மோடி மீண்டும் பிரதமர் ஆனால் என்னாகும் தெரியுமா? மதவெறி தலைவிரித்து ஆடும்.. ஸ்டாலின் பரபர பிரச்சாரம்!
சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமர் ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது, நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும், மதக்கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத் தியாகிகளாகப் போற்றுவார்கள் எனப் பேசியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரக் களத்தில் அனல் பறக்கிறது. நேற்று இரவு சிதம்பரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது என ஆக்ரோஷமாகப் பேசினார்.

தலைகுனிந்து நிற்கிறார்கள்: பாஜகவை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சில நாட்களுக்கு முன்பு வரை, விமர்சித்து பேசியவர்கள் இப்போது சேர்ந்திருக்கிறார்கள்! மனசாட்சி உள்ள பா.ம.கவின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையுடன் தலைகுனிந்து நிற்கிறார்கள்! பா.ஜ.க - பா.ம.க. கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி! ஆனால், நாங்கள் உருவாக்கி இருக்கும், இந்தியா கூட்டணி கொள்கைக் கூட்டணி. தி.மு.க.வும் சகோதரர் திருமாவும் பேசும் சமூகநீதிக் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது! சகோதரர் ராகுல் காந்தி என்ன அறிவித்திருக்கிறார்?
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ஒன்றியத்தில் இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காடு என்பதை உயர்த்தச் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
SC, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு ஆக்கப்படும்.
முக்கியமாக, இதே அரியலூரைச் சேர்ந்த அனிதாவை "நீட்"-டுக்குப் பறிகொடுத்தோமே, பல தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரை பலி வாங்கிக்கொண்டு இருந்த நீட் தேர்வு 'கட்டாயமல்ல' என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்!
இதுமட்டுமல்ல, காங்கிரஸ் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளில் இன்னும் முக்கியமானவற்றைச் சொல்ல வேண்டும் என்றால், பா.ஜ.க.வின் ஜி.எஸ்.டி. சட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
திட்டக்குழு மீண்டும் கொண்டு வரப்படும்.
பொதுப்பட்டியலில் இருக்கும் அதிகாரங்களை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற ஆய்வு செய்யப்படும்.
விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படாது.
விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் தரப்படும்.
ஒன்றிய அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம் வழங்கப்படும்.
புதிய கல்விக் கொள்கை, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி திருத்தி அமைக்கப்படும்.
இப்படி, ஜூன்-4 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா கூட்டணி ஆட்சியில் இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறப் இருக்கிறது!
திமுக சொல்கிறது.. காங்கிரஸ் வாக்குறுதி கொடுக்கிறது: இந்தியாவின் தென்கோடி முனையில் இருக்கும் தி.மு.க சொல்வதை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறது! இதுதான் சமூக நீதிக் கூட்டணி! ஏன் என்றால், சமூகநீதி இந்தியாதான் இன்றைய உடனடித் தேவை! அதை அடைய, அமைதியான இந்தியா, வளர்ச்சியை நோக்கிய இந்தியா உருவாக தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்! தனி நபர்களாக நீங்கள் வாக்களித்தால் மட்டும் போதாது! மக்களிடம் நீங்கள் சென்று பா.ஜ.க ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும்!
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்: பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்து மோடி பிரதமர் ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது! நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது! அரசியலமைப்புச் சட்டம் அடியோடு மாற்றப்படும்! தேர்தல் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும்! மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படும்! ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்தப்படும்! நாடெங்கும் மதவெறி தலைவிரித்தாடும்! மதக்கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைத் தேசத் தியாகிகளாகப் போற்றுவார்கள்! அனைத்து மக்களும் சகோதர - சகோதரிகளாக வாழ்கிறோமே - அப்படிப்பட்ட நம்மைப் பிளவுப்படுத்துவார்கள்! வேற்றுமைகளும் - அடிமைத்தனமும் நிறைந்த சமூகத்தை மீண்டும் உருவாக்குவார்கள்! நம்முடைய குழந்தைகளின் படிப்பைப் பறிப்பார்கள்! மக்களைச் சிந்திக்க விடமாட்டார்கள்! பொய்களையே வரலாறாக எழுதுவார்கள்! இஸ்லாமிய - கிறிஸ்துவ மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி - அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பார்கள்.
ஒரே நாடு - ஒரே கலாச்சாரம் - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே தேர்தல் - ஒரே ரேஷன் கார்டு - ஒரே உணவு - ஒரே அரசு - ஒரே கட்சி - ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள்! பா.ஜ.க.வின் திட்டங்கள் மிக மிக மோசமானது! அதைவிட ஆபத்தானது... மறுபடியும் நம்முடைய தமிழ்நாட்டின் மீது மாபெரும் பண்பாட்டுத் தாக்குதல் நடத்துவார்கள்... ஆட்சி நடத்துவது தில்லியா? இல்லை, நாக்பூரா? என்று சந்தேகம் வந்துவிடும். பதவியில் இருக்கிறவர் பிரதமரா? இல்லை, ஆர்.எஸ்.எஸ். தலைவரா? என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்! இந்த ஆபத்தை மக்கள் உணர்ந்திடக் கூடாது என்றுதான் ஊழல் - குடும்ப அரசியல் - இப்போது கச்சத்தீவு என்று திசைதிருப்புகிறார்.
அம்பலம்: ஊழல் பற்றிப் பேசும் பிரதமர் மோடியைப் பற்றி, இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த ஒரு பத்திரிகை கட்டுரை சொல்லியதே! ஊழல் வழக்குகளில் சிக்கி, பா.ஜ.க.வில் சேர்ந்தவர்களை எப்படி மோடி காப்பாற்றினார் என்று பட்டியல் போட்டு மாநிலம் வாரியாக தெளிவாக - விரிவாக வெளியிட்டு இருந்தார்களே!
பிரதமர் மோடி இப்போது அடிக்கடி சொல்கிறாரே, கேரண்டி... கேரண்டி என்று, அது எதற்குத் தெரியுமா? அவர் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறார்! "Made by BJP" அந்த வாஷிங் மிஷின் மூலமாக, ஊழல் செய்த அரசியல்வாதிகள் பா.ஜ.கவுக்குள் சென்றால், மீண்டும் வரும்போது, ஊழல் கறை எல்லாம் சென்று, வழக்கு எல்லாம் வாபஸ் ஆகி, Clean ஆகிவிடுவார்கள்! அதற்குதான் மோடி கேரண்டி கேரண்டி என்று கத்துகிறார்?
பத்தாண்டு ஆட்சியில், பா.ஜ.க ஊழல்கள் ஒன்றா? இரண்டா? அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான். உலக நாடுகள் மத்தியில், இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் தேர்தல் பத்திர ஊழல்! கடந்த 5 ஆண்டுகளில் அமலாத்துறை - வருமான வரித்துறை - சிபிஐ இவர்கள் கூட்டணி அமைப்புகள் மூலமாக ரெய்டுக்கு அனுப்புவது, அதற்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களாக வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு மெகா வசூல் நடந்ததில்லை!
ஊழல் ரகசியங்கள் வெளியே வரும்: அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கை வந்ததே! 7 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. ஆதாரத்தோடு அறிக்கை வெளியிட்டது! அந்த அறிக்கை பற்றி, மத்திய அரசு, வாயையே திறக்கவில்லை!
தேர்தல் பத்திரம் போன்று மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் 'பி.எம். கேர்ஸ் ஃபண்ட்' என்று பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! இப்படி எல்லா ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்! அதேபோன்று, ரஃபேல் ஊழல் ரகசியமும் நிச்சயமாக வெளியே வரும்!
அதனால், பிரதமர் மோடியின் திசை திருப்பும் நாடகத்தை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை! மக்களின் நம்பிக்கை இந்தியா கூட்டணி மீதுதான் இருக்கிறது! நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!" எனப் பேசினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications