For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகளுக்கு நேரும் அடக்குமுறைகளை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: விவசாயிகளுக்கு நேரும் அவமானங்களையும், அடக்குமுறைகளையும் தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளது:

அரியலூர் அருகில் உள்ள ஒரத்தூர் கிராமத்தில் டிராக்டரை ஜப்தி செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நிதி நிறுவனத்தினரும், காவல்துறை அதிகாரிகளும் கைகோர்த்துக் கொண்டு தஞ்சையில் விவசாயி பாலன் கடுமையாக தாக்கப்பட்ட ஈரம் காய்வதற்கு முன்பே விவசாயி அழகர் தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.

stalin facebook status about farmer's attack

"தடியெடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்கள்" என்பது போல் வங்கி மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் இப்படி விவசாயிகளை கொடுமைப் படுத்தவதை காவல்துறை அதிகாரிகளும், அதிமுக அரசும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பது அதை விட கவலைக்குரியது.

தமிழகத்தில் 2014 ஆம் வருடத்தில் மட்டும் 895 விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். பயிர் கடன் முறையாக வழங்காமலும்,விவசாயத்திற்கு ஏற்ற நீர் ஆதாரங்களை மணல் கொள்ளை மூலம் அழித்தும், மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்காமலும், விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்காமலும் விவசாயிகளை வறுமையின் விளிம்பிற்கே அதிமுக அரசு கொண்டு போய் நிறுத்தி விட்டது.

இந்த மோசமான சூழலால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படித் தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய உற்பத்தி விலை கிடைக்கவும், விவசாயத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும் அதிமுக அரசு கடந்த ஐந்து வருடத்தில் முற்றிலும் தவறி விட்டது. காவிரி டெல்டா பகுதிகளிலேயே கூட வாய்க்கால்களை தூர் வாரி சரிவர பராமரிக்கத் தவறி விட்டது.

கடந்த ஐந்து வருடத்தில் விவசாயிகளின் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எதையும் காணுவதற்கு அதிமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதிலிருந்தே இந்த அரசு எந்த அளவிற்கு விவசாயிகளின் விரோத அரசாகத் திகழ்கிறது என்பது தெரிய வருகிறது.

இத் தருணத்தில் நிதி நிறுவங்களும், வங்கிகளும் விவசாயிகள் மீது ஜப்தி போன்ற நடவடிக்கைகள் மூலம் டிராக்டர்களைப் பறிப்பதும், விவசாயிகளை காவல்துறையை வைத்து மிரட்டி சித்ரவதை செய்வதும் கடும் கண்டத்திற்குரியது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் விவசாயிகளை துன்புறுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு நேரும் இது போன்ற அவமானங்களை, அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK treasurer MK Stalin facebook status about farmer's attack
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X