்துகிருஷ்ணன் பெற்றோருக்கு ஆறுதல்

இந்நிலையில் அந்த மாணவரின் உடல் சேலத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்று மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மரணச் செய்தி மக்களுக்கும், மாணவரின் குடும்பத்தினருக்கும் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தி இருக்கின்ற நேரத்தில் கட்சி வித்தியாசமின்றி அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டு மாணவனை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

செருப்பு வீசியதற்கு கண்டனம்

செருப்பு வீசியதற்கு கண்டனம்

மாணவர் முத்துகிருஷ்ணன் மரணத்தில் சேலம் மாநகரம் மட்டுமின்றி தமிழக மாணவர் சமுதாயமே சோகத்தில் மூழ்கியிருக்கின்ற இந்த நேரத்தில், சில சமூக விரோதிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் உட்புகுந்து அரசியல் தலைவர்களை குறி வைப்பதையும், குறிப்பாக மத்திய இணையமைச்சர் மீது காலணி வீசி ஒரு அநாகரீகமான சம்பவத்தை நிகழ்த்தி, தமிழகத்தின் பெருமையை சீர்குலைக்க முனைவதை நாகரீக சமுதாயத்தில் இருக்கும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக இந்த செயல்கள் தமிழர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல.

காவல்துறை மெத்தனம்

காவல்துறை மெத்தனம்

மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் இது மாதிரியொரு சம்பவம் நடப்பதற்கு எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறையின் திறமை மெல்ல மெல்ல சாகடிக்கப்படுகிறதோ என்ற அச்சம், ஸ்காட்லான்டு யார்டு காவல்துறைக்கு இணையான காவல்துறையைப் பார்த்த என் போன்றோருக்கு ஏற்படுகிறது.

காவல்துறை நடவடிக்கை தேவை

காவல்துறை நடவடிக்கை தேவை

ஆகவே மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடக்காதவாறு தடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்கும் டி.ஜி.பி. அவர்களுக்கு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President M.K. Stalin on Friday condemning the throwing of slipper at Union Minister of State for Shipping Pon Radhakrishnan urged the police to take severe action against the culprit.
Please Wait while comments are loading...