For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த இல்லம், முதியோர் பாஸ்.. நான் கேள்வி எழுப்பிய பின் தொடங்கி வைக்கிறாரே ஜெ- சாடும் ஸ்டாலின்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முதியோர் இலவச பஸ் பாஸ், 20 லிட்டர் குடிநீர், உங்கள் சொந்த இல்லம் ஆகிய திட்டங்கள் குறித்து தாம் கேள்வி எழுப்பிய பின்னரே காணொலி காட்சிகள் மூலம் ஜெயலலிதா தொடங்கி வைப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் எழுதியுள்ளதாவது:

Stalin slams Jayalalithaa

காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் "உங்கள் சொந்த இல்லம்" என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கி மீண்டும் ஒரு காணொலி காட்சியை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. 459.97 கோடி ரூபாயில் 2673 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த பயனாளிகளில் 14 பேருக்கு சாவிகளை வழங்கியிருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க "வாக்குறுதிகளை" நிறைவேற்றி விட்டது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்க இப்படி பகீரத முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

"உங்கள் சொந்த இல்லம்" திட்டம் பற்றி 24.4.2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா காவல்துறை மான்ய கோரிக்கையில் அறிவித்தார். பிறகு 3.5.2012 அன்று வெளியிட்ட 110 அறிக்கையில் இத்திட்டத்தின் கீழ் காவலர்கள் முதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பதவியில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் 36,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.

இதற்கு நன்றி தெரிவித்து 4.5.2012 அன்றே அப்போது டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் எல்லாம் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, "உங்கள் சொந்த இல்லம்" விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் திடீரென்று ஒரு நோட்டீஸ் போனது. அந்த நோட்டீஸில் ஏற்கனவே செலுத்திய தொகையிலிருந்து மேலும் அதிகமாக 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொருவரும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கெடுபிடி செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே மார்ச் 1- ஆம் தேதிக்குள் வீடுகளின் சாவிகள் வழங்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் காவல்துறை நண்பர்கள் மூலம் எனக்கு கிடைத்த நிலையில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உறுதி முழக்கப் பேரணியில் "உங்கள் சொந்த இல்லம்" திட்டம் என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினேன். அதன் பிறகு அவசர அவசரமாக 14 பேருக்கு வீட்டுச் சாவிகளை நேற்றைய தினம் வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் மீதியுள்ள 2659 பேருக்கு இன்னும் வீடுகள் ஒப்படைக்கப்படவும் இல்லை. சாவிகள் வழங்கப்படவும் இல்லை.

இது ஒரு புறமிருக்க, 36,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று 110 அறிவிப்பு செய்து விட்டு தற்போது 2673 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 14 வீடுகளுக்கு மட்டுமே சாவிகளை கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 33,327 வீடுகள் தமிழகத்தில் வேறு எங்கே கட்டப்பட்டுள்ளது என்ற விவரத்தை இன்றைய செய்தி குறிப்பிலும் காணவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூறவில்லை. கொடுத்த வாக்குறுதி 36,000 வீடுகள். இதுவரை வழங்கப்பட்டுள்ள வீடுகளோ 14 என்றால், இப்படியொரு "காணொலி காட்சியை" தேர்தலை மனதில் வைத்து ஜெயலலிதா நடத்தியுள்ளார் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

"முதியோர் இலவச பஸ் பாஸ்", "வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர்" "உங்கள் சொந்த இல்லம்" திட்டம் ஆகிய அனைத்து அறிவிப்புகள் பற்றியுமே நான் கேள்வி எழுப்பிய பிறகே அவசர அவசரமாக ஒப்புக்காக ஒரு "காணொலி காட்சியை" நடத்தி, திட்டங்களை முடித்து விட்டது போல் கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

தேர்தல் வாக்குறுதிகளும், 110 அறிவிப்புகளும் "வெற்று அறிவிப்புகளாகவே" இருக்கின்றன என்பதை இது போன்ற அவசர "காணொலி காட்சிகள்" மக்களுக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன!

"புலி அடிக்கும் முன்பே கிலி அடிக்கும்" என்பதைப் போல் ஐந்து வருடத்திற்கு முன்பு ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற மக்களை சந்திக்கும் "தேர்தல் கிலி" பிடித்து அதிமுக அரசு செயல்படுகிறது. எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா புரிந்து கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

English summary
DMK Treasurer MK Stalin slammed Tamilnadu CM Jayalalithaa on her video conference programmes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X